Sunday, 28 February 2021
தமிழ்ப்பள்ளிகளின் சாதனைகள்
Saturday, 27 February 2021
இதனை எப்படி எதிர்கொள்வார்!
Friday, 26 February 2021
ஏன் மறக்கடிக்கப்பட்டார்?
நேற்று தமிழ் மலர் நாளிதழில் ":தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்கிற திருமதி சரஸ்வதி கந்தசாமியின் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. படித்ததே அதிர்ஷ்டம் என்று தான் சொல்லுவேன்.
இப்போது நடைமுறையில் இருக்கும், நாம் எழுதும் தமிழ் எழுத்து முறை, என்பது பெரியார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதாகத் தொடந்து திராவிடக் கட்சிகள் நமது காதுகளில் ஓதிக் கொண்டே வந்திருக்கின்றன. அதாவது தமிழ் எழுத்துச் சீரமைப்பு என்பது கூட தமிழர்கள் செய்தது அல்ல எங்கள் "நாயக்கர்" செய்தது தான் என்று தமிழர்களை மட்டம் தட்டியே வந்திருக்கின்றனர்.
ஆனால் இந்த மாற்றத்திற்குக் காரணமானவர் சொ.முருகப்பா என்கிற தமிழறிஞர் என்பது இப்போது தான் புரிகிறது.
தமிழறிஞர் சொ.முருகப்பா காரைக்குடியைச் சேர்ந்தவர். 1930 களில் குமரன் என்கிற இதழை நடத்தி வந்தார். அந்த காலக்கட்டத்தில் தான் அவர் தமிழ் வரிவடிவங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி வாசகர்களின் கருத்தையும் கேட்டறிந்தார்.
சொ.முருகப்பா அறிமுகப்படுத்திய அந்த வரிவடிவங்களைத்தான் பின்னர் பெரியார் தனது குடியரசு, விடுதலை இதழ்களில் 1935 - ம் ஆண்டுக்குப் பின்னர் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.
அதன் பின்னர் பெரியார் நூற்றாண்டு விழாவில் தமிழக அரசு அந்த வரிவடிவங்களை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது.
ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாற்றத்திற்குக் காரணமானவர் ஒரு தமிழர். இது நாள்வரை எந்த திராவிடக் கட்சியும் அவரது பெயரை உச்சரிப்பதே அவமானம் என்று ஒதுக்கிவிட்டு அது பெரியார் தமிழ் என்பதாகக் கூறி வந்தது.
இது தான் திராவிடம் என்பதை மறந்து விடாதீர்கள்! தமிழர்கள் எதையும் செய்ய இலாயக்கில்லாதவர்கள் என்று இன்றுவரை கூறிவருவது தான் திராவிடம்!
அவர்களைத் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு ஆடாதீர்கள்!
தமிழின் நவீன வரிவடிவத்தின் தந்தை என போற்றப்பட வேண்டிய தமிழறிஞர் சொ. முருகப்பா திராவிடக் கட்சிகளால் மறக்கடிக்கப்பட்டதற்கு ஒரே காரணம் அவர் ஒரு தமிழர்! அதனைத் தவிர வேறு காரணங்கள் இல்லை!
Thursday, 25 February 2021
வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்?
ஒரு சில நாள்களாக ஓடிக் கொண்டிருக்கும் பிரச்சனை."உபகார சம்பளத்திட்டத்தில் தமிழ்த் துறைக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்" என்பது நமக்குத் தெரியும்.
இப்போது கல்வி அமைச்சே இது பற்றி ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறது. குறிப்பாகச் சொன்னால் இடை நிலைப்பள்ளிகளில் "அளவுக்கு அதிகமான!" தமிழ் ஆசிரியர்கள் இருப்பதால் இந்த ஆண்டு உதவித்திட்டம் தேவைப்படவில்லை என்பது தான் அதன் சுருக்கம்.
உண்மையில் இது பற்றி பேசி எனது அரைகுறை அறிவை வெளிப்படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன். எனக்கு முழுமையாக தெரியாத ஒரு பிரச்சனை. இது கல்வியாளர்கள் பிரச்சனை. அவர்கள் தான் இதனை முழுமையாக அறிந்தவர்கள்.
ஆனாலும் அரசாங்கத்தில் பணிபுரிவோர் இப்போது வாயைத் திறக்க மாட்டார்கள் நமக்கு ஏன் வம்பு என்பது தான் காரணம். வெளியே கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் சொன்னால் தான் உண்டு. அவர்களிடமிருந்து என்ன பதில் வருகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழுக்கு மறுப்பு என்னும் போது மற்றவர்களைப் போலவே எனக்கும் கோபம் வருகிறது! இடைநிலைப் பள்ளிகளில் அளவுக்கு அதிகமான ஆசிரியர்கள் என்னும் போது நம்புகிற மாதிரி இல்லை என்பதும் தெரிகிறது. அவ்வளவு தாராளமாகவா கல்வி அமைச்சு நடந்து கொள்ளுகிறது என்கிற கேள்வியும் எழுகிறது.
ஒரு வேளை இப்போது பக்காத்தான் ஆட்சி நடந்து கொண்டிருந்தால் அதனை நம்பலாம். இப்போது பெரிக்காத்தான் ஆட்சி. பெரிக்காத்தான் ஆட்சியில் பாஸ் கட்சி அங்கம் வகிக்கிறது என்கிற உண்மையும் நமக்குத் தெரியும்.
எப்படியோ மேலும் இது பற்றி செய்திகள் வரும். வராமலா போகும்! அதுவரை பொறுமையைக் கடைப்பிடிப்போம்!
Wednesday, 24 February 2021
குரல்வளை நெரிக்கப்படுகிறது!
Tuesday, 23 February 2021
ஏன் இந்த புனைவுகள்?
சமீப காலமாக, தமிழ்ப்பள்ளி பாடப் புத்தகத்தில் பெரியார் ஈ.வே.ரா. இந்து சமயத்தைக் கேவலப்படுத்தும் விதமாக இரண்டு படங்கள் இடம் பெற்றிருப்பதாக சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் தீவிரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இல்லாத ஒரு செய்தியை இருப்பது போல காட்டுவதில் வலைதளங்கள் பெரும் பங்காற்றுகின்றன என்பது உண்மையிலும் உண்மை!
இந்த செய்தியின் மூலம் என்ன, எங்கிருந்து இந்த செய்தி வெளியாகின்றது என்று கண்டுபிடிப்பதில் அப்படி ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல.
எனக்குத் தெரிந்த வரை இந்த செய்தியை முதன் முதலாக நாளிதழ்களில் கொண்டு வந்தவர் மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன் ஷான். அவர் இந்த செய்தியை நேரடியாக தமிழ்ப்பள்ளிகளுக்குச் சென்று எடுத்தாரா அல்லது அவரும் இந்த வலைதளங்களிலிருந்து எடுத்தாரா, தெரியவில்லை! வலைதளங்களில் வருகின்ற செய்திகள் பெரும்பாலும் உண்மைகள் இருப்பதில்லை! அது அவருக்கே தெரியும்!
இந்த நேரத்தில் நம்மிடம் இன்னொரு கேள்வியும் உண்டு. இந்த செய்திகள் ஏதோ திட்டம் போட்டு, தமிழ்ப்பள்ளிகளுக்கு எதிராக, வெளியாக்கப்படுகின்றதோ என்கிற ஓர் ஐயத்தையும் ஏற்படுத்துகிறது.
பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள் என்கிற பிரச்சாரம் பல தளங்களில் பெற்றோர்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது. இந்த நேரத்தில் இப்படி ஒரு செய்தி - இதுவும் ஒரு வகை பிரச்சாரமே - வெளியாவதால் நமது பிரச்சாரத்தை பலவீனமாக்குகிறது. பெற்றோர்களுக்குத் தமிழ்ப்பள்ளிகளின் மீது நம்பகத்தன்மையைக் குறைக்கிறது. தமிழ்ப்பள்ளிகளில் இந்து மத எதிர்ப்புப் பிராச்சாரமா என்பதாகவும் பெற்றோர்களிடையே பேசும் நிலையை உருவாக்குகிறது.
யாராக இருந்தாலும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நாட்டின் முதன்மை கோட்பாடே "இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்". அப்படியிருக்க அதனை மீற கல்வி அமைச்சில் யாருக்கும் துணிவு உண்டா, என்ன?
இந்து சங்கத் தலைவரும் அதனை அறிந்தவர் தான். அவரே இது போன்ற விஷமத்தனமான அறிக்கைகளை வெளியிடக் கூடாது. அதிலும் இப்போது தான் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க நினைக்கும் பெற்றோர்களுக்கு அது ஒரு பயமுறுத்தலாகவே இருக்கும்.
இதனை அவர் தெரிந்து தான் செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அதனை அவர் நேரடியாகச் சொல்லாவிட்டாலும் அது, பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பாதீர்கள் என்று சொல்லுவதற்குச் சமம். இல்லாவிட்டால் இப்போது ஏன் அந்த பிரச்சனையைக் கொண்டு வருகிறார்?
எப்படி இருந்தாலும் டத்தோ மோகன் ஷான் இந்த நேரத்தில் இப்படி ஒரு அறிக்கை விடுவது சரியான செயல் அல்ல. அது தமிழர்களுக்கு எதிராக - தமிழ்ப்பள்ளிகளுக்கு எதிராக - அவரின் நிலைப்பாடு அல்லது மலேசிய இந்து சங்கத்தின் நிலைப்பாடு என்பதாகவே எடுத்துக் கொள்ளப்படும்.
ஜனநாயகம் மடிந்து விட்டதா?
ஜனநாயகம் மடிந்து விட்டது, ஜனநாயகம் செத்து விட்டது, ஜனநாயக ஆட்சி இல்லை - என்று இப்படியாகப் பல அரசியல்வாதிகள் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்!
ஆட்சி மாற்றம் எப்போது கொல்லைப்புற வழியாக வந்ததோ அன்றிலிருந்தே எதிர்ப்புக் குரல்கள் கிளம்பத் தொடங்கிவிட்டன. அப்போது 'கப்சிப்' என்று இருந்தவர்கள் கூட இப்போது ஜனநாயகத்தைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள்! இப்போதெல்லாம் யார் எப்போது ஜனநாயகத்தைப் பற்றி பேசுவார்கள் என்பது புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரே காரணம் தான்! ஏன், நாடாளுமன்றம் கூட்டப்படவில்லை என்பது தான் இந்த ஜனநாயகப் புலம்பலுக்குக் காரணம். நாடாளுமன்றத்தைக் கூட்டினால் கொல்லைப்புற ஆட்சி கவிழ்ந்து விடும் என்பது அனைவருக்கும் தெரியும்! கவிழ வேண்டும் என்று பெரும்பாலும் நினைக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் "இது தான் நல்ல நேரம்!" என்று பதவியில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள்! அவர்கள் வாய் திறப்பதில்லை!
இன்னொரு புறம் ஆட்சி கவிழ்வதை எதிர்ப்பவர்கள். இவர்களோ ஆட்சி மீண்டும் முந்தைய பக்காத்தான் கட்சியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லுபவர்கள். நாட்டிற்கு நல்லதொரு ஆட்சி அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆட்சி கவிழ்ந்து மீண்டும் தேர்தல் என்பதெல்லாம் அனாவசிய செலவு. பலவித பொருளாதார சிக்கல்கள்களை நாடு எதிர்நோக்கும் போது திடீர் தேர்தல் தேவை இல்லை என்று நினைப்பதில் தவறில்லை.
ஆனால் இது அரசியல். இலாப நஷ்டம் பார்க்காமல் அரசியல்வாதிகள் எதையும் பேசுவதில்லை. அது அவரகளின் இயல்பு. அம்னோ அரசியல்வாதிகள் தாங்கள் நினைத்தது நடக்கவில்லை என்பதால் இப்போது ஜனநாயகத்தைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்!
ஆனால் இவர்களில்லெல்லாம் மிகவும் அரசியல் சாணக்கியர் என்றால் அது பிரதமர் முகைதீன் யாசின் தான்! கோவிட்-19 தொற்றை மிகவும் சாமர்த்தியமாக தனது பதவியை நீட்டித்துக் கொள்ள பயன்படுத்திக் கொண்டார். அதனால் தான் அடுத்த பொதுத் தேர்தல் வரும் வரை கொவிட்-19 தொற்று நீடிக்கும் என்று ஆருடங்கள் சொல்லப்படுகின்றன.
இந்தியா போன்ற நாட்டில் கூட கோவிட்-19 குறைந்து வருகிறது என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஆனால் நமது நாட்டில் குறைவதில் கூட அரசியல் விளையாடுகிறது என்கிறார்கள்!
அரசியல் என்பது எத்துணை அதிகாரமிக்கதாக இருக்கிறது என்பது இப்போது நமக்குப் புரிகிறது. என்ன செய்ய> அதிகாரம் நம் கையில் இல்லையே!
செத்துவிட்ட ஜனநாயகத்தை உயிர்ப்பிப்பது நமது கையில் இல்லை. நாடாளுமன்றத்தைக் கூட்டுவது மக்கள் கையில் இல்லை. எல்லா அதிகாரங்களும் அரசியல்வாதிகள் கையில்.
ஆனால் ஒருவர்க்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு. அது தான் மாமன்னர். அவர் மனம் வைக்க வேண்டும்! பொறுத்திருப்போம்!
Monday, 22 February 2021
வயது ஒரு தடையல்ல!
திரு சல்மான் அகமட்
திரு சல்மான் அகமட் நெகிரி செம்பிலானைச் சேர்ந்தவர். வயது 65. சுற்றுப்பயணத் துறையின் முன்னாள் துணை இயக்குனர். 2012 - ம் ஆண்டு பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்.
அவரைப் பற்றி என்ன தான் விசேஷம்? இந்த ஆண்டு நெகிரி செம்பிலான் மாநிலத்தில் SPM பரிட்சை எழுதிய 645 தனியார் பள்ளி மாணவர்களில் அவரும் ஒருவர்! இதைக் கேட்பதற்கு ஒரு சில மாணவர்களுக்குக் கடுப்பாகத்தான் இருக்கும்! என்ன செய்வது? ஒரு சிலருக்கு, அதுவும் ஒரு சிலருக்குத்தான், கல்வி மீது தீராத மோகம் இருக்கும். கல்வியில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களை யாராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. அவர்களில் சல்மானும் ஒருவர்.
ஒரு காலக்கட்டத்தில் அவர் பரிட்சை எழுதும் போது அது ஆங்கிலத்தில் இருந்ததால் தனது பாதையை மாற்றி மாரா தொழில்நுடபக் கல்லுரியில் தன்னை இணைத்துக் கொண்டு தனது கல்வியைத் தொடர்ந்தார். வெற்றியும் பெற்றார்.
"அன்று நான் தவிர்த்த அந்த பரிட்சையை இன்று நான் எழுதிப் பார்க்கப் போகிறேன். கல்வி எல்லாக் காலங்களிலும் தொடர்வது தான். சாகும் வரை கல்வி தொடரும். கல்விக்கு வயது கட்டுப்பாடுகள் எல்லாம் இல்லை. தொட்டிலிருந்து கடைசி காலம் வரை கல்வி உண்டு"
தான் இப்போது பரிட்சை எழுதக் காரணம் இளைய தலைமுறை கல்வியை அலட்சியமாக நினைக்கக் கூடாது என்பதற்காகத்தான் என்கிறார் சல்மான்.
அவர் சொல்லுவதை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். எல்லாமே அனுபவம்.
நாமும் அதைத்தான் சொல்லுகிறோம். பரிட்சைக்காக படிக்க வேண்டும். பரிட்சை இல்லையென்றாலும் படிக்க வேண்டும்.
புத்தகங்கள் படிக்க வேண்டும். நாவல்கள் படிக்க வேண்டும்.நாளிதழ்கள் படிக்க வேண்டும். படிப்பு என்பது தொடர் கல்வி.
65 வயது பெரியவருக்கு இத்தனை அக்கறை இருக்கிறது என்றால் கல்வியை இடையே அறுத்துவிட்டவர்கள் இப்போதும் எப்போதும் கல்வியைத் தொடரலாமே!
கல்வி என்பது அறிவு. அதனை நமதாக்கிக் கொள்வோம்!
Sunday, 21 February 2021
இன்று தாய்மொழி தினம்
தாய்மொழி தினம் (21.2.2021)
இன்று தாய்மொழி தினம். உலகெங்கிலும் தாய்மொழி தினம் கொண்டாடப்படுகின்றது. ஒரே காரணம் எந்த மொழியானாலும் அந்த மொழி பாதுக்கப்பட வேண்டும் என்பது தான்.
தாய்மொழி பயிலுவதில் தமிழராகிய நாம் என்ன நிலையில் உள்ளோம் என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.
ஒரு சில குளறுபடிகள் இருந்தாலும் தமிழ் மொழி சீராக எல்லாக் காலங்களிலும் தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எந்த காலத்திலும் அது தொய்வு அடைந்ததில்லை.
உலகளவிலும் பெருமைப்படும் அளவிற்கு தமிழின் பயணம் தொடர்கிறது. தமிழர்கள் தங்களது மொழியை சிறப்பான முறையில் பாதுகாக்கவே செய்கின்றனர்.
நமது நாட்டைப் பொறுத்தவரை, அன்றும் சரி இன்றும் சரி, தோட்டங்களை நம்பியே தமிழ் மொழி இருந்தாலும் இன்றைய நிலையில் அதில் ஓரளவு மாற்றம் தெரிகின்றது. படித்தவர்களும் தாய்மொழி கல்வி தேவை என்பதை உணருகின்றனர். தமிழன் தமிழனாகத்தான் இருப்பான் அதில் மாற்றமில்லை! இது நாடறிந்த உண்மை!
இன்று இந்த தினத்தில் சங்கற்பம் எடுப்போம். என்றென்றும் தமிழைப் பேணிக் காப்போம்! அது போதும்!
அனைவரும் மலேசியரே!
"மலாய்க்காரர், இந்தியர், மற்றும் பிற இனததவர் போல சீனர்களும் மலேசியர்களே" என்று ஜொகூர் சுல்தான் கூறியிருப்பது அதை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி.
ஜொகூர் சுல்தான் தனது மாநில குடிமக்களைப் பார்த்து சொன்னதாக இருந்தாலும் அது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.
தனது முன்னோர்கள் 16-ம் நூற்றாண்டிலேயே சீனர்களுடனான நட்புறவை ஏற்படுத்தி கொண்டு, ஜொகூர் மாநில வளர்ச்சிக்காக அவர்களை இங்கு வரவழைத்தார்கள் என்பதாக அவர் கூறியிருக்கிறார். ஜொகூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு சீனர்களின் பங்கு அளப்பரியது அதனால் யாரும் அவர்களை வந்தேறிகள் என்று கூறுவதை தான் விரும்பவில்லை என்பதாக அவர் சீனப்பெருநாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
நாம் ஜொகூர் சுல்தானுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அவர் வெளிப்படையாக பேசியிருப்பது பாராட்டுக்குரியது.
அதே போல தமிழர்களின் வரலாறும் ஒவ்வொரு மாநிலத்திலும் அரசக் குடும்பங்களோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது.அதுவும் வெகு விரைவில் வெளியாகும் என நம்பலாம். அப்போது புரியும் யார் வந்தேறிகள் என்று.
நேற்று வந்தவன் எல்லாம் அரசியலில் தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு மற்றவர்களை வந்தேறிகள் என்கிறான். இவனுடைய பூர்வீகம் அவனுக்கே தெரியும். ஆனாலும் அவன் ஆளுங்கட்சியாம் அதனால் மற்றவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்கிறான்! பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போய்விட்டதாக நினைக்குமாம்! அந்த கதை தான்!
எது எப்படி இருந்தாலும் ஜொகூர் சுல்தான் மனம் திறந்து தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருப்பது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இன்றைய நிலையில் இங்கு வந்தேறிகள் என்றால் அது எல்லா மக்களையுமே குறிக்கும். அதனால் அது தேவைப்படாத ஒரு வார்த்தை. ஜொகூர் சுல்தான் சொல்வதைப் போல நாம் அனைவரும் மலேசியர்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! அது தான் மலேசியம்!
Saturday, 20 February 2021
நல்ல முயற்சிகளைப் பாராட்டுவோம்!
கோவிட்-19 தொற்று நமது தினசரி வாழ்க்கையைத் திருப்பிப் போட்டுவிட்டது என்பது உலகமே அறியும்.
நமது நாட்டிலும் திசை தெரியாமலும் ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை. என்ன செய்வது? இது தான் வாழ்க்கை என்றாகிவிட்ட பிறகு நாமும் பல முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். அரசாங்கமும் தன்னாலான எல்லா வழிகளிலும் அவர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இன்று இயக்கங்கள், மன்றங்கள், பொது மக்கள் - இப்படி பலர் பல வகைகளில் வறுமையில் வாடும் மக்களுக்கு உதவி செய்கின்றனர்; உதவி செய்தும் வருகின்றனர்.
வறியவர் வாட நாம் மட்டும் அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? அதனை நாம் உணர்ந்திருக்கிறோம். அதனால் தான் இவ்வளவு உதவிகள்.
மனதிலே ஒரு சிறிய நெருடலும் உண்டு. பசியைப் போக்க உணவு பொட்டலங்களைக் கொண்டு போய் அவர்களிடம் சேர்த்தாலும் அதனை இன்னும் எத்தனை நாளைக்குத் தொடர முடியும்? பொதுவாக பொது இயக்கங்கள் என்றால் அவர்கள் பெரும்பாலும் தங்களது ஆண்டுக் கூட்டத்தில் எதையாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக இந்த உணவு பொட்டலங்களைப் பயன்படுத்திக் கொள்ளுவார்கள்! ஒரு சிலர் இந்த நேரத்தில் ஏதாவது பணம் பண்ண வழியிருக்கா என்பதையும் கவனித்துக் கொண்டிருப்பார்கள்! இதையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஒன்றும் அதிசயமில்லை!
நான் சொல்ல வருவதெல்லாம் இந்த பொட்டலங்கள் கொடுப்பது என்பதெல்லாம் ஒரு தற்காலிக ஏற்பாடு. அவர்களின் தற்காலிக பசியைப் போக்கும்.
ஆனால் அவர்களுக்குத் தேவை எல்லாம் தங்களது குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு வேலை. வேலை வாங்கிக் கொடுப்பது தான் அவர்களுக்கு நாம் செய்யும் பெரும் உதவி. அந்த உதவி அவர்களுக்குப் பசியைப் போக்கும், பிள்ளைகளின் கல்வியைத் தொடரச் செய்யும், அவர்களின் மாதாந்திர தவணைகளைக் கட்ட வைக்கும் இப்படி பல கடப்பாடுகளை அவர்கள் கொண்டிருக்கின்றனர். அவைகளைப் புறக்கணிக்க முடியாது. இதற்கெல்லாம் ஒரே உதவி அவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுப்பது தான்.
இப்போது நமது இனத்தவர்களுக்குக் கூப்பிட்டு கூப்பிட்டு வேலை கொடுப்பவர்கள் என்றால் அது இந்த காவலாளி வேலை தான். பல நிறுவனங்களுக்குக் காவல் செய்ய ஆள்கள் தேவைப்படுகின்றனர். பலருடைய பிழைப்பு அதில் ஓடிக்கொண்டிருக்கிறது. பெண்களும் அதில் பங்கு பெறுகின்றனர். ஒன்றும் இல்லாததற்கு இதாவது கிடைத்ததே என்று திருப்தி அடைவது தவிர வேறு என்ன சொல்ல!
அதனால் பதவியில் உள்ள நமது இனத்தவர்கள் முடிந்தவரை இந்த மக்கள் தங்களது குடும்பத்தைக் காப்பாற்ற இவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். மற்ற உதவிகள் எல்லாம் ஒரு சில காலங்களுக்குத் தான் உதவும். ஒரு நிரந்தர வேலை என்பது அவர்கள் வாழ் நாளெல்லாம் அவர்களது குடும்பத்தைக் காப்பாற்ற உதவும்.
இப்போது தற்காலிகமாக கிடைக்கும் உதவிகள் தொடரட்டும். ஆனால் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தான் நிரந்தரமான உதவி.
இந்த மக்களுக்கு முன் நின்று உதவும் அனைவருக்கும் வாழ்த்தும் பாராட்டுகளும்! நல்ல முயற்சி தொடரட்டும்!
ஏன் இந்த திடீர்ப்பாசம்?
பொங்கல் விழா காலங்காலமாக தமிழர்களிடையே கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழா.
அது வரை எந்த சந்தேகமுமில்லை.
அந்த திருவிழாவையும் சமய சாயம் பூசி அதை இந்து சமய விழா என்பதாக புதிதாக ஒரு புரளியைக் கிளப்புகின்றனர் சிலர். இத்தனை ஆண்டுகள் இல்லாத இந்த பற்றும் பாசமும் எங்கிருந்து வந்தது என்பது ஓரளவு நமக்குப் புரிகிறது.
பொங்கல் விழா என்பது விவசாயிகள் கொண்டாடும் பெருவிழா. விவசாயிகளில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் - இப்படி பல சமயத்தினர் இருக்கின்றனர். பொதுவாக தமிழக விவசாயிகளில் இந்துக்கள் அதிகம் என்பது உண்மை. அதனால் அது இந்துக்களின் சமயவிழா என்பது தவறு. அப்படியென்றால் முஸ்லிம்கள், கிறித்துவர்களுக்கென்று தனியாக ஒர் பொங்கல் விழா இருக்க வேண்டுமே! தமிழர்கள் அப்படியெல்லாம் பிரிய வழியில்லை. தமிழர்களை அப்படி பிரிக்கவும் முடியாது.முதலில் பொங்கல் என்பது சமய விழாவே அல்ல. அவரவர் தங்களது சமயத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. இன்னொரு முக்கிய காரணம் கடவுள் நம்பிக்கை இல்லாத விவசாயிகளும் இருக்கின்றனர். ஆக, கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இப்படி இந்த நிலையில் அதனைச் சமய விழா என்று சொல்ல வாய்ப்பில்லை.
"இல்லை! அது இந்து சமய விழா தான்" என்று நீங்கள் அடித்துச் சொல்ல நினைத்தால், சரி! சொல்லிவிட்டுப் போங்கள்! முதலில் இங்கு கொண்டாடுபவர்களுக்கு மாடுகளே இல்லை! விவசாய நிலமே இல்லை! மாடுகளுக்கு - அது இந்துவா, முஸ்லிமா, கிறித்துவமா என்று தெரியப் போவதும் இல்லை!
மாடுகளுக்குத் தெரியாது என்பதை ஏற்றுக் கொள்ளுகிறோம். மனிதர்களுக்கும் தெரியாது என்றால் அதனையும் ஏற்றுக் கொள்வோம்!
என்ன ஆகிவிடப் போகிறது? இவர்கள் சொல்லுகிறார்கள் என்பதற்காக முஸ்லிம்களும், கிறித்துவர்களும் பொங்கல் கொண்டாடாமலா இருக்கப் போகிறார்கள்!
இதெல்லாம் ஆயிரம் இரண்டாயிரம் வருஷத்துப் பாரம்பரியம். அதனை சும்மா ஏதோ ஏதோ பெயரைச் சொல்லி தமிழர்களைத் திசைத் திருப்புவது இப்போது நடந்து கொண்டிருக்கிறது! அவ்வளவு தான்!
பார்ப்போம். இந்த ஆட்டம் எவ்வளவு தூரத்திற்கும் போகும் என்று பார்ப்போம்!
Friday, 19 February 2021
ஏன் இந்த புலம்பல்!
மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டவர் போல் பேசுகிறார்!
திராவிடக் கட்சிகளின் கொள்கை நாத்திகம் என்றால் - அந்த கொள்கை தமிழ்ப்பள்ளிகளில் போதிக்கப்படுகிறது என்றால் - அதனை இத்தனை ஆண்டுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தீர்களே, நீங்களும் குற்றவாளி தானே!
ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் உங்களால் எடுக்க முடியவில்லை என்று நாங்கள் கேட்கலாம் தானே. அப்படியென்றால் யாரையோ காப்பாற்ற முயற்சி செய்கிறீர்கள் என்பது தானே பொருள்!
காட்டிக்கொடுப்பது என்ன பெரிய பிரச்சனையா? கல்வி அமைச்சுக்கு ஒரு கடிதம் தானே. இதைக் கூட உங்களால் செய்ய முடியவில்லையென்றால் அப்புறம் என்ன மற்றவர்களுக்குப் புத்தி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்! உங்களுடைய புத்திமதி யாருக்குத் தேவை!
இந்த நேரத்தில் என்னிடம் ஒரு கேள்வி உண்டு. நாம் தமிழர் கட்சி எங்கே எப்படி தீடீரென்று முளைத்து வந்தது? அவர்கள் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்கள் அல்லவே!
சமீபத்தில் சீமானின் மகன் பிரபாகரனுக்கு சிவகங்கை மாவட்டம், முடிக்கரை கிராமத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் காதணி விழா நடந்தது. அவரே: "மகனின் காதணி விழாவிற்காகவும், குலதெய்வ வழிபாட்டிற்காகவும் வந்தோம். 108 கிடாய் வெட்டி விருந்து வைத்து மகிழ்ந்தோம்" என்று கூறியிருக்கிறாரே! இங்கு எங்கே கடவுள் மறுப்புக் கொள்கையைக் கண்டீர்கள்?
நாம் தமிழர் கட்சி என்பது தமிழர்கள் தங்களைப் பிறர் ஆள விடக்கூடாது என்கிற கொள்கை உடைய உள்ள ஒரு கட்சி. ஆயிரக்கணக்கான தமிழ் இந்துக்களுக்கு ஒரு தமிழரல்லாதவரான நீங்கள் தலைமை தாங்குவது தமிழருக்கு என்ன பெருமை? அதுவும் தமிழைப் புறக்கணித்து வேறு ஒரு மொழியில் உங்கள் சட்டையில் போட்டுக் கொண்டிருக்கிறீர்களே அது தமிழர்களை அவமானப்படுத்துவதைத் தவிர வேறு என்ன? அதைத்தான் நாம் தமிழர் கட்சி எதிர்க்கிறது. திராவிடக் கட்சிகள் கடவுள் மறுப்புக் கொள்கையுடைவை என்றால் அதை நீங்கள் தான் நிருபிக்க வேண்டும். ஆனால் நாம் தமிழர் கட்சியை வம்புக்கு இழுக்காதீர்கள்! நாம் தமிழர் கட்சி என்பது தமிழர்களுக்கான ஒரு கட்சி. அது பற்றி தெலுங்கரோ, மலையாளியோ பேசுவதற்கு ஏதுமில்லை! நாங்கள் மற்ற இனத்தவர் பற்றி பேசுவதில்லையே!
எல்லாவற்றுக்கும் ஒரு முடிச்சு போட்டு புலம்பாதீர்கள். உங்கள் கொள்கைக்கு எதிரானவர் யார் என்பதை மட்டும் கவனியுங்கள். தேவை என்றால் நடவடிக்கை எடுங்கள். இதுவரை எதுவும் செய்யாத நீங்கள் இனி மேல் என்னத்தை செய்துவிடப் போகிறீர்கள்!
Thursday, 18 February 2021
ஏன் "முஸ்லிம்" ஆசிரியர்கள்?
தாய் மொழிப்பள்ளிகள் தேவை இல்லை என்பதாக முஸ்லிம் ஆசிரியர் சங்கம் வழக்குத் தொடுத்திருக்கிறது.
இங்கு முஸ்லிம் சங்கம் என்பது மத ரீதியான ஒரு சங்கம். முஸ்லிம் ஆசிரியர்கள் என்பது அவர்கள் பெரும்பாலும் பள்ளிகளில் அரபு மொழி படித்துக் கொடுப்பவர்கள் என்பதாகத் தான் நான் பார்க்கிறேன்.
அப்படியென்றால் அரபு மொழியும் தாய் மொழிப்பள்ளிகளாகத்தான் நாம் எடுத்துக் கொள்ளுகிறோம்.
மதத்தைப் போதிக்கும் ஆசிரியர்கள் ஏன் மொழி சார்ந்து வழக்கைத் தொடுக்கின்றனர்? அவர்களது கடமை என்பது மதத்தைப் போதிப்பது தான். மொழி என்பது அவர்களது பிரச்சனை அல்ல.
அதுவும் இஸ்லாமிய மார்க்கம் என்பது உலக அளவில் பல மொழிகளில் கற்றுத் தரப்படுகின்றது. அதே போலத் தான் அது தமிழ், சீன, அரபு மொழிகளிலும் கற்றுத் தரப்படுகின்றது. அப்படி செய்வதில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு ஏதேனும் வருத்தம் உண்டா என்பது தெரியவில்லை.
மேலே குறிப்பிட்ட மூன்று மொழிகளுமே செம்மொழி அந்தஸ்த்தைப் பெற்றவை. மூன்று மொழிகளுமே நமது நாட்டில் இன்னும் பயன்பாட்டில் உள்ள மொழிகள் என்பதே நமக்குப் பெருமை. முஸ்லிம் ஆசிரியர்களுக்கு அதனால் என்ன சிறுமை வந்துவிட்டது?
ஒரு மதத்தின் பெருமை என்பதே அது பல மொழிகளில் போதிக்கப்படுகிறது என்பது தான். வேண்டாம்! இஸ்லாம், மற்ற மொழிகளில் அதாவது சீன, தமிழ் மொழியில் போதிக்க வேண்டாம் என்பது தான் முஸ்லிம் ஆசிரியர்களின் நிலையா?
அப்படி சொல்ல அவர்களுக்கு உரிமையில்லை. மற்றவர்களின் உரிமைகளில் கை வைக்க அவர்களுக்கு யாரும் அனுமதி கொடுக்கவில்லை. சமயம் அந்த உரிமையை அவர்களுக்கு வழங்கவில்லை!
உண்மையைச் சொன்னால் தாய் மொழிப்பள்ளிகள் இஸ்லாமிய பள்ளிக்கூடங்கள் அல்ல. அவைகள் எல்லாம் தேசியப் பள்ளிகளின் நடைமுறைகளைத்தான் பின் பற்றுகின்றன.
இதில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு என்ன பிரச்சனை என்பது புரியவில்லை!
முதலாளிகளுக்குச் சிறை தண்டனை!
வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் முதலாளிகள் அந்த தொழிலாளர்கள் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். செய்யத் தவறினால் அவர்கள் சிறைத் தண்டனையை எதிர் நோக்க வேண்டி வரும் என்பதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் முதலாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
அப்படி செய்யத் தவறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 200,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம் என்பது முதலாளிக்கு மிக மிகத் தேவையான ஒரு நினைவூட்டல்!
நாட்டில் பலர் சட்டத்தை மீறுகின்றனர். அதிலும் முதலாளிகள் என்றால் சட்டத்தை மீறுவதில் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல! ஒரே காரணம் தான். அவர்கள் ஏதோ ஒரு வகையில் அரசியல் செல்வாக்கைப் பெற்றிருக்கின்றனர். அதனால் எப்படியும் தப்பித்து விடலாம் என்கிற மனப்போக்கு அவர்களிடையே அதிகம்.
இந்த சூழலில் மனிதவள அமைச்சரிடமிருந்து இப்படி ஒரு செய்தியைப் படிக்கும் போது "இது முடியுமா?" என்கிற கேள்வியும் எழுகிறது!
இது போன்ற பயமுறுத்தல்களை எத்தனையோ முறை படித்து விட்டோம்! கேட்டு விட்டோம்! இந்த முறை மட்டும் என்ன வாழப் போகிறதாம் என்று தான் கேட்கத் தோன்றுகிறது!
முதலாளிகள் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். எல்லாத் தவறுகளையும் செய்துவிட்டு தப்பித்து விடுகின்றனர்!
ஆனாலும் மனம் தளரவில்லை. சட்டம் தனது கடமையைச் செய்யும் என்பதில் இன்னும் நம்பிக்கை உண்டு. சட்டம் தனது கடமையைச் செய்ய ஆரம்பித்துவிட்டால் எப்பேர்ப்பட்ட கொம்பனும் பணிந்து தான் ஆக வேண்டும்.
ஆக, நம்புவோம். தவறு செய்யும் முதலாளிகளுக்குத் தண்டனை உறுதியாகக் கிடைக்கும் என நம்புவோம். அதுவும் அபராதத்தை விட சிறை தண்டனை கேவலமானது என்பது அவர்களுக்கே தெரியும்.
முடிந்தால் அபராதத்தோடு சிறைத் தண்டனையும் கிடைக்க இந்த சட்டம் வழி செய்யும் என நம்புவோம்!
அம்மாடியோவ்! இது ஆபத்தல்லவா!
நன்றி: FMT News
ஊரடங்கு கட்டுப்பாட்டினால் மக்கள் எந்த அளவுக்குச் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு.
அங்கே போகக் கூடாது இங்கே போகக்கூடாது, காரில் இருவர் தான் பயணம் செய்யணும், உணவகங்களில் ஒரு மேசையில் இருவர் மட்டுமே என்று இப்படி ஆயிரம் கட்டுப்பாடுகள் மக்களுக்கு விதிக்கப்பட்டால் மக்கள் என்ன தான் செய்வார்கள்? அதனால் விதிகளை மீறத்தான் செய்வார்கள்.
இன்னொரு கேள்வியும் உண்டு. இந்த விதிமுறைகளையெல்லாம் மக்கள் தான் கடைபிடிக்க வேண்டுமா ஆளும் அரசியல்வாதிகளுக்கில்லையா என்கிற கேள்வியும் உண்டு. சட்டத்தை மீறுகிறவர்கள் இந்த அரசியல்வாதிகள் தான். அவர்களுக்கு மட்டும் சட்டவிதிகள் ஏன் தளர்த்தப்படுகின்றது என்று கேட்டாலும் ஆளும் தரப்பிலிருந்து பதிலில்லை!
இது பினாங்கு, செபராங் பிராய்யில் நடந்த நிகழ்வு. ஒரு காரில் மூன்று பேர் பயணம் செய்ய முடியாது என்பதால் காரை ஓட்டி வந்த பெண்மணி தனது வளர்ப்பு மகனின் நண்பனை காரின் முன்னே உட்கார வைத்துவிட்டு தனது வளர்ப்பு மகனை காரின் பின்னே உள்ள பொருட்கள் வைக்கும் பகுதியில் (Boot) ஒளித்து வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது!
இது தவறு தான். அந்த பயணம் சுமார் 10 நிமிடம் 15 நிமிடம் தானே அதனால் சமாளித்துவிடலாம் என்று அந்த பெண்மணி நினைத்திருக்கலாம். ஆனால் பயண நேரத்தை நம்மால் கணக்கிட முடியுமா! ஒரு சிறிய விபத்து பத்து நிமிட பயணத்தை ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ ஆக்கி விடும் என்பது தான் நமது அனுபவங்கள்! அப்படி நடக்கவில்லை! அதுவே அவர் செய்த புண்ணியம்!
நாம் சொல்ல வருவதெல்லாம் மக்களே! இது போன்ற ஆபத்தான விளையாட்டுக்கள் வேண்டாம். இது உயிர் சம்பந்தப்பட்டது. தப்பித்து விட்டால் மகிழ்ச்சி! தப்பிக்க முடியாவிட்டால் துன்பம், துயரம்! இது தேவை தானா என்பது இப்போது தெரியாவிட்டாலும் அனுபவிக்கும் போது தான் தெரியும்.
இது போன்ற ஆபத்தான விளையாட்டுகள் வேண்டாம்! ஒரு நேரம் போல் ஒரு நேரம் இருக்காது!
இதை விட நம்மால் வேறு என்ன சொல்லிவிட முடியும்!
Wednesday, 17 February 2021
திராவிடமா? எங்கிருந்து வந்தது?
மலேசிய இந்து சங்கத்தின் அறிக்கை நம்மை அதிர வைக்கிறது!
பள்ளிகளில் திராவிடக் கொள்கைகளைப் பரப்புவதை நிறுத்திக் கொள்ளுமாறு இந்து சங்கம் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டிருக்கிறது.
இது தொடர்ந்து 2016 - ம் ஆண்டிலிருந்து தமிழ் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குப் பரப்பட்டு வருவதாக அந்த செய்தி கூறுகிறது. அப்படியென்றால் இத்தனை ஆண்டுகள் பொறுத்தவர்களுக்கு இப்போது என்ன ஆயிற்று என்று நமக்கும் இந்து சங்கத்திடம் கேட்கத் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் நீங்கள் ஏற்றுக் கொண்ட இந்த கருத்தை இப்போது மறுப்பதற்கு என்ன காரணம்? அதில் இந்து சங்கத்திற்கும் பங்கு உண்டு என்று தான் நாமும் நினைக்கிறோம்.
பொதுவாக திராவிடம், திராவிடர் என்பதே நமக்குத் தேவையில்லாத ஒரு சர்ச்சை. இங்கு யாரும் திராவிடர்கள் இல்லை. நமது நாட்டில் தமிழர், தெலுங்கர், மலையாளிகள் உண்டு. இந்த மூன்று இனத்தவரையும் தென் இந்தியர் என்று தான் பொதுவாக சொல்லப்படுகின்றார்கள். திராவிடர் என்று சொல்லப்படுவதில்லை.
நமக்குத் திராவிடமும் வேண்டாம், தென் இந்தியரும் வேண்டாம். வெறும் தமிழர், தெலுங்கர், மலையாளிகள் - இதுவே போது. எந்த குறைபாடும் இருப்பதாகத் தெரியவில்லை. அரசாங்கமும் அதனைத்தான் கூறுகிறது. நாமும் அப்படியே இருப்போம். ஒரு பிரச்சனையும் இல்லையே!
திராவிடர் என்கிற சொல்லே தமிழ் இலக்கியங்களில் சொல்லப்படவில்லை. அது தமிழ்ச்சொல்லே அல்ல, அது சமஸ்கிருதச் சொல் என்கிறார்கள் அறிஞர்கள். அதே போல அது தெலுங்கு, மலையாள இலக்கியங்களிலும் இல்லாத ஒரு சொல்.
அதனை ஏன் வலுக்கட்டாயமாக ஒரு சாரார் தேவையின்றி நமது நாட்டில் அந்தச் சொல்லை பாடப்புத்தகங்களில் திணிக்க முயல்கின்றனர் என்பது நமக்கு விளங்கவில்லை. இத்தனை ஆண்டுகள் அதற்கு இந்து சங்கமும் துணை போயிருக்கின்றது என்பது தான் வருத்தம் அளிக்கிறது.
அது எப்படி இந்து சங்கத் தலைவருக்கு திராவிடர் பெரியார் வேண்டியவராக இருந்தார் இப்போது ஏன் அதிலிருந்து கழட்டிக் கொள்ளுகிறார்? என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.
இப்படி ஓர் அறிக்கையை இந்து சங்கம் வெளியிடுவதை நிறுத்திவிட்டு அதனைப் புகாராகவே கல்வி அமைச்சின் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கலாம். அப்படி எந்த நடவடிக்கையும் இல்லை என்றால் அதனை வேறு வகையாகவும் கையாள முடியும்.
பொறுப்பான ஓர் இயக்கம் இப்படி தாமதம் செய்யக் காரணம் என்ன? அதைத்தான் கேட்க விரும்புகிறோம்!
மீண்டும் வங்காளதேசிகளா!
ஒன்றும் நமக்குப் புரியவில்லை!
நாட்டில் இப்போது இருக்கும் வங்காளதேசிகள் குறைந்தா போய்விட்டார்கள்? இப்போது நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் அவர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களை ஏன் மீண்டும் நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்பது நமக்குப் புரியவில்லை!
நாட்டின் நிலைமை சரியாக இல்லை என்பது அனைவருக்கும் புரிகிறது. ஆனால் அரசாங்கத்திற்கு ஏன் புரியவில்லை என்பது தான் கேள்வி.
கோவிட்-19 தொற்றை வைத்துக் கொண்டு கொல்லைப்புற அரசாங்கத்தைக் கோலோச்சும் இந்த நேரத்தில் இப்படி ஒரு முடிவை எப்படி எடுக்க முடியும்?
ஒரு புறம் கோவிட்-19. அதனால் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. மக்களிடையே வேலை இல்லாப் பிரச்சனை. மக்களின் வாழ்வாதாரத்திற்கு அரசாங்கத்திற்கு வழி காட்ட ஆளில்லை. கல்வியை முடித்துவிட்டு வரும் பட்டதாரி மாணவர்களுக்கு வேலை இல்லை. இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் அரசாங்கம் துணிவோடு சில செயல்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் முடியவில்லை! அதற்கான பலம் நாடாளுமன்றத்தில் போதவில்லை! அதனால் தொற்று நோயை வைத்துக் கொண்டே பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது!
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இலட்சக்கணக்கில் நாட்டில் இருக்கின்றனர். அதில் பலர் எந்தவித ஆவணங்களும் இல்லாதவர்கள். இவர்களால் நாட்டில் நிறைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவர்கள் இருக்கும் வரை தொற்று நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று சொல்ல முடியவில்லை. அவர்கள் வெளியே வந்து சிகிச்சை பெற பயப்படுகின்றனர். காரணம் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்கிற பயம் அவர்களுக்குண்டு.
புதிதாக வரும் வங்காளதேசிகளும் அவர்கள் மீண்டும் தங்கள் நாட்டுக்குச் செல்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நாள் முடிந்ததும் தங்களது ஆவணங்களை விற்றுவிட்டு அவர்களும் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பார்கள். அது தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
மீண்டும் மீண்டும் வங்காளதேசிகளை இங்கு வேலைக்கு வரவைப்பது என்பது சரியான அணுகு முறையல்ல. முதலில் இப்போது இங்கு இருப்பவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து விட்டு பின்னர் மற்ற வழிவகைகளை யோசிக்கலாம்.
நம்மைப் பொறுத்தவரை இது நாட்டுக்கு நல்லதல்ல. ஏதோ ஒரு சில மேல்தட்டு, கீழ்தட்டு அரசியல்வாதிகள் பணம் பார்க்க வேண்டும் என்பதற்காக நாட்டின் எதிர்காலத்தை வீணடிக்காதீர்கள். ஏற்கனவே நாட்டில் குவிந்து கிடக்கும் அந்நியர்களுக்கு நல்லதொரு நீதி கிடைக்க வேண்டும்.
வெளி நாட்டவரை வைத்து பணம் பண்ண நினைப்பவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை!
Tuesday, 16 February 2021
அம்னோ இதனை ஏற்றுக்கொள்ளுமோ!
கோவிட்-19 என்றாலே நமது உடனடி ஞாபகத்திற்கு வருபவர் சுகாதார தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் அப்துல்லா மட்டும் தான்!
இன்று நடக்கும் கொல்லைப்புற அரசியலில் உண்மையைப் பேசுபவர் அவர் மட்டும் தான் என்கிற நிலைமையும் அவர் உருவாக்கிவிட்டார்! மக்கள் மத்தியிலும் மனதில் நிலைத்து விட்டார்!
சமீபத்திய தனது டுவீட்டரில் அவர் தனது குடும்பத்தினருடன் நடைப்பயிற்சி மேற்கொள்வதையும் நடைப்பயிற்சி உடலுக்கு நனமைப் பயக்கும் என்பதையும் அந்த டூவீட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த டிவீட்டரில் நாம் பயன்படுத்தும், நம் புழக்கத்தில் உள்ள ஒரு பழமொழி பலரின் கவனத்தை ஈர்த்தது. "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்று அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் கொடுத்து அதனைத் தமிழிலும் பதிவிட்டிருந்தார்.
நமக்குள்ள ஐயமெல்லாம் அம்னோ தரப்பு இதனை எப்படி ஏற்றுக்கொள்ளும் என்பது தான். பார்ப்போம்!
நல்ல முன்னுதாரணங்கள் தேவை!
சமீபத்தில் பினாங்கு, பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியைப் பற்றிய செய்தியைப் படித்த போது மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் என்பது தலைமையாசிரியர்களின் கையில் தான் உள்ளது என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான். அதனை நான் நேரிடையாக பார்த்தவன்.
தலைமையாசிரியர்கள் கொஞ்சம் முயற்சி எடுத்தால் பலவற்றை சாதிக்க முடியும்.
இன்று பல தமிழ்ப்பள்ளிகள் உலகளவில் பல சாதனைகளைப் புரிகின்றனர். விஞ்ஞானக் கண்டுப் பிடிப்புக்கள் பலவற்றைக் கண்டுப் பிடித்து சாதனைகள் பல புரிகின்றனர் பேச்சுப் போட்டிகளில் பங்குப் பெற்று பரிசுகள் பெறுகின்றனர். நாடகப் போட்டிகளிலும் பரிசுகள் பெறுகின்றனர். இவைகள் எல்லாம் உலக அளவில் கிடைக்கின்ற அங்கீகாரங்கள்.
இந்த வெற்றிகள் எல்லாம் தமிழ்ப்பள்ளிகளில் பணி புரியும் அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு தான் கிடைக்கின்றன. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இவைகள் அனைத்தும் சரியான தலைமை இருக்கும் வரை தான். இங்கு தலைமையாசிரியர்கள் தான் தலையாய காரணமாக இருக்கின்றனர்.
இன்று பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியும் அந்த வரிசையில் சேருகின்றது. இன்றைய கோவிட்-19 காலக் கட்டத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் கணினி தேவைப்படுகின்றது. இன்று பல தலைமையாசிரியர்கள் நன்கொடைகளுக்காக அலைந்து திரிகின்றனர். என்ன செய்வது? அவர்களுக்குத் தெரிந்த வழி அது தான். கொடுப்பவர்களும் ஒன்றோ இரண்டோ கொடுக்கலாம். அரசாங்கம் எப்போது கொடுக்கும்? தெரியாது. ஆனால் பாடங்கள் என்னவோ நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
கைபேசிகளிலும் பாடங்கள் படிக்கலாம். ஆனால் அது கொஞ்சம் ஆபத்தானதாக இருக்கின்றது என்பது பெற்றோர்களுக்குத் தெரிகிறது.
எப்படி சுற்றிப் பார்த்தாலும் கணினியே சிறந்த வழி. அதற்கு என்ன செய்ய முடியும் என்பதைத் தான் நாம் பார்க்க வேண்டும்.
பினாங்கு, பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி நல்லதொரு வழியைக் காட்டியிருக்கிறது. இன்னும் வெவ்வேறு வழிகள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் வரவேற்கிறோம். மாணவர்கள் பயன் பெற வேண்டும்.
இன்றைய நிலையில் மாணவர்களில் பலர் கணினி பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர். ஏழ்மை தான் காரணம். அதுவும் அப்பன் குடிகாரனாக இருந்தால் அந்த குடும்பத்திற்கு விடிவு காலம் இல்லை.
ஆனால் அவர்களும் படிக்க வேண்டும். அதற்கு என்ன வழி என்பதை அனைவரும் யோசிக்க வேண்டும். இப்போது நமது சமுதாயத்தின் முன் உள்ள தலையாய பிரச்சனை இது தான்.
இன்னும் பல வழிகள் இருக்கலாம். அவைகள் அனைத்தும் நமக்கு முன்னுதாரணங்களாக இருக்க வேண்டும். அது போதும்!
Sunday, 14 February 2021
இரண்டாம் பரிசு!
நான் தேடிய புத்தகங்கள்!
என் வாழ்க்கையில் இரண்டு புத்தகங்களை முக்கியமான புத்தகங்களாக கருதுகிறேன். அப்படி சொல்லவும் முடியாது. அந்த புத்தகங்களுக்காக அலைந்தேன் என்று சொல்லலாம்!
முதல் புத்தகம் 1969-ல் டாக்டர் மகாதீர் எழுதிய Malay Dilemma. அது முதலில் தடைசெய்யப்பட்ட புத்தகம். பின்னர் அதற்குத் தடையில்லை! இரண்டாவது புத்தகம் என்றால் இப்போது செய்திகளில் அதிக இடம்பெற்று வரும் டான்ஸ்ரீ டோமி தோமஸ் எழுதியிருக்கும் My Story: Justice in the Wilderness. புத்தகம் இன்னும் தேடலில் இருக்கிறது! கைக்கு எட்டவில்லை! பயமுறுத்தல் நாடகம் தொடர்வதால் கொஞ்சம் சுணக்கம்!
பொதுவாக நான் ஒரு புத்தக பைத்தியம். விழுந்து விழுந்து படிப்பேன் என்று சொல்லலாம்! இப்போது அந்த வேகம் குறைந்துவிட்டது! பாரவையில் கொஞ்சம் குறைபாடு!
எனது இரசனையில் கொஞ்சம் வேறுபாடு உண்டு. நான் பெரும்பாலும், தமிழாக இருந்தாலும் சரி ஆங்கிலமாக இருந்தாலும் சரி, தன்முனைப்பு புத்தகங்கள், சுய சரிதம், சுய முன்னேற்றம் சார்ந்த புத்தகங்கள் - இவைகளில் அதிக நாட்டம் உடையவன்.
நான் இளமை காலத்திலிருந்தே டாக்டர் மகாதிரின் இரசிகன். அவரை எனக்குப் பிடிக்கும். அவரின் எழுத்துகள் எனக்குப் பிடிக்கும். அவருடைய புத்தகமான Malay Dilemma வைப் படித்த போது உண்மையில் அவருடைய கருத்துகள் எனக்குப் பிடித்தமானவைகளாகத் தான் இருந்தன. அவர் சொன்ன கருத்துகள் இந்தியர்களுக்கும் ஏற்புடையவைகள் தான். பிற்காலத்தில் அனைத்தும் தடம் மாறிவிட்டன!
இப்போது டோமியின் புத்தகத்தைப் படிக்க ஆசை இருந்தாலும் உடனடியாகக் கைக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் கிடைக்கும்! பூதக்கண்ணாடி கொண்டு ஒவ்வொரு பக்கத்தையும் படிப்பேன் என்பது நிச்சயம்!
இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன். படிக்க வேண்டும் என்றால் புத்தகங்களைத்தான் படிக்க வேண்டும். புத்தகங்கள் சும்மா ஏதோ வேலையற்றவன் எழுதியது அல்ல. ஒரு புத்தகத்தைப் படிப்பது என்பது ஒரு அறிஞனோடு இருப்பது போல. பல புத்தகங்கள் என்றால் பல அறிஞர்கள் நம்மோடு இருப்பது போல.
எத்தனையோ புத்தகங்களை நான் தேடி தேடி வாங்கியிருக்கிறேன். ஆனால் இந்த இரண்டு புத்தகங்கள் விசேடமானவை!
தமிழர்கள் தொலைத்துவிட்ட தங்களது சரித்திரத்தை தெரிந்து கொள்ள படியுங்கள்! படியுங்கள்! படியுங்கள்!
Saturday, 13 February 2021
பிரதமர் தொடக்கி வைக்கிறார்!
Pfizar (Corona Vaccine)
இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் கோவிட்-19 தடுப்பூசி பொது மக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி போடும் முதல் நபராக நமது பிரதமர் முகமது யாசின் இருப்பார் என அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்தார்.
அவர் தான் தடுப்பூசி போடும் முதல் நபர் என்பதின் நோக்கம் "யாரும் பயப்பட வேண்டியதில்லை! இந்த தடுப்பூசி முறை மிகவும் பாதுகாப்பானது! ஆபத்து இல்லாதது!" என்பது தான்.
பிரதமரைத் தொடர்ந்து சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படுவர்.
இந்த தடுப்பூசி திட்டத்தில் தேசிய மருந்தியல் கட்டுப்பாடு நிறுவனம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பைஸர் தடுப்பூசியைப் பயன்படுத்த ஒத்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
இன்றைய நிலையில் 49 நாடுகள் இந்த தடுப்பூசி முறையைத்தான் பின்பற்றி வருகின்றன. உலக சுகாதார நிறுவனமும் இந்த தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆக, பயப்பட ஒன்றுமில்லை என்பதைத் தான் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு, பயப்பட ஒன்றுமில்லை என்று நம்மைப் பார்த்து பிரதமர் உறுதி அளித்தாலும் ஒன்றை நாம் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். மலேசியர்களுக்கு அரசாங்கம் தடுப்பூசி போடுகின்றது. அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் வெளியே இலட்சக்கணக்கான பேர் எந்த ஆதராமுமின்றி, எந்த ஆவணமுமின்றி நாட்டில் தங்கியிருக்கிறார்களே அவர்கள் நிலை என்ன?
அவர்களுக்கான தடுப்பூசி போடவில்லையென்றால் கோவிட்-19 எந்த காலத்தில் மலேசியாவிலிருந்து ஒழிக்கப்படும்? அது சாத்தியமே இல்லையென்று தான் பொருள்!
அதனையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறோம்.
வெளி நாட்டு சட்ட விரோத தொழிலாளர்கள் இருக்கும் வரை, அவர்களுக்கான தடுப்பூசி போடாதவரை, கோவிட்-19 இங்கேயே தான் தொடரும் என்று உறுதியாக சராசரியான நாங்கள் நம்புகிறோம்!
பிரதமர் தொடக்கி வைக்கிறார், நன்று! நன்று! அதே சமயத்தில் சட்டவிரோதமானவர்களை முடக்கி வைத்தால் நாடு முடங்கிப் போகும்!
இன்று வானொலி தினம்!
Friday, 12 February 2021
புகார் செய்பவர் யார்?
டான்ஸ்ரீரீ டோமி தோமஸ் எழுதிய "எனது கதை: அந்தரத்தில் நீதி" என்னும் புத்தகம் இப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
அவர் சட்டத்துறைத் தலைவராக சிறிது காலம் இருந்ததால் அந்த சிறிது கால இடைவெளியில் தனது அனுபவங்களை ஒரு தொகுப்பாக தொகுத்திருக்கிறார்.
இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் சுதந்திரத்திற்குப் பின்னர் சட்டத்துறைத் தலைவர்களாக இருந்தவர்கள் அனைவருமே மலாய்க்காரர்கள். இடையில் ஒருவர் மட்டுமே மலேசிய இந்தியரான டோமி தோமஸ்.
டோமி எழுதிய அந்த புத்தகத்தைப் பற்றியான பலவிதமான அபிப்பிராயங்கள்.உலவி வருகின்றன. முழுமையாக அந்த புத்தகத்தை இன்னும் படிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. எல்லாம் பத்திரிக்கைகளில் வருகின்ற துண்டு துண்டு செய்திகள் தாம்!
இன்றைய நிலையில் அந்த புத்தகத்தைப் பற்றி நூற்று முப்பதற்கும் மேற்பட்ட புகார்கள் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன!
எனக்கு அதில் ஒரு சின்ன ஆசை! தங்களைப் பற்றி தவறான தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன என்று நினைப்பவர்கள் காவல்துறையில் புகார் செய்வதில் நியாயமுண்டு. ஆனால் நூற்று முப்பது பேர் என்றால் ...? சரியாகப் புரியவில்லை! அத்தனை பேரா சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கேட்க வேண்டியுள்ளது!
சரி அதை விடுவோம். புகார் செய்தவர்கள் யார் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள்?
பொதுவாக செய்திகளைப் படிக்கும் போது இந்தியர், சீனர் புகார் அளித்திருப்பார்கள் என நம்ப இடமில்லை. அப்படியானால் ஏன் மலாய்க்காரர் மட்டும் என்னும் கேள்வி எழுகிறது.
இங்கு மலாய்க்காரர் என்னும் போது அது அம்னோ கட்சியினர் பற்றியே பேசுகிறோம். மலாய்க்காரர் யாருக்கும் இதில் அக்கறை இல்லை. அம்னோ அரசியல்வாதிகள் தான் தங்களுக்கு அதிக அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்பவர்கள்! காரணம் அவர்கள் தானே ஆண்டு அனுபவித்தவர்கள்! அதனால் தான் அவர்கள் எதற்கெடுத்தாலும் அரண்டு போகிறார்கள்!
இருந்தாலும் உண்மை நிலவரம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. அப்படியே படித்தாலும் என்ன செய்து விட முடியும்? புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறதோ அது அவருடைய கருத்து. எழுதப்பட்டது, எழுதப்பட்டது தான்! இனி மேல அவராலும் மாற்ற முடியாது நம்மாலும் மாற்ற முடியாது!
பொறுத்திருப்போம்!
Thursday, 11 February 2021
மூன்று நாள் போதுமா!
வேலை காரணமாக வெளி நாடு போய் வரும் அமைச்சர்கள் திரும்பி வரும் போது மூன்று நாள்கள் தனிமைப்படுத்தினாலே போதும் என்கிற சுகாதார அமைச்சரின் அறிவிப்பு அபாயகரமானது என்று பல்வேறு தர்ப்பிலிருந்து எதிர்ப்புக் குரல் எழுந்திருக்கிறது!
நம்மைப் போல் சராசரி மனிதராக இருந்தால் இதிலும் எதுவும்அரசியல் உள்ளதோ என்று யோசிப்போம்! அது தான் நமது இயல்பு! அதுவும் உண்டு. இல்லையென்று ஒதுக்கிவிட முடியாது!
ஆனால் இந்த அறிவிப்பைக் கடுமையாக எதிர்த்திருக்கிறது மலேசிய மருத்துவ கல்விக் கழகம். அதே சமயத்தில் மலேசிய மருத்துவ சங்கமும் தனது கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்திருக்கிறது.
சராசரி மலேசியர்களைப் பொறுத்தவரை இந்த தொற்று நோயின் ஆரம்ப காலக் கட்டத்திலிருந்து மற்ற நாடுகளின் நடைமுறையைத் தான் மலேசியா பின் பற்றி வந்திருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் 14 நாள்கள் என்றால் அது 14 நாள்கள் தான். அது தான் நிருபிக்கப்பட்டது. அந்த நடைமுறையைத் தான் நாம் பின் பற்றி வருகிறோம். எந்த எதிர்ப்பும் இல்லாமல் மக்களும் பின் பற்றுகிறார்கள். ஒரே காரணம். உலக நாடுகள் அனைத்தும் அதனையே பின் பற்றி வருகின்றனர்.
இப்போது மூன்று நாள்களாக குறைப்பதற்கு அதற்கு அறிவியல் ஆதாரம் வேண்டும். அமைச்சர்கள், வணிகர்கள், அரசியல்வாதிகள் அனைவருக்கும் மூன்று நாள்கள் போதும் என்று சுகாதார அமைச்சு புதிய நடைமுறையைக் கொண்டு வந்தால் அது அரசியல்வாதிகளின் குறுக்கு வழி முறை! அது அறிவியல் நடைமுறையல்ல. அரசியல்வாதிகளின் நடைமுறை!
உலக சுகாதார நிறுவனத்தின் நடைமுறைகளைத்தான் நாம் பின்பற்ற வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் கண்டுபிடிக்கிற தான்தோன்றித்தனமான நடைமுறைகளை அல்ல!
கொல்லைப்புற வழியாக ஆட்சி அமைக்கும் ஓர் அரசாங்கம் எப்படியெல்லாம் நடந்து கொள்ளும் என்பதற்கு பெரிக்காத்தான் அரசாங்கம் ஓர் எடுத்துக்காட்டு!
இதனையெல்லாம் கேட்டால் உடனே சமயத்திற்கு எதிரி, இனத்திற்கு எதிரி என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள்!
மூன்று நாள் போதுமா? போதாது! உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்லுகிறதோ அதனையே கடைப்பிடிப்போம்!
ஒரு மாணவருக்கு ஒரு கணினி!
பினாங்கு மாநிலத்தில் உள்ள பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி சரியான ஒரு திட்டத்தை வகுத்து ஒரு மாணவருக்கு ஒரு கணினி என்கிற முறையைத் தொடங்கி உள்ளது!
நமக்கு அதுபற்றியான சரியான தகவல்கள் இல்லையென்றாலும் அவர்களின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் அதனைச் சரியான வழியில் கொண்டு செல்ல "துணிப்பை திட்டம்" ஒன்றை ஆரம்பித்திருக்கிறது.
மீண்டும் சொல்லுகிறேன். அது ஒரு சரியான திட்டம் என்பதால் தான் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து அந்த திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
"நம் கையே நமக்கு உதவி" என்பது தான் இதன் பொருள். எல்லாமே ஒரு கூட்டு முயற்சி தான்.
எல்லாவற்றுக்கும் ஒரு வழி உண்டு. தேடினால் அந்த வழி நமக்குத் தெரியும். நாம் தேடுவதில்லை.
ஒரு சில பள்ளிகளில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. ஏழைப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு அப்படி ஒன்றும் எளிதாக கணினி வாங்கி விட முடியாது.
அதுவும் இன்றைய சூழலில் பெற்றோர்கள் பல பிரச்சனைகளை எதிர் நோக்குகிறார்கள். அதில் வேலையில்லா பிரச்சனை என்பது தலையாயது.
வயிற்றுப்பாட்டுக்கே பிரச்சனை என்னும் போது பிள்ளைகளின் கல்விக்காக கணினி வாங்கச் சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள்?
அவர்களின் "துணிப்பை திட்டம்" என்பது சரியான திட்டம் என்பதால் தான் பொது மக்களின் ஆதரவும் அவர்களுக்கு வெற்றிகரமாகக் கிடைத்திருக்கிறது.
நல்ல திட்டங்கள் போட்டு செயல்படும் போது பொது மக்கள் நிச்சயமாக ஆதரவு கரம் நீட்டுவார்கள்.
இந்த துணிப்பை திட்டத்தின் மூலம் எல்லா மாணவர்களும் - சுமார் 130 மாணவர்கள் - பயனடைகிறார்கள். அவர்களின் கணினி தேவை பூர்த்தியாகிறது. அதைவிட ஒரு பள்ளி என்ன செய்து விட முடியும்?
வாழ்த்துகிறோம்! பெற்றோர் ஆசிரியர் சங்கம், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரையும் வாழ்த்துகிறோம். இன்றைய நமது தேவை எல்லாம் இந்த கூட்டு முயற்சி தான்.
தலைமையாசிரியர் சங்க சின்னையா அவர்களை மனதாரப் பாராட்டுகிறோம்! தொடர்பு:(019-4494914)
ஒரு மாணவன் ஒரு கணினி!
ஸ்ரீஅபிராமி தனது இலட்சியத்தை அடைவார்!
பனிச்சறுக்கு வீராங்கனை சிறுமி ஸ்ரீஅபிராமி தனது இலட்சியத்தை அடைவார் என உறுதியாக நம்புகிறோம்.
பல பொருளாதாரச் சிக்கல்களை எதிர்நோக்கியிருந்த அவரது பெற்றோர்கள் இப்போது கொஞ்சம் தற்காலிகமாவது நிம்மதி அடையளாம்.
ஸ்ரீஅபிராமி அறவாரியத்தின் சார்பில் திரட்டப்பட்ட நிதி இதுவரைக் கிட்டத்தட்ட ஐந்தரை இலட்சம் வெள்ளி என்று அறவாரியத்திற்குப் பொறுப்பேற்றிருக்கும் ஓம்ஸ்.பா.தியாகராஜன் கூறியுள்லார்.
ஓம்ஸ். பா. தியாகராஜன் ஏற்கனவே தனது சொந்த செலவில் ஸ்ரீஅபிராமியின் பயிற்சிகளுக்கு பெரும் அளவில் உதவியுள்ளார். சமீபகாலம் வரை அபிராமியின் தந்தையார் தனது சொந்த வீட்டை விற்று மேலும் பயிற்சிக்காக செலவுகள் செய்துள்ளார்.
ஒன்றை நினைத்து நாம் வியக்கிறோம். நமது குடும்பங்களில் தங்களது பிள்ளைகளைப் படிக்க வைக்க - அதாவது மருத்துவம் பயில - வீட்டை விற்றார்கள், நிலத்தை விற்றார்கள் என்று தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தனது குழந்தை பனிச்சறுக்கு விளையாட்டில் உலகளவில் வெற்றி வீராங்கனையாக வலம் வர வேண்டும் என்று தனது மகளுக்காக இத்துணை இடர்களையும், துன்பங்களையும் தாங்கிக் கொண்டு தொடர்ந்து போராடி வருகிறாரே! அவர் தனது மகளின் மேல் வைத்திருக்கும் அன்பையும், பாசத்தையும் என்னவென்று சொல்லுவது? மகளின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் ஒரு தந்தையின் போராட்டம் அது! அதற்கு ஈடு இணையில்லை!
ஸ்ரீஅபிராமியின் கனவு மெய்ப்பட அவரின் அறவாரியத்திற்கு எழாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் நிதி வழங்கியுள்ளனர். இது முடிவல்ல. இன்னும் தொடரும். ஒரு பத்து இலட்சமாவது கையில் இருந்தால் இன்னும் தெம்பாக இருக்கும்.
அரசாங்க உதவி, ஆளுங்கட்சியின் உதவி என்பது உதட்டளவில் அதிகம். அதனால் பொது மக்களின் உதவியே முக்கிய தேவை. இந்தியர் ஒன்று சேர்ந்தால் எதனையும் சாதிக்க முடியும். இப்போது நாம் அதனை நிருபித்து வருகிறோம். இந்த "ஒன்று" என்பதை நாம் தொடர்ந்து நிருபிக்க வேண்டும்.
வருகின்ற குளிர்கால ஒலிம்பிக்கில் அவர் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும். அதுவே நமது பிரார்த்தனை.
Wednesday, 10 February 2021
ஏன்? இப்போது புரிகிறது?
ஒரு சில முக்கிய பொறுப்புகளை மலாய்க்காரருக்கே கொடுக்கப்பட வேண்டும் என்று அம்னோ அரசியல்வாதிகள் கூறுவது ஏன் என்பது இப்போது நமக்குப் புரிகிறது!
முன்னாள் சட்டத்துறைத் தலைவர், டோமி தோமஸ் எழுதிய புத்தகத்திற்குப் பிறகு தான் நமக்கு இந்த இரகசியம் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது1
மலாய்க்காரர் ஒருவர் பதவியில் இருப்பது அரசியல்வாதிகள் தங்கள் நலனுக்கு நல்லது என்று நினைக்கிறனர். தாங்கள் சொல்லுவதைக் கேட்க ஓர் ஆள் தேவை என்பதில் அவர்கள் அதிக அக்கறைக் காட்டுகின்றனர்.
சட்டத்துறைத் தலைவராக ஒரு மலாய்க்காரர் இருந்தால் அவர்களை எப்படித் தங்களுக்காக, தங்கள் நலனுக்காக, தங்கள் சுயநலனுக்காக, தாங்கள் செய்யும் தவறுகளுக்காக, அரசாங்கத்தை ஏமாற்றும் செயல்களுக்காக எப்படி அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்காக தங்களைச் சார்ந்த இனத்தவர் ஒருவர் இருப்பது தான் நல்லது என்று அவர்கள் நினைக்கின்றனர்! அவர்கள் ஒருவருக்கு ஒருவர் 'விட்டுக்கொடுத்துப்' போவது எளிது என்று அவர்கள் நினைக்கின்றனர்.
இதைத்தான் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரும் உறுதிபடுத்தியிருக்கிறார்! தான் தெர்ந்தெடுத்த முன்னாள் சட்டத்துறைத் தலைவர்கள் ஒரு சில விஷயங்களில் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்பதாக அவர் கூறியிருக்கிறார். குறிப்பாக முன்னாள் பிரதமர் நஜிப்பின் ஊழல் விஷயத்தில்!
சட்டத்துறைத் தலைவர்களின் நடவடிக்கைகளைப் பின் நோக்கிப் பார்க்கும் போது இந்த 'விட்டுக்கொடுத்துப்' போவது என்பது தொடர்ந்தாற் போல் நடந்து கொண்டு தான் வந்திருக்கிறது!
ஆனால் பொது மக்களுக்கு அது புரியவில்லை. ஏதோ இன விவகாரம் பேசுவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றனர்!
அடாடா! இந்த அரசியல்வாதிகளுக்கு உள்ள மூளை உலகத்தில் யாருக்குமே இல்லாத மூளை! அது எப்படி வேலை செய்யும் என்பது அவ்வளவு எளிதாக யாருக்கும் புரியாது.
ஓர் அரசியல்வாதி என்றால் அவனுக்கு நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று, சமயப்பற்று - எதுவுமே இல்லாத ஒரு ஜீவன்! அவனுக்குத் தெரிந்தது எல்லாம் பணம்! பணம்! பணம்! இவ்வளவு சம்பாதிப்பவன் கடைசியில் மூலையில் முடங்கிப் போவதைத் தவிர அவனுக்கு எதுவும் மிஞ்சப் போவதில்லை!
ஒரு சில விஷயங்கள் மலேசிய அரசியலில் நமக்குப் புரிவதில்லை. அதனைப் புரிய வைத்துவிட்டார் டோமி தோமஸ் தனது புத்தகத்தின் மூலம்!
Tuesday, 9 February 2021
மகள் படிப்புக்காக தாய் கையேந்துகிறார்
Monday, 8 February 2021
உணவகங்களுக்கு வாழ்வு கொடுங்கள்!
Sunday, 7 February 2021
அவசரப்படாதீர்கள்!
சில சமயங்களில் ஒரு சில ம.இ.கா.வினர் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு விடுகின்றனர். ஏதோ காணாததை கண்டுவிட்டது போல!
பினாங்கு மாநிலத்தில் நடந்த தைப்புசம் பற்றி தான் சொல்ல வருகிறேன். எம்.ஓ.சி. அமலில் இருந்த நேரம். மாநிலம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம். அந்த நேரத்தில் தான் ம.இ.கா.துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தைப்பூச ஊர்வலத்திற்கு மத்தியிலிருந்து அனுமதி வாங்கிக் கொடுத்தார். ஆணையைப் போட்டவர்களும் அவர்கள் தான் அனுமதி கொடுத்தவர்களும் அவர்கள் தான்!
இப்படி நடந்திருக்கக் கூடாது! ஆனால் அங்கும் ஒரு சிறிய அரசியல் விளையாட்டை மத்தியில் நடத்தினார்கள்! மத்திய அரசாங்கத்திற்கு மாநில அரசாங்கத்தை மட்டம் தட்ட வேண்டும். சரவணனுக்கு பேராசிரியர் இராமசாமியை மட்டம் தட்டம் வேண்டும்! இப்படி ஒரு அல்பத்தனமான ஆசை!
நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இங்கு மோதிக் கொண்டவர்கள் யார்? ராமாசாமி-நாட்டுக்கோட்டை செட்டியார்கள்- சரவணன் ஆக இந்த மூன்று தரப்பும் தமிழர்கள்! தமிழர்கள் மோதிக் கொள்ளுவதைப் பார்த்து ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம்! ஆகா! கண்கொள்ளா காட்சி!
இதைத்தான் ம.இ.கா.வினர் "ஆகா! ஓகோ!" வென்று முகநூல் எதனையும் விட்டு வைக்காமல் இந்த வெற்றி செய்தியைல் பரப்போ பரப்பு என்று பரப்பி வருகின்றனர்! இந்த சோதனை காலத்தில் இதனை ஒரு சாதனையாக நினைப்பது தான் நமது அசிங்கம் வெளிப்படுகிறது!
இப்படி சாதனையாக நினைப்பவர்கள் கெடா மந்திரி பெசார் தைப்பூச விடுமுறையை இரத்து செய்தாரே அப்போது எங்கே போயினர்? இதெல்லாம் வெட்கங்கெட்ட அரசியல்! அப்போதும் சரவணன் அங்கே தானே இருந்தார்!
அப்படியே அவர் பெற்றுக் கொடுத்திருந்தாலும் நான் அது ஒரு சாதனை என்று சொல்லமாட்டேன்! ஏன்? அது வழக்கம் போலத் தானே!
ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் ம.இ.கா. பக்கமிருந்து எந்த ஒரு சாதனையும் வரப்போவதில்லை! அவர்கள் அதற்கு மேல், மேலே, உயரே, உயரே போய்விட்டனர்! இந்திய சமுதாயத்திற்கு உதவும் அளவுக்கு அவர்களிடம் சரக்கு எதுவுமில்லை!
இந்தியர்களின் ஆர்வம் எப்படி ம.இ.கா. வின் மேல் தளர்ந்து போனதோ அதே போல அவர்களுக்கும் இந்தியர்களின் மேல் உள்ள ஆர்வம் தளர்ந்து போனது என்பதை மறக்க வேண்டாம்!
அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு தான் அரசியலில் அவர்கள் நீடிப்பார்களா என்பது நமக்குப் புரிய வரும்.
சும்மா தேவை இல்லாமல் அவசரப்பட்டு அவர்களைப் பாராட்ட வேண்டாம். நல்லது செய்தால் பாராட்டுவோம்! இப்போது உள்ள நிலையில் அவர்களிடமிருந்து எந்த ஒரு உதவியும் - குறிப்பாக பொருளாதார உதவி - எதிர்பார்க்க முடியாது.
ம.இ.கா. வினரால் ஏதோ ஒன்று கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பாராட்டத்தான் செய்வார்கள்! அதை நீங்கள் நேரடியாகவே செய்யலாம்!
காலத்தால் செய்த உதவி!
நாம் பல வழிகளில் பலருக்கு உதவியாக இருந்திருக்கலாம். ஆனால் அது பெரிதல்ல.
தேவையான நேரத்தில் தேவையான உதவியைச் செய்வதே எல்லா உதவிகளிலும் சிறந்த உதவி.
கெடா மாநிலத்தைச் சேர்ந்த தர்ஸாவனி சேகர் இந்தோனேசிய உதாயான மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் ஆண்டு மருத்துவ மாணவி. அவர் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கலினால் மூன்று தவணைகள் கல்விக் கட்டணத்தைக் கட்ட முடியாத சூழ்நிலையில் அவர் தனது வாட்ஸ்ஸப் மூலம் மலேசியர்களில் உதவியை நாடி உள்ளார்.
அந்த கட்டணத்தைக் கட்ட தவறினால் அவர் படித்த படிப்பு எல்லாம் ஒன்றுக்கும் உதவாமல் போகும். இந்த செய்தியின் உண்மைத் தன்மையை அறிந்த கெடா மாநில சமூக ஆர்வலர் ஜி.கே.குணா அதற்காக இந்திய சமூகத்தினரின் உதவியை நாடி அந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டுள்ளார் என்பது பெருமைக்குரிய விஷயம்.
அந்த சமூக ஆர்வலர் அந்த காரியத்தை முன்னெடுத்தார். இந்தியர்கள் அந்த மாணவிக்கு உதவ முன் வந்தனர். அந்த மாணவியின் பொருளக வங்கிக் கணக்கில் போதுமான நிதியை அனுப்பி வைத்தனர்.
இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு என நான் நம்புகிறேன். நாம் ஒன்று சேர்ந்தால் நடக்காததும் நடக்கும். இப்படி எத்தனையோ மாணவர்கள் கடைசி நேரத்தில் பணம் பற்றாக்குறையால் படிக்க முடியாமல் நாடு திரும்பி விட்டனர்.
நாம் ஒன்று சேர்ந்தால் அது பலம். கெடா இந்தியர்கள் அதனைச் சாதித்திருக்கின்றனர். நாம் யாரும் சாதிக்கலாம். அரசியல்வாதிகள் உதவ முடிந்தால் நல்லது. அரசாங்கம் உதவ முடிந்தால் நல்லது.
அவர்கள் உதவ முன் வரவில்லையென்றால்...? நாம் தான் உதவுவதை முன்னெடுக்க வேண்டும்....! அரசியல்வாதிகளை நம்புவதை குறைத்துக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் சொல்வதைத்தான் அரசாங்க கேட்கும்!
எல்லாவற்றையும் விட நம்மை நாமே நம்ப வேண்டும். ஒன்று சேர்ந்தால் தான் உயர்வு. எல்லாப் பிரச்சனைகளையும் நாம் ஒன்று சேர்ந்தால் தீர்த்துவிடலாம். எல்லாப் பிரச்சனைகளிலும் நமக்கு கருத்து வேறுபாடுண்டு. ஆனால் கல்விப் பிரச்சனையில் மட்டும் கருத்து வேறுபாடு இருக்கக் கூடாது.
என்ன தான் ஒருவனை நமக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கல்வி, கல்வி உதவி என்று வரும் போது நாம் அவனுக்கு உதவ வேண்டும். அவன் கல்வியைக் கற்றுக் கொண்டால் அவன் சிந்திப்பான். அதுவே நமது வெற்றி!
கெடா இந்திய மக்களுக்கு நன்றி! முன் எடுத்த ஜி.கே. குணாவுக்கு நன்றி! இரண்டு கைகள் தட்டினால் தான் ஓசை என்பதை மெய்ப்பித்து விட்டீர்கள்!
Saturday, 6 February 2021
விடுதலைப் புலிகளின் மேல் ஏன் இந்த காட்டம்!
டோமி தாமஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள தனது புத்தத்தில் குறிப்பிட்டபடி முந்நாள் அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்த முகைதீன் யாசின் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் மேல் ஏன் அளவற்ற எதிரியாக தன்னைக் காண்பித்துக் கொண்டார் என்பது தெரியவில்லை!
புலிகளின் ஆதரவாளர்கள் என்று கைது செய்யப்பட்ட அந்த 12 பேரையும் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யக் கூடாது என்பதில் அவர் அதிகத் தீவிரமாக இருந்தார் என்பதாக டோமி குறிப்பிட்டிருக்கிறார்.
ஏன்? எதனால்? இப்படி ஒரு நிலை அவருக்கு என்பது நமக்குப் புரியவில்லை. உண்மையில் அமைச்சருக்கு யார் மேல் அந்த அளவுக்குக் கோபம்? விடுதலைப்புலிகளின் மீதா? தமிழர்கள் மீதா? ஜ.செ.க. மீதா? இத்தனைக்கும் அவர் உள்துறை அமைச்சராக இருக்குக் காரணமே ஜ.செ.க. வும் அவருக்குக் கொடுத்த ஆதரவும் ஒரு காரணம்
விடுதலைப் புலிகளைப் பற்றி எந்த அளவுக்கு அவர் அறிந்தவர்? அரசாங்கம் கொடுக்கின்ற விளக்கத்தின் மேல் அவருக்கு வேறு எதையும் தெரிய வாய்ப்பில்லை! அப்படி தெரிந்தாலும் அவருக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை!
விடுதலைப் புலிகளின் இயக்கம் என்பது இப்போது இல்லை. அதனை மாபெரும் சாம்ராஜ்யங்கள் சேர்ந்து ஒடுக்கிவிட்டன. அது நீர்த்துப் போன ஓர் இயக்கம். அதற்கு உயிர் கொடுக்க எந்த வாய்ப்புமில்லை. இல்லாத ஓர் இயக்கத்திற்காக 12 தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்று சொல்லி அவர்களைச் சிறையில் அடைத்து நமது அரசாங்கம் தமிழர்களைக் கேவலப்படுத்தியது தான் மிச்சம்.
கையில் அதிகாரம் இருந்தால் கையாலாகதவன் கூட கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பேசுவான்! கையில் அதிகாரத்தை வைத்துக் கொண்டு முகைதீன் ஆட்டம் அதிகமாகவே ஆடிவிட்டார்! இன்றைய அரசாங்கத்திலும் அவர் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறார்!
தமிழர்கள் மீது அவருக்கென்ன அப்படி கோபம்? அவர்கள் என்ன நாட்டின் மீது விசுவாசம் அற்றவர்களாக இருந்தார்களா? இருக்கிறார்களா? நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடித்தார்களா? அவர் நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடித்த அளவுக்கு எந்த தமிழனாவது கொள்ளையடித்திருப்பானா!
தமிழர்கள் மீது கோபப்படுகிற அளவுக்கு அவர்கள் கெட்டவர்களாக இருந்ததில்லை என்பது தான் உண்மை!
ஜ.செ.க. கட்சியின் மீது அவருக்குக் கோபம் இருக்கலாம். அது சீனர்கள் கட்சி என்பது தான் மலாய் அரசியல்வாதிகள் வைக்கின்ற குற்றச்சாட்டு! அது அரசியல்வாதிகள் மட்டுமே! ஆனால் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து தானே அரசாங்கம் அமைத்தீர்கள். சீனர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமலா இருந்தார்கள்!
ஓர் அமைச்சர் இந்த அளவுக்குத் தன்னை தாழ்த்திக் கொள்வார் என்று நம்ப முடியவில்லை! கைது செய்வதற்கு சரியான காரணங்கள் இருக்க வேண்டும். தமிழர் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருந்தார்கள், நினைவு நாள் கொண்டாடினார்கள் என்பதெல்லாம் ஒரு காரணமா! உலகத் தமிழர்கள் இன்றளவும் அதைச் செய்து கொண்டு தானே இருக்கிறார்கள்!
அவருக்குத் தமிழர்கள் மீது கோபம் என்பதைவிட ஜ.செ.க. மீது அவருக்குக் கோபம் என்பதாகவே நினைக்கிறேன்! ஆமாம் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் முக்கிய பதவிகளை தாரை வார்த்து விட்டோமே என்கிற அவரின் கோபமே இதற்குக் காரணமாக இருக்கலாம்!
ஆனால் அதற்காக விடுதலைப் புலிகள் உயிரோடு வந்து விட்டார்கள் என்று சொல்லி அடித்து கூத்து இருக்கிறதே - இப்படி செய்ய உங்களால் மட்டுமே முடியும்!
இது தவறான உதாரணம்!
செர்டாங் பகுதியில் காவால்துறையைச் சேர்ந்த காவல்துறைத் தலைவர் ஒருவர் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என கைது செய்யப்பட்டிருக்கிறார்!
மிகவும் வேதனைக்குரிய செய்தி. ஒரு தலைவரே இப்படி இருக்கிறார் என்றால் அவருடன் வேலை செய்யும் மற்ற அதிகாரிகளின் நிலை என்ன என்னும் கேள்வி எழுகிறது.
வேலியே பயிரை மேய்கிறது என்பார்கள். அது இது தான். இதைவிட வேறு எடுத்துக்காட்டுகள் தேவை இல்லை.
கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு தனியார் விருந்தில் அந்த காவல்துறைத் தலைவரும் அவருடன் இன்னும் ஏழு காவல்துறையைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் அவர்கள் பரிசோதனைக்குள்ளாயினர்.
அந்த தலைவர் ஷாபு போதைப்பொருள் உட்கொண்டிருப்பதை சோதனைக்குப் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் மற்ற எழுவரும் போதைப்பொருள் உட்கொண்டிருக்கவில்லை.
அந்த காவல்துறை அதிகாரி இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இது தான் முதல் முறையாக காவல்துறையில் ஏற்பட்ட சம்பவம் என்று சொல்வதற்கில்லை. ஏற்கனவே நடந்தவைகள் தான். இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
ஆனால் அவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளாக இருப்பதில்லை. ஆனால் இப்போது அதுவும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டன!
இது ஓர் ஆபத்தான் சூழல். மிகவும் கண்டிக்கத் தக்க ஒரு செயல். அதிகாரிகள், தலைவர்கள் இப்படி இருந்தால் அவருக்குக் கீழ் பணிபுரிபவர்கள் எப்படி இருப்பார்கள் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை!
இவர்களைப் போன்று போதைபித்தர்களான அதிகாரிகள் கையில் ஓர் நிரபராதி அகப்பட்டாலும் தாங்கள் விரும்பியபடி தண்டனையைக் கொடுத்து விடுவார்கள்! சிறைகளுக்குள் சட்டம் அவர்கள் கையில்!
நிச்சயமாக இது ஒரு இக்கட்டான சூழல். ஆனால் காவல்துறை இவர்களை எப்படிக் கையாள்வது என்பது தெரியும். சட்டப்படி அவர்களும் தண்டனைகளை எதிர் நோக்க வேண்டி வரும்.
யாராக இருந்தாலும், தவறு செய்தால், தண்டனை பெறுவர். அதில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால் இந்த தலைவர் போன்றவர்கள் காவல்துறைக்குத் தவறான உதாரணம் என்று சொல்லுவதில் தப்பில்லை!
டோமியின் புத்தகத்திற்குத் தடையா!
Friday, 5 February 2021
சொத்து சேர்ப்பவர்கள் கால நேரம் பார்ப்பதில்லை!
சொத்து சேர்ப்பவர்கள், சொத்து வாங்குபவர்கள், முதலீடு, பணம் - இந்த நோக்கம் உள்ளவர்கள் வாய்ப்புக்களை வைத்த கண் வாங்காமல் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பார்கள்! அவர்கள் என்ன நிலையில் இப்போது இருக்கிறார்கள் என்பதைக் கூட மறந்து விடுவார்கள்!
கைகளில் பெரும் தொகை இல்லாமல் இருக்கலாம். பண நெருக்கடியில் கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் எந்த காலத்திலும் தங்களது முதலீடுகளை நிறுத்தி விடுவதில்லை! அது சிறிய தொகையாக இருந்தாலும் பாதகமில்லை. ஆனால் முதலீடு செய்வதில் மட்டும் தளர்வதில்லை! தங்களுக்குத் தெரிந்த, தங்களுக்கு முடிந்த ஏதோ ஒன்றில் தங்களது பணத்தை முதலீடு செய்வார்கள்.
ஒரு வேளைை அதன் மூலம் உடனடி பலன்்இல்லாமல் இருக்கலாம். ஆனால் பணம் பாதுகாப்பாக இருக்கிறது ஒன்றே போதும்.
இப்போது அரசாங்கம் ஊழியர் சேமநிதியிலிருந்து - கோவிட்-19 காரணமாக - மக்களின் நிதி சுமையைக் குறைக்க நிதியிலிருந்து பணம் எடுக்க வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.
அது பெரும்பாலும் குறைந்த வருமானம் பெறுவோர், நடுத்தர குடும்பங்கள் அத்தோடு அதிகம் வருமானம் பெறுவோர் இப்படி அனைவருமே தங்களது சேமிப்பிலிருந்து பணம் எடுக்கலாம். ஏனெனில் சிரமம் என்பது அனைவருக்கும் பொதுவானது தானே!
ஆனாலும் ஒரு சிலர் மாற்றி யோசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இது ஒரு நல்ல வாய்ப்பு. மொத்தமாகக் கிடைக்கும் பணத்தை முதலீடுகளில் போடலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. இப்போது அதுவும் நடந்து கொண்டிருக்கிறது
இவர்கள் பெரும்பாலும் தங்கத்திலும் பங்கு சந்தைகளிலும் முதலீடு செய்கின்றவர்களாக இருக்கிறார்கள்.
ஒரு சிறிய கருத்துக் கணிப்பில் சம்பந்தப்பட்டவர்களால் சொல்லப்பட்டவை இவைகள் தாம்:
முதல் நிலையில் அதிக வருமானம் பெறுவோர் (T20) 47.7% விழுக்காடு முதலீடுகளுக்காகவே சேமநிதியிலிருந்து பணத்தைப் பெற்றிருக்கின்றனர்.
இரண்டாம் நிலையில் நடுத்தர வருமானம் பெறுவோர் (M40) சுமார் 31.1% விழுக்காடு பணத்தைப் பெற்றிருக்கின்றனர்.
மூன்றாம் நிலையில், மிகக் குறைவான வருமானம் பெறுவோர்(B40) சுமார் 35.3% விழுக்காடு முதலீடுகளுக்காகவே பணத்தைப் பெற்றிருக்கின்றனர்.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது நடுத்தர வருமானம் பெறுவோரை விட கீழ் நிலையில் உள்ள குறைவான வருமானம் பெறுவோர் கொஞ்சம் அதிகமாகவே முதலீடுகள் செய்திருக்கின்றனர்! அது இயற்கையாகவே அவர்களுக்கு உள்ள துணிவு தான்!
ஆனால் சேமநிதியின் பணம் எந்த குறிக்கோளுக்காக கொடுக்கப்பட்டதோ அந்த குறிக்கோளுக்காக பயன்படுத்தியவர்கள் சுமார் 48.6% விழுக்காடு! அதாவது தங்களது அன்றாட தேவைகளுக்காக அதனைப் பயன்படுத்தியவர்கள்.
ஒன்று புரிகிறது. எந்த நிலையிலும் நம்மால் வாழ முடியும் என்னும் நம்பிக்கைத் தெரிகிறது!