Monday, 31 January 2022
சந்தோஷம் தரும் சவாரி போவோம் சலோ சலோ!
கட்டுமானப் பணிகளை நிறுத்துக!
முதல் எதிரி யார்?
ஆளுங்கட்சியினர் யாரும் வாய் திறப்பதில்லை.! அனைவருக்கும் பங்கு உண்டு என்பதால் அவர்கள் மௌனம் காக்கின்றனர். எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புகின்றனர். அவர்களையும் நம்புவதாக இல்லை.
பொது அமைப்புக்கள் களத்தில் இறங்கியிருக்கின்றனர். காவல்துறை அவர்களைப் பயமுறுத்துகிறது! கைது செய்கிறது! விசாரணை என்று சொல்லி விபரீதமாக நடந்து கொள்கிறது!
"எங்களை யாரும் ஒன்றும் புடுங்க முடியாது!" என்று அரசியல்வாதிகள் தொடர்ந்து படு இறுக்கமாக ஆணிகளை அடித்துக் கொண்டிருக்கின்றனர்! அது நமக்குப் பட்டவர்த்தனமாகப் புரிகிறது! ஆனால் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை!
சமீபத்தில் மித்ரா அமைப்பில் ஊழல் என்று சொல்லி எத்தனையோ பேரை கைது செய்தனர். ஆனால் ஒருவர் பெயர் கூட வெளியாகவில்லை! அத்தனை இரகசியம்! இதில் எத்தனை பேர் ஆளுங்கட்சியில் அல்லது எதிர்க்கட்சியில் போட்டியிடுவார்களோ! அப்படியே தேர்தலில் வெற்றி பெற்றால் அவன் திருடன் என்பதெல்லாம் போய் அவன் யோக்கியனாகி விடுவான்! நாம் அவனை டத்தோ! இத்யாதி! இத்யாதி! அப்பப்பா! என்னமா நடிக்கிறார்கள்!
நாட்டில் நீதி, நியாயம் நாட்டு நலன், இன நலன், மொழி நலன் என்பதெல்லாம் போய் இப்போது பண நலன் என்பதில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது! பதவியில் இருக்கும் போதே கொள்ளையடித்து பிள்ளைகளை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பக்கம் விரட்டிவிட வேண்டும் என்பதைத்தான் ஒவ்வொரு அரசியல்வாதியின் கனவாக இருக்கிறது!
அப்படி என்றால் என்ன அர்த்தம்? இந்த நாட்டின் முன்னேற்றம் என்பதை அரசியல்வாதிகள் விரும்பவில்லை. தரமான கல்வி வேண்டும் என்பதை அவர்கள் விரும்பவில்லை. நாடு குட்டிச்சுவராகப் போனால் எனக்குக் கவலையில்லை; நான் சேர்த்து வைத்த பணம் ஏழு தலைமுறைக்கு வரும், 'அது போதும்'என்று நினைக்கிறார்கள்!
ஆனால் ஒன்றை மறந்து விட்டார்கள். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சாபமும் ஏழு தலைமுறைக்குத் தொடரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.` நீங்கள் இருக்கும் போதே உங்கள் குடும்பங்கள் விளங்காமல் போகும் என்பதையும் மறந்து விடாதீர்கள்!
இலஞ்சம், ஊழல் என்று வரும்போது நமது நாடு பெருமைப்படும்படியாக ஒன்றும் இல்லை. உலக நாடுகள் வரிசையில் இன்னும் கீழே கீழே சரிந்து கொண்டு போகிறோம். அரசியல்வாதிகளுக்கு அது கேவலம் இல்லையென்றாலும் பொது மக்களுக்கு அது கேவலம் தான். திருடனுக்குத் தேள் கொட்டினால் கூட அதைத் தட்டிவிட்டு போய்க்கொண்டே இருப்பான்! அது தான் அரசியல்வாதி! மானம் ஈனமற்ற ஒரு ஜென்மம்!
நாட்டின் முதல் எதிரி என்றால் அது ஊழல் தான். அதுவும் இப்போது அது அசுர வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது! மக்களே! பொங்கி எழுங்கள் என்றால் அதுவும் குற்றமாகி விடுகிறது! முடிந்தவரை பொது அமைப்புகளுக்காவது நமது ஆதரவை கொடுப்போம்!
Sunday, 30 January 2022
செயல்படாத சங்கங்கள்!
விளையாட்டுத்துறை துணை அமைச்சரின் சமீபத்திய அறிவிப்பு நகைப்புக்குரியதாக இருந்தாலும் அதே சமயத்தில் நமக்கு வலியுள்ளதாகவும் இருக்கிறது.
நாட்டிலுள்ள சுமார் 11,000 விளையாட்டுச் சங்கங்களில் 8,000 சங்கங்கள் செயலற்றுக் கிடப்பதாக அறிவித்திருப்பானது உள்ளபடியே உண்மை நிலவரத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
கேட்பதற்கு ஏதோ தமாஷான ஒரு செய்தியாக எடுத்துக் கொண்டாலும் அதன் பின்னால் எத்தனை கோடிகள் கைமாறியிருக்கும், எத்தனை கோடிகள் வீணடிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கும் போது மனம் வலிக்கிறது.
பணத்தை வீணடிக்கிற நிலையிலா நாடு இருக்கிறது? இப்போது கொரோனோ வந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இயங்கவில்லை என்றால் மக்களுக்கு வேலை இல்லை. வேலை இல்லை என்றால் குடும்பத்திற்குச் சாப்பாடு போட வழியில்லை. பிள்ளைகள் பள்ளிக்குப் போக வழியில்லை. அனைத்து நிலையிலும் நாடு ஸ்தம்பித்து விட்டது.
அடுத்து வந்தது பெரு வெள்ளம். புயல், காற்று, மழை என்று ஒரு சுற்று வந்தது~ கோடிக்கணக்கில் பணம் விரயம். மக்கள் கையில் பணம் இல்லை. பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. மக்கள் எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர்.
மக்கள் கையில் பணம் இல்லை. அரசாங்கத்திடம் பணம் இல்லை. மக்கள் பணத்தை விரயம் செய்ய வேண்டுமென்றே அமைந்த ஓர் அரசாங்கம். அசாங்கத்திடம் பணம் இல்லையென்று சொன்னாலும் அரசியல்வாதிகளுக்கு மட்டும் கோடிக்கணக்கில் பணம் கொட்டுகிறது.
எப்படி? இதோ மேலே சொன்னோமே விளையாட்டுச் சங்களுக்கு அள்ளிக் கொடுக்கவில்லை என்று சொல்ல முடியுமா? செயல்படாத சஙகங்களை வைத்து யார் யாரெல்லாம் பணம் சம்பாதித்தார்கள்? அரசியல்வாதிகள் தானே!
பாரிசான் கட்சி ஆட்சியில் இருக்கும்வரை நாடு நாறிப்போகும் என்பது மட்டும் உண்மை. இன்று அந்தக் கட்சியில் இருப்பவர் அனைவருமே ஊழல்வாதிகள் தான்! நேர்மையான ஒருவர் கூட கட்சியில் இல்லாத போது, இந்த நிலையிலும், அவர்கள் ஆட்சியில் அமர வேண்டும் என்று நினைக்கிறார்கள்! துடிக்கிறார்கள்!
செயல்படாத சங்கங்கள் இனி செயல்பட முடியாது என்று சொன்னாலும் அந்த சங்கங்களுக்காக எத்தனை கோடி இதுவரை செலவு செய்திருக்கிறீர்கள் என்று பொது மக்களுக்குச் சொன்னால் கொஞ்சமாவது மனது நிறைவு கொள்ளும்!
Saturday, 29 January 2022
நீங்களும் கொஞ்சம் வாய் திறங்களேன்!
Inter-Religious Dialogue Convention
பொதுவாகவே மலேசியர்களாகிய நமக்கு இலஞ்சம், ஊழல் என்பதெல்லாம் மிகவும் சர்வ சாதாரண விஷயமாகப் போய்விட்டது! பணத்தைக் கொடுத்து எதனையும் சாதிக்க முடியும் என்கிற நிலைமையில் தான் நாடு போய்க்கொண்டிருக்கிறது!
இலஞ்சம், ஊழல் என்பது பற்றி யார் தான் வாய் திறக்க முடியும்? எதிர்க்கட்சிக்காரன் இலஞ்சம் ஊழல் பற்றி பேசினால் அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. காரணம் இவன் பதவிக்கு வந்தால் இவனும் அதையே தான் செய்யப் போகிறான். ஒருவன் அரசியல்வாதியாக இருக்கும்வரை அவனிடம் நேர்மையை எதிர்பார்ப்பது இயலாத காரியம். அப்படி இருந்தால் அவன் மனிதன் அல்லன் அவன் மகான்!
அதற்காக பொது மக்களும், மக்களிடையே ஒரு கௌரவமான இடத்தைப் பெற்றிருக்கும் சமயவாதிகளும் வாய் திறவாமல் இருந்தால் என்ன பொருள்? மக்கள் பேசினால் அதனை அரசாங்கம் சட்டைச் செய்யப் போவதில்லை. அதனையே சமய்வாதிகள் பேசினால் அவர்களின் வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு.
சமயவாதிகளின் குரலுக்குக் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை அரசியல்வாதிகள் வேண்டா வெறுப்பாகவாவது அவர்களின் ஆலோசனைகளுக்கு அடிபணிவார்கள்.
ஆனால் இப்போது சமயவாதிகளையும் சந்தேகக் கண்கொண்டு தான் பார்க்க வேண்டியுள்ளது. இவர்கள் வாய் திறக்காமல் இருப்பதைப் பார்க்கும் போது இவர்களுக்கும் அரசியல்வாதிகளிடம் ஏதும் தொடர்பு இருக்குமோ என்று யோசிக்க வேண்டியுள்ளது!
சமீபத்தில் கூட கோயில் உண்டியில் திருடினான் என்பதற்காக ஓர் இளைஞனை குளிப்பாட்டி, பாடைகட்டி அவனை வெளியே அனுப்பிவைத்தார்கள்! இது சிறிய உண்டியல் திருட்டு. ஆனால் கோடிக்கணக்கில் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளைப் பற்றி இவர்கள் வாயே திறப்பதில்லை!
எனக்குத் தெரிந்து எந்த ஒரு சமயவாதியும் அரசியல்வாதிகள் செய்கின்ற ஊழல்களைச் சுட்டிக்காட்டிப் பேசுவதில்லை! ஊழல் என்பதையும் புனிதம் என்பதையும் ஒரே திராசில் வைத்துப் பார்ப்பது ஏன் என்று புரியவில்லை! இப்போது சமயவாதிகளையும் அரசியல்வாதிகளையும் ஒரே திராசில் வைத்துப் பார்க்க வேண்டிய காலக்கட்டம் இது என்றே தோன்றுகிறது!
ஊழல், இலஞ்சம் என்பது பற்றி சமயவாதிகள் பேச வேண்டும். எது பற்றியும் பயப்படாத அரசியல்வாதி குறைந்தபட்சம் சொர்க்கம் நரகம் என்பது பற்றியாவது பயப்படுவான்! அவனை "நரகம்! நரகம்1' என்று சொல்லியே பயமுறுத்தியே கொல்ல வேண்டும்!
இன்றைய நிலையில் சமயவாதிகள் வாய் திறக்க வேண்டும். நாட்டு நலன் முக்கியமே தவிர அரசியல்வாதிகளின் நலனல்ல! இதனை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்!
அனைத்து மதத்தையும் சேர்ந்த சமயவாதிகள் இலஞ்சம் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். பார்த்தும் பார்க்காமல் இருப்பதும், கேட்டும் கேளாமல் இருப்பதும் ஒருவகை ஊழல் தான்! இதற்கும் இறைவனின் தண்டனை உண்டு!
Friday, 28 January 2022
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவையா?
இன்று நாட்டில் பெரும்பான்மையினர் கொரோனா தடுப்பூசி போட்டவர்களாகவே இருக்கின்றனர்.
அந்த அளவில் நம் அரசாங்கத்தைப் பாராட்ட வேண்டும். வேகமாகவும், துரிதமாகவும் செயல்பட்டமைக்காக நன்றி சொல்ல வேண்டும். இன்று பலர் தடுப்பூசி போட்டவர்களாக இருப்பதால் ஓரளவு நிறுவனங்கள், தனியார் வர்த்தகங்கள் எல்லாம் இயங்க ஆரம்பித்திருக்கின்றன. பிள்ளைகளும் பள்ளிகளுக்குப் போக ஆரம்பித்திருக்கின்றனர்.
இரண்டு தடுப்பூசிகளும் போட்டுவிட்டவர்களுக்கு இப்போது மூன்றாவது பூஸ்டர் டோஸ் தேவையா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனாலும் சுகாதார அமைச்சை பொறுத்தவரையில் அது தேவை என்பதினால் அவர்களின் வேலையை அவர்கள் ஆரம்பித்துவிட்டனர். இன்று பலர் பூஸ்டர் டோஸையும் போட்டுக் கொண்டிருக்கின்றனர். சமீபத்திய செய்தியின் படி சுமார் 50 விழுக்காடு மக்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டு விட்டனர்.
ஆனாலும் ஒரு சிலர் இந்த பூஸ்டரைப் பற்றி பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். பூஸ்டர் டோஸ் போட்டவர்களில் பலர் இறந்திருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
இறந்திருக்கலாம். இல்லையென்று சொல்லிவிட முடியாது. ஆனால் இது தான் உலகெங்கிலும் நடைமுறையாக இருந்து வருகிறது. அதைத்தான் நாமும் பின்பற்றி வருகிறோம்.
இந்தக் குற்றச்சாட்டைக் கூறுமுன் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நம் நாட்டில் இரத்தக் கொதிப்பு, இனிப்பு நீர், புற்று நோய் என்பவை முக்கியமான ஆபத்தான நோய்களாக விளங்கி வருகின்றன. இந்த நோய்களின் மூலம் இறப்பவர் விகிதம் அதிகம் என்பதும் உண்மை. இப்படி பல்வேறு நோய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு இந்த பூஸ்டர் தடுப்பூசி போடும் போது அந்த வியாதிகள் கூட இறப்பை ஏற்படுத்தியிருக்கலாம்! ஆனால் குற்றச்சாட்டு என்னவோ பூஸ்டர் போட்டதனால் வந்தது என்று கூறுகிறோம்!
இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் எதிலும் நூறு விழுக்காடு உண்மையில்லை. சரி தவறு என்று அறுதியிட்டுக் கூற வழியில்லை. உங்கள் நேரம் சரியில்லை என்றால் எதுவும் நடக்கலாம். இந்த நேரத்தில் எது நடந்தாலும் அது பூஸ்டர் மேல் தான் போகும்!
சரியோ தவறோ பூஸ்டர் போட்டால் இறப்பு வரும் என்பது நமக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும். மக்களிடையே ஒரு தவறான புரிதல் ஏற்பட வாய்ப்புண்டு. நாம் பூஸ்டர் போட்டால் இறப்பு வரும் என்கிற செய்தியோடு ஒருவரை பூஸ்டர் தடுப்பூசி போட அனுப்பி வைத்தால் அவர் திரும்பி வருவாரா என்பது சந்தேகமே!
இதனை ஒரு வதந்தியாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்! வேண்டாம் என்றால் எடுத்துக் கொள்ள வேண்டாம்! அவ்வளவு தான்!
என்று ஒழியும் இந்த கோரோனா?
Booster at least 80% effective against severe Omicron
என்று ஒழியும் இந்த கோரனா என்பது மில்லியன் டாலர் கேள்வி!
இந்த முறை குறைந்து காணும்போது "பரவாயில்லை! சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்து விடும்!" என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது புதிதாக ஒன்று வந்து விடுகிறது!
நாம் யார் யாரையோ குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எல்லாரையும் விட பணக்காரர்கள் தான் வலிமையானவர்களாக இருக்கிறார்கள்! அதாவது உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது!
கோரோனா ஒழிந்து போவதை உலகப் பணக்காரர்கள் விரும்பவில்லை! இன்று உலகில் உள்ள பெரிய பணக்காரர்கள் எல்லாம் மருந்து வியாபாரிகள் தான். அவர்கள் அவ்வளவு எளிதில் வியாதிகளை, அதுவும் குறிப்பாக கோரோனாவை, தங்களது கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க மாட்டார்கள்! எத்தனையோ வியாதிகள் உலக மக்களுக்கு வந்திருக்கலாம். ஆனால் கோரோனா போன்று பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்த வேறு வியாதிகள் எதுவும் இல்லை!
கோரோனாவைப் பற்றிய செய்திகள் எதனையும் நம்பும்படியாகவும் இல்லை! வருகின்ற செய்திகள் எல்லாம் "வரும்! வராது! தொடரும்! தொடராது! சாவு வரும்! சாவு வராது!" இப்படியே தான் முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கின்றனவே தவிர ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை!
இப்போது பெரும்பாலான நாடுகள், நம் நாடு உட்பட, ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. உலக சுகாதார நிறுவனம் சொல்லுவதை கடைப்பிடிப்போம். அது தான் சிறப்பு. இல்லாவிட்டால் அமரிக்கா, பிரிட்டன் அவைகள் என்ன செய்கின்றனவோ அதனையே நாமும் செய்வோம். வேறு என்ன தான் வழி? கோரோனா என்பது நமது நாட்டுக்கு மட்டும் உரியது என்றால் நம்மால் எதையாவது செய்ய முடியும். இது உலக அளவில் பரப்பப்பட்ட ஒரு வியாதி. அந்த வியாதியைப் பரப்பியவர்கள் வியாதியின் வீரியம் குறைய குறைய அடுத்து ஒன்றை பரப்பி விடுவார்கள். இது சில ஆண்டுகளில் முடிவுக்கு வரும் என்று சொல்லுவதற்கில்லை.
இனி மேல், உண்டோ இல்லையோ, நமது அன்றாடப்பணிகள் தொடர வேண்டும். வியாபார நிறுவனங்கள் திறக்கப்பட வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். வர்த்தகங்கள் தொடர வேண்டும்.
இங்கு முக்கியமானது நாம் நமது கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளிகளைப் பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும். முடிந்தவரை இந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இது நமது கடமை. ஏதோ நாம் உயிர்வாழ்வதற்கு இதையாவது கடைப்பிடிப்போம்! இதற்கு மேல் தடுப்பூசி போட வேண்டும் என்றால் அதனையும் செய்வோம்.
கோரோனா ஒழிவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. நாமும் கோரோனாவோடு சேர்ந்து வாழ பழகிக்கொள்வோம்!
Thursday, 27 January 2022
மந்திரி பெசார் வேட்பாளர்
வருகிற ஜொகூர் சட்டமன்ற தேர்தலில் முன்னாள் கல்வி அமைச்சர், மஸ்லி மாலிக் போட்டியிடுகிறார் என்பது முக்கியம் அல்ல.
அவர் ஜொகூர் மாநில மந்திரி பெசார் வேட்பாளர் என்பது முக்கியமான செய்தியாக எடுத்துக் கொள்ளலாம். இது இன்னும் உறுதிப்படுத்தாத செய்தி என்று கூறப்படுகிறது.
பொதுவாகவே அம்னோ அரசியல் என்பது மக்களிடையே மிகவும் கேவலமான அரசியலாகக் கருதப்படுகிறது. நாம் எப்படி ம.இ.கா.வை அதன் ஊழக்காக வெறுக்கிறமோ அதே நிலை தான் அம்னோவுக்கும்! அம்னோ என்பது ம.இ.கா.வை விட பல பல படிகள் மேலே உள்ள ஊழல் கட்சி! ம.இ.கா. வினரின் ஊழல் குரு என்றால் அது அம்னோ தான்!
ஆக, அம்னோவின் சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்கள் ஊழலிலிருந்து தப்பிவிட முடியாது! மக்களுக்கு மிகவும் தெரிந்த விஷயம் இது.
அதனால் மஸ்லி மாலிக் போன்றவர்கள் உள்ளே வரும் போது அதுவும் மந்திரி பெசாராக வருவதற்கான வாய்ப்புக் கிடைத்தால் அதுவே ஜொகூர் மாநிலத்திற்குக் கிடைத்த பெரும் பேறு என்று சொல்லலாம்.
மஸ்லி மாலிக் நல்ல கல்வியாளர். படித்த்வர், பண்புள்ளவர். இலஞ்ச, ஊழலை வெறுப்பவர். நேர்மையாளர்.
சமீபத்தில் அரசியலுக்கு வந்தவர். யாரும் குறை சொல்ல முடியாத பண்பாளர்.
இந்தப் பண்புகள் ஒன்றே போதும் ஜொகூர் மாநிலத்தை வழிநடத்த. இலஞ்சம் ஊழல் புரியும் அரசியல்வாதிகளால் மக்கள் தான் அவதிப்பட வேண்டி வரும். அது தான் நடந்து கொண்டிருக்கிறது! நமக்கு இதெல்லாம் தெரியாமலா போகும்!
தெரிந்தும் மீண்டும் மீண்டும் அதே தவறைத் தான் செய்து கொண்டிருக்கிறோம். இந்த ஊழல் பேர்வழிகளால் என்ன தான் நடக்கிறது? கோயில்களை உடைக்கிறார்கள், தமிழ்ப்பள்ளிகளுக்குத் தடையாக இருக்கிறார்கள், குடியுரிமைத் தொடர்பில் குளறுபடி செய்கிறார்கள் ஏன் இப்போது பிறப்புப் பத்திரத்திலும் இழுத்தடிக்கிறார்கள்!
நல்ல அரசாங்கம் அமையும்வரை இதெல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கும்!
மஸ்லி மாலிக் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் தான் நமக்கு, மக்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என நாங்கள் நம்புகிறோம்.
மஸ்லி மாலிக் ஜொகூர் மந்திரி பெசாராக வர வேண்டும். அதுவே நமது எதிர்பார்ப்பு!
Wednesday, 26 January 2022
இது போதாது. இளைஞர்களே!
ம.இ.கா. சிலாங்கூர் இளைஞர் பகுதி நல்லதொரு திட்டத்தை அறிவித்திருக்கின்றனர். பாராட்டுகிறோம்!
உணவுகள் தயாரிக்கவும், பானங்கள் தயாரிக்கவும் ஓர் ஆறு மாத குறுகிய கால பயிற்சிக்கு ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர்
இந்த பயிற்சியினை ஓர் அனைத்துலக கல்லூரியுடன் இணைந்து இதனைச் செயல்படுத்துகின்றனர். வாழ்த்துகள்!
மாணவர்களுக்குப் பயிற்சி காலத்தில் மாத அலவன்ஸாக 400 வெள்ளி வழங்கப்படும் என்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனை இளைஞர்கள், இந்த வாய்ப்பினை, பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நமது ஆசை. அதுவும் குறிப்பாக உணவுத் துறையில் ஈடுபட வேண்டும் என இலட்சியமாகக் கொண்டவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
உணவுகள் என்னும் போது உடனே நமது காக்கா உணவகங்கள் தான் கண்முன்னே நிற்கின்றன! அது தேவை இல்லை. தங்கும் விடுதிகள் அதுவும் உலகளவில் புகழ் பெற்ற ஹோட்டல்கள், நாட்டில் உள்ளன. நிறையவே வாய்ப்புக்கள் உண்டு. உலகளவிலும் வாய்ப்புக்கள் உண்டு.
நம்மைச் சுற்றிப் பார்த்தால் பல இளைஞர்கள் எந்தவித பயிற்சியும் இல்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்குக் கடைசியில் பயிற்சி கொடுப்பவர்கள் குண்டர் கும்பல்களாகத்தான் இருக்கும்!
பயிற்சிகள் முக்கியம் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.எனக்குத் தெரிந்த இளைஞன் ஒருவன் மகா மகா மண்டு பையன். எதற்கும் இலாயக்கிலை என்கிற நிலையில் இருந்தவன். ஏதோ ஒரு பயிற்சிக்குப் போய் வந்தான். பயிற்சியின் போது ஒரு சான்றிதழ் கொடுக்கப்பட்டது. அதுதான் அவனது கல்வி தகுதி! வேறு எந்த சான்றிதழும் இல்லை! ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. தீடீரென ஏதோ ஒரு திறமை வெளிப்பட்டது. இப்போது அவன் சொந்தத் தொழீல் ஈடுபட்டு பெரிய அளவில் வளர்ந்துவிட்டான்!
அதனால் பயிற்சிகள் கிடைக்கும் போது அதனை ஒதுக்காதீர்கள். ஒன்றுமே தெரியாதவர்களுக்கு இது போன்ற பயிற்சிகள் உதவியாக இருக்கும் என்பது உண்மை.
என்னுடைய ஆலோசனை என்பது ம.இ.கா.வினர் இன்னும் பல பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும். பணம் பற்றாக் குறை என்பது இல்லை. அது தான் செடிக், மித்ரா போன்ற நிதிகள் இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்க்காக இருக்கும் போது கவலைப்பட ஒன்றும் ,இல்லை.
பயிற்சிகள் தேர்தல் வரும் போது தான் செய்ய வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டும். ம.இ.கா.வினர் இன்னும் பல பயிற்சிகளை இளைஞர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
பயிற்சிகள் தொடர வேண்டும்!
Tuesday, 25 January 2022
கவலை வேண்டாம்!
டாக்டர் மகாதிர் கடந்த சில நாள்களாக கோலாலம்பூர், ஐ.ஜே.என். என்று சொல்லப்படும் தேசிய இருதய கழகத்தில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
முன்னாள் பிரதமர், அதிலும் வயதானவர் என்கிற ஓர் அனுதாபம் அவர்மீது நமக்கு உண்டு. அனுதாபம் என்பதை அவர் விரும்பமாட்டார்.
நாட்டை முன்னேற்றத்திற்குக் கொண்டு வந்தார் என்று சொன்னாலும் அவர் கையாண்ட முறை முறையற்றது என்று பல பேர் சொன்னாலும், நிறைய குறைகள் சொன்னாலும் அப்படி சொல்லுவதில் எந்தத் தவறுமில்லை!
அவர் கொண்டு வந்த முன்னேற்றத்தின் போது நமது இனமும் முன்னேற்றம் கண்டது என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு அதனை இத்தோடு முடித்துக் கொள்வோம்.
டாக்டர் மகாதிரின் உடல்நிலை பற்றி வதந்திகள் உலவுவது இயற்கையே. அது தான் சொன்னேனே அவரின் வயது அப்படி என்று! வெளியார் எவரும் அவரை மருத்துவமனையில் காண அனுமதியில்லை குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
அவரது மகள் மரினா மகாதிர் தந்தையுடன் இருக்கிறார். இப்போது அவரின் உடல்நிலை தேறி வருவதாக அவர் கூறுகிறார்.
மகள் சொல்லுவது சரியாகத்தான் இருக்கும். நம் நாட்டுக்கும் நமக்கும் நீண்டகாலமாக பிரதமராக இருந்தவர். பல வழிகளில் நம்மை உயர்த்த வேண்டும் என்று நினைத்தவர். பாடுபட்டவர்.
அவர் உடல்நிலை சீரடைய வேண்டும். மேம்பாடு அடைய வேண்டும். அவருக்காக, அவரின் உடல்நிலைக்காக நாம் வேண்டுதல் செய்ய வேண்டும். நம்மால் செய்ய முடிந்தது அவ்வளவு தான்.
அவர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். நீண்ட நாள் வாழ வேண்டும். நாட்டுக்கு நல்லதைச் செய்ய வேண்டும்.
இறைவனை பிரார்த்திபோம்!
Monday, 24 January 2022
ஆசிரியர்கள் அரசியலில் ...? சரியா?
Sunday, 23 January 2022
300 வெள்ளி 45,000 வெள்ளியாக எகிறியது!
தமிழ் நாட்டில் கந்து வட்டி என்பார்கள்!
Saturday, 22 January 2022
வழியா இல்லை பூமியில்!
Freddie Beckitt stands in line for rich people and earns 160 pounds per Day!
கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது: "வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்!"
அந்தப் பாடலுக்கு மிகவும் பொருத்தமானவர் மேலே புகைப்படத்தில் உள்ள Freddie Beckitt என்னும், லண்டனைச் சேர்ந்த 31 வயது இளைஞர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். அவரது வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பணக்காரர்கள். அவர்களுக்குப் பணம் என்பது ஒரு பொருட்டல்ல! ஆனால் அவர்களுக்கு வரிசையில் வந்து நிற்பதற்குப் பொறுமை இல்லை! அதனால் சும்மா காசை தூக்கி வீசிவிட்டுப் போய் விடுவார்கள்! ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அவர் 20 பவுன்களைக் கட்டணமாக வசூலிக்கின்றார்.
ஆனால் இவர் செய்கின்ற இந்த வேலையை எளிதான ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதிலும் பல சிரமங்கள் உண்டு. ஒரு சில நிகழ்வுகளுக்குப் பல மணி நேரங்கள் காத்திருக்க நேரும். சமயங்களில் அவர்களுக்காக காத்திருந்து டிக்கெட்டுகளும் வாங்க வேண்டி வரும். கடும் குளிரில் நின்று கொண்டு அந்த குளிரோடு போராட வேண்டும்! இது போன்ற சிரமங்களை எதிர் நோக்கினாலும் "நான் செய்கின்ற இந்த வேலையில் எந்த கஷ்டமும் இல்லை! நின்று கொண்டு இருப்பதில் என்ன கஷ்டம்?" என்கிறார் பிரெடி. "அதனால் ஒரு மணி நேரத்திற்கு 20 பவுனுக்கு மேல் என்னால் ஏற்ற முடியாது!"
உண்மையில் பிரடிக்கு இது முழு நேர தொழில் இல்லை. அவர் சரித்திரக் கதைகள் எழுதும் வளரும் எழுத்தாளர். இந்த "வரிசையில் நிற்கும்" தொழிலில் அவருக்குப் பணம் கிடைக்கிறது. கதைகள் எழுத வசதியாகவும் வாய்ப்பாகவும் இருக்கிறது. பசியைப் போக்கினால் தானே எழுத வரும்? அதை அவர் சரியாகவே செய்கிறார்.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது: பிரடி தனக்கு என்று ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய எழுத்தாளர் கனவையும் விட்டுக் கொடுக்கவில்லை. "காத்திருக்கும்" அவர் செய்யும் வேலை அவருக்குப் பிடித்திருக்கிறது. பணம் கிடைக்கிறது அது போதுமே! வேலையில் எந்த கஷ்டமும் இல்லை!
எல்லாமே ஏதோ ஒரு பொறியில் இருந்து தான் இப்படி ஒரு வேலையை அவர் அமைத்துக் கொண்டார். மற்றவர்களுக்கும் அவர் உதவ வேண்டும், அவரும் பிழைக்க வேண்டும், தனது எழுத்தாளர் கனவும் நிறைவேற வேண்டும்.
இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைத்துவிட்டால் எதுவும் குறுக்கே நிற்காது! இதைத்தான் தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்றும் திறமை.
வாழ நினைத்தால் வாழலாம்! வழியா இல்லை பூமியில்!
Friday, 21 January 2022
கோரிக்கையை நிறைவேற்றுங்கள்!
பள்ளிகளுக்குக் கிடைக்கும் இலவச உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவில் வெறும் சோறும் குழம்பும் மட்டும் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது.
Thursday, 20 January 2022
ஏன் இந்த தடுமாற்றம்?
Tuesday, 18 January 2022
அசிங்கப்படுத்த வேண்டாம்!
வெள்ளம் போன்ற பேரிடர்கள் வரும் போது ஓடிப் போய் ஒளிந்து கொள்வதும் வெள்ளம் ஓய்ந்து போன பின்னர் வெளியே ஹாயாக வந்த வெள்ளம் வரும் போது என்னன்ன செய்ய வேண்டும் என்பதை மக்களுக்கு அறிவுறுத்துவதும் வாடிக்கையாகவே போய்விட்டது!
மக்கள் ஆபத்திலிருக்கும் போது சமயப் புத்தகங்களைத் திருப்பித் திருப்பிப் பாரப்பதற்கெல்லாம் நேரம் இல்லை. ஆபத்தில் இருப்பவரை எப்படிக் காப்பாற்றலாம் என்று தான் தோன்றுமே தவிர வேறு எண்ணங்கள் ஏற்பட வாய்பில்லை! அங்கு மதமோ, இனமோ, சாதியோ எதுவும் எடுபடாத ஒரு சூழல்!
நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொஞ்சம் ஒயந்த போது வீடுகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அனைத்தையும் சுத்தம் செய்யும் வேலைகளில் மலேசியர்கள் ஒன்று சேர்ந்து ஈடுபட்டிருந்தது ஒரு சிலருக்கு அது பேசும்பொருளாக மாறிவிட்டது! ஈடுபட்டவர்களுக்கு அது மனிதாபிமானம். ஈடுபடாதவர்களுக்கு அது ஒரு மதப் பிரச்சனை!
உஸ்தாஸ் ஒருவர் சமீபத்தில் பேசிய பேச்சு ஒன்று எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பள்ளிவாசல்களை இந்துக்கள் சுத்தம் செய்வது பிரச்சனையாக இல்லை. அது அரசாங்க செலவை மிச்சப்படுத்துவது. ஆனால் இந்து கோயில்களை முஸ்லிம்கள் சுத்தம் செய்வது மாபெரும் பாவம்! எப்படி? இந்து கோயில்கள்: விபச்சார விடுதிகள்! கேளிக்கை மையங்கள்! சூதாட்ட களங்கள்!
இப்படித்தான் வர்ணித்திருக்கிறார் அந்த உஸ்தாஸ்! இந்த அளவுக்கு அவரால் எப்படி வர்ணிக்க முடிந்தது? அவர் தனது சொந்த அனுபவத்திலிருந்து இதனைப் பேசுகின்றாரா? அவர் எந்தக் கோவிலில் விபச்சாரம் செய்தார்? எந்தக் கோவிலில் சூதாட்டம் ஆடினார்? எந்தக் கோயிலில் கேளிக்கைகள் புரிந்தார்?
ஒரு வழிபாட்டுத்தலத்தை எந்த அளவுக்கு இவர் பயன்படுத்தியிருக்கிறார் என்பது நம்மாலும் நம்ப முடியவில்லை! அல்லது இதனையெல்லாம் எனது நண்பர்கள் செய்திருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறாரா! அல்லது வேண்டுமென்றே வழிபாட்டுத்தலங்கள் இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல வருகிறாரா?
இந்து கோயில்கள் மட்டும் தான் புனிதம் அற்றவை என்று இவரால் நிருபிக்க முடியுமா? எந்தவொரு வழிபாட்டுத்தலங்களை எடுத்துக் கொண்டாலும் நூறு விழுக்காடு புனிதம் என்பதெல்லாம் இல்லை. சும்மா சொல்லலாம்! அவ்வளவு தான்! இன்று நாட்டில் கொள்ளையடிப்பவர்கள் எல்லாம் புனிதம் மிகுந்த புண்ணிய தலத்திலிருந்து தான் வருகிறார்கள் என்பதை உஸ்தாஸ் மறைக்க முடியுமா?
உஸ்தாஸ் போன்றவர்கள் நாட்டிற்கு எது நல்லதோ அதைப் பேச வேண்டும். நாட்டில் கலவரங்கள் ஏற்படும்படியான விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். ஆன்மீகத்தில் சிறியவன் பெரியவன் என்று பேசுவது அநாகரீகம்.
மீண்டும் சொல்லுகிறேன்! வழிபாட்டுத்தலங்களை அசிங்கப்படுத்த வேண்டாம்!
Monday, 17 January 2022
புறக்கணிப்போம்!
டீ சட்டைகள் யார் வேண்டுமானாலும் அணியலாம். அதற்கெல்லாம் யாருடனும் நாம் சண்டைக்குப் போக முடியாது.
Sunday, 16 January 2022
இருபது ஆண்டுகள் வயிற்றில் சுமந்த பெண்!
ஏழை எளிய, நடுத்தர பெண்கள் என்றால் உலகத்தில் என்ன நடக்கும் என்றே கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை!
வங்காள தேசத்தில் பாச்சினா என்கிற 55 வயது பெண்மணி ஒருவர் சுமார் இருபது ஆண்டுகள் தனது வயிற்றில் கத்திரிக்கோல் ஒன்றை சுமந்து வந்திருக்கிறார்! வயிற்றில் வலி இல்லை என்றால் இன்னும் கூட இருபது ஆண்டுகள் அவர் அதனைச் சுமந்து வந்திருக்கலாம். ஆனால், ஒரு கட்டத்தில், வயிற்றின் வலியை அவரால் தாங்க முடியவில்லை.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சிறுநீரக அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட குளறுபடியால் அவரது வயிற்றில் கத்திரிக்கோல் ஒன்று அகப்பட்டுக் கொண்டது! ஒரு பெண் டாக்டர் அந்த கைங்கரியத்தைச் செய்திருக்கிறார்! அந்த அளவுக்கு அவருக்கு அலட்சியமோ என்னவோ அல்லது என்ன மனநிலையில் அவர் இருந்தாரோ!
அந்தப் பெண்மணி அறுவை சிகிச்சை நடந்த அதே கிளினிக்கில் தனக்கு தாங்க முடியாத வயிற்று வலி தொடர்வதாகக் கூறியும் அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இதெல்லாம் சகஜம் என்று கூறி மருந்துகளைத் தாரளமாக அள்ளிக் கொடுத்திருக்கின்றனர்!
இனி மேல் இந்த வேதனையைத் தாங்குவதாக இல்லை என்று வேறு ஒரு கிளினிக்கில் தனது சோகக் கதையைக் கூறியிருக்கிறார். அங்கு அவர்கள் எக்ஸ் ரே எடுத்துப் பார்த்ததில் வயிற்றினுள் கத்திரிக்கோல் இருந்ததைப் பார்த்திருக்கின்றனர்! கத்திரிக்கோல் வெளியே எடுக்கப்பட்டதும் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது.
நம்மிடம் ஒரு கேள்வி உண்டு. வேறு ஒரு கிளினிக்கில் சென்று பார்த்த போது அவர்கள் எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தனர். இதனை ஏன் இதற்கு மூன்னாள் அறுவை சிகிச்சை செய்த அந்த கிளினிக் அதனைச் செய்யவில்லை? எக்ஸ் ரே தானே!அறுவை சிகிச்சை அல்லவே!
இதில் ஏதோ சூது இருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது. அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை அனுமானிக்க முடியும். அது நல்லதாகவும் இருக்கலாம்! கெடுதலாகவும் இருக்கலாம். ஆனால் அதைவிட அவர்கள் பணத்தையே குறியாக கொண்டிருக்கின்றனர் என்பது தான் சோகம்!
நம்மால் அனுதாபங்களைத்தான் சொல்ல முடியும்! வேறு என்ன செய்ய?
சிறப்பு அமைச்சரவைக் குழு!
இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்புக்குழு ஒன்று அமைத்து, இந்தியர்களின் நிலையை உயர்த்த இந்த வாரம் புதன் கிழமை பிரதமர் தலைமையில் குழு ஒன்று அமைய விருப்பதாக ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவித்திருக்கிறார்.
பிரதமர் தலைமையில் பேசப்படும் அனைத்தும் செயலாக்கத்திற்குக் கொண்டு வரப்படும் என்பதையும் அவர் நமது கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்.
இந்தியர் நலன், இந்தியர் முன்னேற்றம் என்பதில் இங்கு யாரும் ம.இ.கா.வுக்கு எதிரியல்ல என்பதில் முதலில் நாம் தெளிவு படுத்துகிறோம். எதிரி இந்தியர்கள் அல்ல ம.இ.கா. தான் என்பது இந்தியர் மனதில் ஆழப் பதிந்துவிட்டது! அதற்கானப் பொறுப்பை ம.இ.கா. தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பிரதமரைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் இந்தக் கூட்டத்தில் குழு ஒன்று ம.இ.கா.தலைமையில் தான் அமைக்கப்படும் என்பது சரியான அணுகுமுறையா என்பதும் நமது கேள்வி தான்.
ஏற்கனவே ஏகப்பட்ட இந்தியர் நலனுக்காக பிரதமருடனான கூட்டங்கள் நடைப்பெற்றிருக்கின்றன. அப்போது முன்னாள் தலைவர். இப்போது இந்நாள் தலைவர்! அப்போதும் எந்த முன்னேற்றத்தைக் காணவில்லை! இப்போது காணும் என்பது இந்நாள் தலைவரின் நம்பிக்கை!
தலைவர்கள் முன்னேற்றத்தைப் பற்றி நாம் பேசவில்லை. இந்தியர் நலனைப்பற்றி நாம் பேசுகிறோம். தலைவர்களும் இந்தியர்கள் தான்! ஆனால் அவர்கள் எட்டாத நிலையில் உள்ளவர்கள். அதனால் நம்மிடம் உள்ள முட்டாள்தனமான ஆலோசனையெல்லாம் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும்!
ம.இ.கா. மட்டும் குழு அமைத்து செயல்படும் என்றால் அதன் பலன் சுழியமாகத்தான் இருக்கும் என்பதை இப்போதே நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்! "எப்படியும் ஜெயிக்கப் போவதில்லை! இருப்பதை சுருட்டிக் கொள்வோம்!" என்கிற எண்ணம் தான் மேலோங்கி நிற்கும்!
"இல்லை! எங்களால் முடியும்!" என்று நீங்கள் - உங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்குமானால் - ஒன்று செய்யுங்கள். இன்னும் 12 மாதங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கும் உங்கள் சாதனைகளை இந்திய சமுதாயத்திற்கு அறிவியுங்கள். பல்லாண்டுகளாக இருந்த பிரதமர்களால் செய்ய முடியாததை வேடிக்கை பார்க்க வந்த இந்த பிரதமரால் செய்ய முடியும் என்றால் நமக்கு அதனால் எந்த ஆட்சேபணையும் இல்லை!
இந்த முறை உங்கள் சாதனைகளைச் சொல்லித்தான் இனி நீங்கள் உங்கள் அரசியலை நகர்த்த முடியும். ஏதோ டத்தோஸ்ரீ சரவணன் மேல் உள்ள அனுதாபத்தின் பேரில் தான் இந்த ஆலோசனையை நாம் கூறுகிறோம்.
இப்போது உங்கள் நேரம் நல்ல நேரம். அதனால் பதவியில் இருக்கிறீர்கள். அதனைத் தற்காத்துக் கொள்வது உங்கள் கையில்!
Saturday, 15 January 2022
வருந்துகிறோம்!
Former Malaysian Footballer Serbegath Singh dies
முன்னாள் காற்பந்து வீரர், செர்பெகத் சிங் தீடிரென காற்பந்து உலகிலிருந்து நிரந்தர விடைபெற்றார்!
இனி அவர் கால்கள் ஓடாது ஓளியாது! அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்தன. அவர் சைக்கிளில் போய்க் கொண்டிருக்கும் போது கீழே விழுந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாக காவல்துறை உறுதி செய்தது.
அவருக்கு வயது 61. ஜனவரி 12-ம் தேதி இரவு சுமார் 7.30 மணி அளவில் அவர் மரணமடைந்தார். ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். நிச்சயமாக சாக வேண்டிய வயதில்லை. இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டியவர். ஆனால் மரணம் எப்போது சம்பவிக்கும் என்று யார் அறிவார்? சம்பவித்துவிட்டது. அவர்க்கு ஒதுக்கப்பட்ட காலம் அவ்வளவு தான!
பொதுவாகச் சொன்னால் அவர் எங்கள் காலத்து பந்து விளையாட்டாளர். எப்போதும் தற்காப்பு விளையாட்டாளராகவே இருந்தவர். அந்த காலக்கட்டத்தில் நிறைய இந்திய விளையாட்டாளர்கள் பந்து விளையாட்டுத் துறையில் இருந்தனர். அனைவரும் அற்புதமான விளையாட்டாளர்கள். அந்த குழுவில் இவரும் சிறந்த விளையாட்டாளர்.
இப்போது எனக்குப் பந்து விளையாட்டு என்பது தொடர்பு இல்லாத விளையாட்டாகப் போய்விட்டது! உண்மையைச் சொன்னால் சில பழைய நினைவுகள் உண்டே தவிர பீற்றிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை!
தொலைக்காட்சிகளில் கூட பந்து விளையாட்டுகளைப் பார்ப்பதில்லை. அதனால் என்ன? இளைய தலைமுறை பார்க்காமலா போய்விட்டார்கள்? எல்லா விளையாட்டுகளையும் எல்லாக் காலங்களிலும் பார்க்கின்ற இரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். இருக்கத்தான் வேண்டும். ஆனால் அனைத்தும் இன ரீதியில், மத ரீதியில் என்கிற போது விளையாட்டுகளில் ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது! எக்கேடு கெட்டால் எங்களுக்கு என்ன என்கிற எண்ணம் வந்துவிட்டது!
அந்த காலக்கட்டத்தை நினைத்து பார்க்கின்ற போது அது ஒரு பொற்காலம் என்றே தோன்றுகிறது. நிறைய இந்திய விளையாட்டாளர்கள். மலேசியா உலகளவில் பல தங்கப்பதக்கங்களை வென்றது. அதற்குக் காரணமானவர்கள் செர்பகத் சிங் போன்றவர்கள். நல்ல திறமையான, விளையாட்டாளர்கள் எல்லா இனத்திலும் இருந்தார்கள். மலாய், சீன, இந்தியர் அனைவரும் ஒரே குடும்பம் என்கிற எண்ணம் மட்டுமே அப்போது தலைதூக்கி நின்றது!
குடும்பத் தலைவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தினருக்கு நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
Friday, 14 January 2022
இரட்டைப் போக்கு வேண்டாமே!
இலஞ்ச ஊழல் சிறப்புக் குழுவின் தலைவர் டாக்டர் ரய்ஸ் யாத்திம் நல்லதொரு கருத்தை மனம் திறந்து கூறியிருக்கிறார். வரவேற்கிறோம்!
இலஞ்ச ஒழிப்புத்துறை இரட்டை வேடம் போடுவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார்!
குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு சிலர் ஆரஞ்சு நிற லாக்கப் டி சட்டை உடையுடன் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதும் இன்னும் ஒரு சிலர் ஏதோ அலுவலகத்திற்குச் செல்வது போல கோட் சூட்டுடன் ராஜநடையுடன் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதும் ஏன் இந்த வித்தியாசம் காட்டப்படுகிறது என்று கேள்வி எழுப்புகிறார் ரய்ஸ் யாத்திம்!
நமக்கும் அது சரியென தான் படுகிறது. இரு தரப்பினருமே குற்றவாளிகள் தான். அப்படியிருக்க ஏன் இந்த வேறுபாடுகள்? நமக்கும் அந்த கேள்வி உண்டு! எப்படியோ இலஞ்ச ஊழல் சிறப்புக் குழுவின் தலைவர் டாக்டர் ரயிஸ் யாத்திம் இந்தக் கேள்வியை எழுப்பிருக்கிறார். நாமும் அதனை ஆமோதிக்கிறோம்.
குற்றம் ஓரளவு நிருபிக்கப்பட்ட பின்னரே குற்றவாளிகள் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படுகின்றனர். சிறிய மீன்களை நீதிமனறத்திற்குக் கூட்டிக் கொண்டு வரும் போது அவர்களுக்கு லாக்கப் டீ சட்டைகள். அரசியல்வாதிகள், வசதிப்படைத்தவர்கள், பெரிய பதவிகளில் இருப்பவர்கள் - இவர்களை நீதிமன்றங்களுக்குக் கொண்டு வரும் போது கோட் சூட் போன்ற உயர்தர ஆடைகள்!
இலஞ்ச ஒழிப்புத்துறை இரண்டு தரப்பினரையுமே குற்றவாளிகள் என்று தான் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருகின்றனர். டீ சட்டைகளுடன் வருபவர்களுக்குத் தண்டனை நிச்சயம் உண்டு என்றும் கோட் சூட்டோடு வருபவர்களுக்கு நிச்சயம் இல்லை போன்ற ஒரு தோற்றத்தை இலஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை பொது மக்களுக்கு வெளிப்படுத்துகிறதோ என்று ஐயுற வேண்டியிருக்கிறது!
குற்றவாளிகள் என்றால் அவர்கள் குற்றவாளிகள் தான்! வேறு மாற்றுக் கருத்துகள் இல்லை. இலஞ்ச ஒழிப்புத்துறை அவர்கள் கடமையை அவர்கள் செய்ய வேண்டும். அவர்கள் என்ன உடை அணிய வேண்டுமோ அதைத்தான் அவர்கள் அணிய வேண்டும். இரு தரப்பினருமே குற்றவாளிகள் தான். அவர்களைப் பிரித்து ஒருவன் பெரியவன் ஒருவன் தாழ்ந்தவன் என்கிற வேறுபாட்டை உருவாக்குவதே இலஞ்ச ஒழிப்புத்துறை தான்!
வருங்காலங்களில் இந்த உயர்ந்தவன் தாழ்ந்தவன் பிரச்சனை எழக்கூடாது என்பது எப்படி டாக்டர் ரைஸ் யாத்திம் அவர்களின் எண்ணங்களோ அதே எண்ணங்களைத்தான் பொது மக்களாகிய நாங்களும் கொண்டிருக்கிறோம்.
யாராக இருந்தால் என்ன? இலஞ்சம், ஊழல் ஒழிய வேண்டும்! இப்படி இரண்டு விதமாக பிரித்து வைத்து பகமையை வளர்க்கக் கூடாது!
புத்தாண்டு வாழ்த்துகள்!
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
ஆங்கில புத்தாண்டு என்றால் பெரிய பெரிய தீர்மானங்களை - சாதிக்க வேண்டிய பல சாகசங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதாக முடிவு எடுத்திருப்பீர்கள்.
உங்கள் தீர்மானங்கள் நிறைவேற வாழ்த்துகிறேன்! வாழ்த்துகள்!
தமிழ் புத்தாண்டில் என்ன செய்யப் போவதாக உத்தேசம்? பெரிதாக ஒன்றும் வேண்டாம். தமிழ் சம்பந்தமாக எதையாவது செய்யத் தீர்மானம் எடுங்கள். ஒவ்வொரு தமிழனும் செய்ய வேண்டிய கடமை இது.
உங்கள் கணினியில் தமிழில் எழுத வாய்ப்பு இல்லையென்றால் அதனை இந்த ஆண்டு நிறைவேற்றுங்கள். முரசு கணினியுடன் தொடர்பு கொண்டு ஆவன செய்யுங்கள்.
ஒரு சிலர் தமிழில் எழுத வாய்ப்பில்லை என்பதால் பிழையான ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கின்றனர். தமிழுக்குத் தான் முதலிடம் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
Thursday, 13 January 2022
யாருக்கு அதிகாரம்?
MACC Chief - Azam Baki speaks to the media
ஏற்றுக்கொள்வதாக இல்லை!
அப்படிச் சொல்வதால் மன்னிக்க வேண்டும். உங்களை நாங்கள் நம்புகிறோம். ஆனால் அரசாங்கம் என்று வரும் போது நாங்கள் உங்களை நம்பவில்லை. அரசாங்கம் சொல்லுவதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். அது உங்கள் கடமை. மக்கள் நலன் என்பதைவிட அரசாங்க நலன் தான் முக்கியம் என்பது தான் தானைத் தலைவர் உங்களுக்குக் கற்றுக் கொடுத்த பாடம்!
ஆலயங்கள் குறித்த தரவுகள் மனிதவள அமைச்சிற்கு எதற்குத் தேவைப்படுகிறது? உங்களுக்கே தெரியும், நீங்களே சொல்லிவிட்டீர்கள். உங்களுக்குத் தேவையான தரவுகள் அனைத்தும் சங்கங்களின் பதிவகத்தில் கிடைக்கும் என்பதாக! இரகசியம் ஒன்றுமில்லையே! தேவஸ்தானத்தின் நிலையும் அதே நிலை தான். தேவஸ்தானத்தின் ஆலயங்களின் அனைத்துத் தரவுகளும் சட்டத்துறை தலைமையகத்தில் கிடைக்கும்.
ஆலயங்களின் அனைத்துத் தரவுகளும் அரசாங்கத்திடம் உள்ளன. இப்போது மனிதவள அமைச்சுக்குத் தனியாக ஏன் தரவுகள் தேவை என்பது ஒன்றும் கேட்கக் கூடாத கேள்வி அல்ல.
நம்மிடம் உள்ல ஒரே பயம் நீங்கள் அங்கே இருப்பது தான் சந்தேகத்தை எழுப்புகிறது! செடிக், மித்ரா போன்ற - இந்தியர்களைப் பொருளாதார ரீதியில் உயர்த்த வேண்டும் - என்கிற குறிக்கோளைக் கொண்ட அந்த நிதிகளின் இப்போதைய நிலை என்ன? இந்த நிதியின் மூலம் இந்தியர்களை உயர்த்தும் போதெல்லாம் கூட இருந்தவர்கள் யார்? நீங்கள் தானே! ம.இ.கா. தானே!
ஆக, நீங்கள் கூட இருந்தால் ம.இ.கா. கூட இருக்கும்! இந்தியர்களின் பொருளாதாரத்தை எப்படி உயர்த்தினீர்களோ அப்படித்தான் இந்த ஆலயத் தரவுகள் பற்றியும் நினைக்க வேண்டியுள்லது. ஏதோ சதி என்று தான் இயற்கையாகவே நமக்குத் தோன்றுகிறது! இது பழக்க தோஷம் தான்! வேறு விதமாக நினைக்கத் தோன்றவில்லையே!
கெடா மாநிலத்தில் கோயில்களை உடைத்தார்கள். தைப்பூச விடுமுறையை நிறுத்தினார்கள். அந்த அரசாங்கத்தில் உங்கள் பங்கு இல்லை என்று சொல்ல முடியுமா? நீங்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை என்பது எல்லாருக்கும் தெரியுமே!
ஒரு விஷயத்தை எங்களால் மறக்க முடியாது. நீங்கள் பங்கு பெற்றிருக்கும் அரசாங்கத்தில் பாஸ் கட்சியும் இடம் பெற்றிருக்கிறது. பாஸ் சொல்லுவதை அம்னோ கேட்கிறது. நீங்கள் என்ன "நாங்கள் கேட்க மாட்டோம்!" என்று சொல்ல முடியுமா? பாஸ் கட்சியினர் தான் உங்களை மதிக்கவே இல்லையே! ஆனால் நாங்கள் உங்களை மதிக்க வேண்டும் என்கிறீர்கள். இது எப்படி சாத்தியமாகும்!
இந்து ஆலயங்களைப் பற்றியான தரவுகள் மனிதவள அமைச்சுக்குத் தேவையற்றது என்று மீண்டும் மீண்டும் சொல்லுகிறோம். அங்கு வங்காள தேசிகள் வேலைக்குப் போகப் போவதில்லை! சம்பந்தா சம்பந்தமில்லாம பேசுவது, தரவுகளைக் கேட்பது பாஸ் அங்கம் பெற்றிருக்கும் அரசாங்கத்தில் நமக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது!
இல்லை டத்தோஸ்ரீ! ஏற்றுக்கொள்வதாக இல்லை! மன்னிக்கவும்!
Wednesday, 12 January 2022
நெதர்லாந்து தமிழன் பிரதமருடன்!
வாழ்க்கையில் ஒரு சில முறை தான் சில அபூர்வ சந்தர்ப்பங்கள் சந்திப்புகள் அமையும். எதிர்பாராத சந்திப்பு எதிர்பாராத சமயத்தில் வருகின்ற போது கையும் ஓடுவதில்லை! காலும் ஓடுவதில்லை!
நெதர்லாந்து தமிழன் ஒரு பிரபலமான மனிதர். குறைந்த பட்சம் யூடியுபர் களிடையே பிரபலம். அவருடைய பெயரைச் சொன்னால் யாருக்கும் தெரியாது! நெதர்லாந்து தமிழன் என்கிற பெயரில் தான் அவர் பிரபலம். தமிழன் என்று சொல்லிக் கொண்டு நெதர்லாந்தை வலம் வந்து கொண்டிருப்பவர் இவர் ஒருவர் தான்!
நெதர்லாந்தில் இந்தியர்களால், தமிழர்களால் நடத்தப்படும் பல நிறுவனங்களைப் பேட்டி எடுத்து காணொளிகளில் வெளியிடுவதின் மூலம் உலகத் தமிழருக்கு அறிமுகமானவர்.
உணவுத் துறையில் நமது நாட்டைச் சேர்ந்த வள்ளி என்பவரை (வள்ளி உணவகம்) பேட்டி எடுத்த போது "அட! நம் ஊரைச் சேர்ந்த மலேசியப் பெண்மணி ஒருவர் நெதர்லாந்தில் உணவகம் நடத்துகிறாரே!" என்று அதிசயப்பட்டவர்களில் நானும் ஒருவன்!
இந்த நெதர்லாந்து தமிழன் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் கடைத்தெருவில் தேநீர் அருந்த சென்று கொண்டிருக்கும் போது திடீரென நெதர்லாந்து பிரதமர் தனது சைக்களை விட்டு இறங்கி பேரங்காடி ஒன்றுக்கு நடந்து கொண்டிருந்தார்! பிரதமர் சைக்கிளிலா! அதுவும் நடந்து போவதா! அதிர்ச்சியில் உறைந்து போன நெதர்லாந்து தமிழன் அவரைச் சந்தித்து வாழ்த்துக் கூறிய போது பிரதமர் கட்டி அணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்! அப்போது எடுத்த படம் தான் மேலே காணப்படுவது!
பொதுவாகவே இது போன்ற செயல்கள் எல்லாம் நம்மைப் பொறுத்தவரை அதிசயம் என்று சொல்லுவதைத் தவிர வேறொன்றுமில்லை. நமது நாட்டில் இப்படியெல்லாம் நடக்க சந்தர்ப்பமே இல்லை! சைக்கிளில் போவதே கேவலம் என்கிற ஒரு நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்! அதற்கு அப்புறம் பிரதமர் பைகளைத் தூக்கிக் கொண்டு சாமான்களை வாங்க அங்காடிகளுக்குப் போவது - இதெல்லாம் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது! அப்புறம் வேலைக்காரர்கள் எதற்கு? என்பது நமது கேள்வியாக இருக்கும்!
நல்ல நாடு, நல்ல மக்கள், நல்ல அரசு, நல்ல ஜனநாயகம், நல்ல ஒற்றுமை, நல்ல மகிழ்ச்சி - இதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்! நடக்கட்டுமே!
Tuesday, 11 January 2022
மக்களே! விதிகளை மீறாதீர்கள்!
மக்களே! பக்தர்களே! இந்து பெருமக்களே! கொரோனா தொற்று நோய் என்பது எல்லாருக்குமே பொதுவானது தான்
நமக்குத் தெரிந்த வரை யாரும் விதிவிலக்கல்ல. யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம். இந்த இனம், இந்த மதம், இந்த நிறம் போன்ற எதுவும் அந்த வியாதி கண்டு கொள்வதில்லை! யாரை வேண்டுமானாலும் அது போட்டுத் தாக்கும்! போட்டுத் தூக்கும்! அதற்குத் தெரிந்ததெல்லாம் ஒரே வழி தான். தாக்கு தூக்கு அது மட்டும் தான்! அதனை மீறி நீங்கள் பிழைத்து விட்டால் நீங்கள் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பது தான் பொருள்!
பத்துமலை திருவிழா என்பது சாதாரண திருவிழா அல்ல. எந்த ஒரு சமயத் திருவிழாவுக்கும் இல்லாத பக்தர்கள் கூட்டம் இந்த ஒரு திருவிழாவுக்கு மட்டுமே! மலேசியத் திருவிழாக்களில் ஓரே ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிகமான மக்கள் கூடுகின்ற இடம் என்றால் அது பத்துமலை திருத்தலம் தான்!
இப்போது கொரோனா தொற்று நோய் காலத்தில் பக்தர்களின் வருகை குறையுமென்று நினைத்தாலும் அதற்கான வாய்ப்பும் குறைவு தான்! காரணம் கோயில் குளம் என்றால் எந்நாளும் மக்கள் கூட்டம் குறைவதில்லை!
இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் தொற்று நோய் நம்மை வட்டமடித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். நம்மில் பெரும்பாலோர் அரசாங்கம் சொன்னபடி இரண்டு தடுப்பூசிகளைக் போட்டுக் கொண்டவர்கள் தான். ஆனால் அத்தோடு அனைத்தும் முடிந்துவிட்டதாக நினைப்பது தவறு. ஊசி போட்டுக் கொண்டவர்கள் மிகவும் தைரியத்தோடு வெளியே சுற்றலாம் என்பது தவறு. இன்னும் கட்டுப்பாடுகள் தேவை என்பதாகத்தான் ஆய்வுகள் கூறுகின்றன.
கொரோனா என்பது நமது நாட்டுப் பிரச்சனை மட்டும் அல்ல. இது உலகளாவிய பிரச்சனை. அதனால் ஆய்வுகள் அடிக்கடி வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன. தடுப்பூசி போடுவதால் வியாதியிலிருந்து கொஞ்சம் பாதுகாப்பு. அவ்வளவு தான். அது ஒன்றும் முழு பாதுகாப்புக் கவசம் அல்ல.
இப்போது கடைசியாக படித்த செய்தி. சிங்கப்பூர் நாடு நமக்கு அருகில் உள்ள நாடு. அங்கு தடுப்பூசி போட்டவர்களில் 30 விழுக்காடு மக்கள் மரணமடைந்திருக்கின்றனர். அதற்கு அந்த தொற்று மட்டும் தான் காரணம் என்பதல்ல. பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இப்போது இந்த தொற்று முன்னணியில் இருப்பதால் அது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் எச்சரிக்கையாய் இருங்கள் என்பது தான் செய்தி.
பக்தர்களே! திருவிழா என்பது நல்ல காரியம் தான். அதற்காக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மறந்து விடாதீர்கள். இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். முகக் கவசத்தை அணிந்து கொள்ளுங்கள். நெருக்கத்தைத் தவிருங்கள். மக்கள் கூடுகின்ற இடங்களைத் தள்ளி வையுங்கள்.
முடிந்தவரை தனித்திருங்கள்! திருவிழா வாழ்த்துகள்!
Monday, 10 January 2022
தொங்கு பாலங்கள்!
Student crossing a suspension bridge to S.K.Sibugo Besar, Sandakan
Sunday, 9 January 2022
மூடுவிழா காணுமா அசம்ஷன் பள்ளி?
பொதுவாக நீண்டகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு பள்ளியை அநாவசியமாக "மூடுகிறோம்!" என்று சொல்லுவதை ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை. நம்மால் முடியவில்லை! அவர்களால் எப்படி முடிகிறதோ!
பினாங்கு, பட்டர்வொர்த்தில் அமைந்திருக்கும் தேசிய பள்ளியான அசம்ப்ஷன் பள்ளி தான் இப்போது செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கும் பள்ளி. 90 ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு பள்ளியை வருகிற பெப்ரவரி மாதத்தில் மூடுகிறோம் என்பது சரியானதாகத் தோன்றவில்லை. கிறிஸ்துவ பள்ளி என்பதாலேயே அதனை மூட வேண்டும் என்கிற வாதமும் சரியில்லை.
இந்த நேரத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். நான் படித்த பள்ளி கிறிஸ்துவ ஆண்கள் பள்ளி. அருகிலேயே கிறிஸ்துவ பெண்கள் பள்ளி. அந்த இரு பள்ளிகளையுமே வலுக்கட்டாயமாக "மேம்பாட்டுக்காக" அரசாங்கம் எடுத்துக் கொண்டது. நான் படித்த பள்ளி முற்றிலுமாக உடைத்து நொறுக்கப்பட்டு அங்கே அந்த இடத்தில் பிரமாண்டமான ஐந்து மாடி ஷாப்பிங் கம்ப்ளக்ஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே இரண்டு மாடிகள் தான் இயங்கின. மூன்றாவது மாடியில் ஒரு சில கடைகள் இயங்கின. பின்னர் இரண்டாவதும் குறைந்து போனது. தரையில் மட்டும் தான் இப்போதும் ஒரு சில இயங்கிக் கொண்டிருக்கின்றன! அந்த பிரமாண்டம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது!
பெண்கள் பள்ளியில் என்னன்னவோ பிரமாண்டத்தைக் கொண்டு வர நினைத்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. இப்போது வெறும் குளம் மட்டும் தான் அங்கு காட்சியளித்துக் கொண்டிருக்கிறது! எப்படியோ காணாமல் செய்து விட்டோமே! அதுவே வெற்றி! அந்தப் பள்ளிகள் எத்தனையோ கல்வியாளர்களை உருவாக்கியப் பள்ளிகள். அத்தனையும் "பொஸ்க்!" என்று போய்விட்டது!
ஏன் அவர்களின் கண்களை அது உறுத்துகிறது? கிறிஸ்துவ பள்ளிகள் நகரின் மையத்தில் இருப்பது கண்களை உறுத்தியது. இப்போது எதுவுமில்லை! ரொம்பவும் நிம்மதி!
பினாங்கிலும் இத நிலைமையாகத்தான் இருக்க வேண்டும். பெரிய காரணங்கள் இருக்க ஒன்றுமில்லை! கிறிஸ்துவ அடையாளங்கள் இருப்பது பிடிக்கவில்லை. அதற்காக, பாவம், பள்ளிக்கூடமே வேண்டாம்! இவர்கள் மிகவும் அதிபுத்துசாலிகள்!
அசம்ஷன் பள்ளிக்கு என்ன ஆகும்? இப்போது "பாஸ்" கட்சியின் துணையுண்டு! எதுவும் நடக்கும்!
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!
நாம் சில செய்திகளைப் படிக்கும் போது நமக்குச் சிரிப்புத் தவிர வேறு ஒன்றும் வருவதில்லை!
இவர்களிடம் போய் இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கலாமா என்று தான் தோன்றுகிறது.
தமிழ்ப்பள்ளிக் கட்ட நான்கு ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இது பாரிட் புந்தார், பேராக் மாநிலத்தில் நடந்த சம்பவம். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம். அப்போது தலைவர் துன் சாமிவேலு தான் ம.இ.கா.வின் தலைவர்.
ஒரு வேளை பாரிட் புந்தார் ம.இ.கா.வினர் அந்த நிலத்தை மறந்து கூட போயிருக்கலாம். தலைவர் மறப்பார் என்பதற்கு ஆதாரமே இல்லை! அதற்கு அவசியமும் இல்லை!
அந்த நிலத்தின் இன்றைய நிலை என்ன என்கிற கேள்விகள் பல எழுந்தாலும் இன்று அது காடு மண்டிக்கிடக்கிறது! அது தான் இன்றைய நிலை!
ஆமாம், அந்த நிலம் யாருடைய பெயரில் இருக்கிறது என்று கேள்விகள் கேட்டால் அதை அவர்கள் விரும்பமாட்டார்கள். உனக்கேன் அவ்வளவு அக்கறை என்று நம்மைத் திருப்பிக் கேட்பார்கள்!
நமது நோக்கம் எல்லாம் நமக்குத் தெரிந்த ஒரு சில ஆலோசனையைக் கூறுகிறோம். அப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.
ம.இ.கா. வினர் மிகவும் செல்வாக்காக இருந்தகாலத்தில் பல இடங்களில் தமிழ்ப்பள்ளிகளுக்காக நிலங்கள் கொடுக்கப்பட்டன. அது அரசாங்கத்தின் பெருந்தன்மை! ஆனாலும் அந்த இடங்கள் என்னவாயிற்று என்று இன்றளவும் கேள்விகள் எழுத்தான் செய்கின்றன.
அதனால் நாம் சொல்ல வருவதெல்லாம் மாநில அரசாங்கங்கள் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கப்படும் நிலங்களை உடனடியாக வேலைகளை ஆரம்பித்துவிடுங்கள். உடனடியாக எதனையும் செயல்படுத்தவில்லை என்றால் - அதுவும் வருடக் கணக்கில் இழுக்குமென்றால் - அது யாருடைய பாக்கெட்டுக்கோ போய்விட்டது என்று பொருள்.
ஆனால் இந்த செய்தியோடு அனைத்தும் முடிந்துவிடவில்லை. அது ஒரு தொடர்கதை! இன்னொரு விவசாய நிலத்தைப் பற்றிக்கூட இன்று செய்தி வெளியாகி இருக்கிறது.
நீங்கள் பள்ளிகள் கட்டுகிறீர்களோ அல்லது கல்லூரி கட்டுகிறீர்களோ நிலம் கிடைத்ததும் வேலையை ஆரம்பித்து விடுங்கள். ஆனால் நீங்கள் செய்வதில்லை. ஏதோ ஏதோ காரணங்கள். ஆறப்போடுகிறீர்கள்! அப்படியே ஊறப்போட்டு விடுகிறீர்கள்!
அதனால் ஒன்று நமக்குப் புரிகிறது. உடனடி வேலை ஆரம்பிக்கவில்லை என்றால் அந்த நிலம் யாருடைய கைக்குப் போகும் என்பதை நம்மால் அனுமானிக்க முடியும்! இது ம.இ.கா.வின் வழமையான ஒரு வழி!
நீங்கள் என்னதான் "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!" என்று சொன்னாலும் அது அப்படித்தான் என்று சொல்ல நிறையவே இடமிருக்கிறது!
Saturday, 8 January 2022
அவதூறுகளைப் பரப்ப வேண்டாம்!
காலணி அணியவில்லை!
நமக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவரைப் பற்றி அவர் என்ன செய்கிறார், அவர் அங்கே போகிறார், வருகிறார் என்பதையெல்லாம் அவரைப் பின்பற்றிக் கொண்டே இருப்போம்! அதனை நாம் நல்ல எண்ணத்தோடு செய்யவில்லை! அவரைப்பற்றி ஏதாவது குற்றம் சாட்ட வேண்டும் என்பதற்காக அதனைச் செய்கிறோம்! அது மனித இயல்பு!
நமக்கு ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஹலிமா சாடிக் ஏதோ ஒரு வகையில் பிடிக்கவில்லை! குறிப்பாக மித்ரா நிதியை தவறாகக் கையாண்டார் என்கிற குற்றச்சாட்டு அவர்மீது நமக்கு உண்டு. இந்தியர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதியை ம.இ.,கா.வினரோடு பங்கு போட்டுக் கொண்டார் என்பது நமது குற்றச்சாட்டு! ஆனால் அதற்கெல்லாம் சரியான ஆதாரம் இல்லை! ஏதோ அந்த இடத்தில் அவர் இருக்கிறார் என்பதற்காக அவர் மீது அந்த பழி விழுகிறது! எது உண்மை எது பொய் என்பது நமக்குத் தெரிய நியாயமில்லை!
சமீபத்தில் ஹலிமா சாடிக் பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு பால தண்டாயுதபாணி ஆலயத்திற்கு வருகை புரிந்தார். அமைச்சர்கள் பலர் இப்படி கோயில்களுக்கு வருவதெல்லாம் ஒன்றும் புதுமை இல்லை! இப்போதுள்ள குற்றச்சாட்டு என்ன வென்றால் அவர் கோயிலுக்குள் காலணி அணிந்து சென்றார் என்பதாக ஒரு குற்றச்சாட்டு!
ஆனால் இதனை இந்து அறப்பணி வாரியம் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்பதாக மறுத்துள்ளது. அமைச்சர் கணுக்கால் வரையிலான காலுறை அணிந்திருந்தார் என்று உறுதிப்படுத்துகிறது அறப்பணி வாரியம். காலணி அணிந்திருந்தார் என்பதாக தவறான படங்களைப் போட்டு தவறான நபர்களால் சமூக வலைத்தளங்களில் பரப்படும் செய்திகளில் உண்மையில்லை என்கிறது அறவாரியம்.
தவறான செய்திகளைப் பரப்பும் தரப்பினர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்து கோயில்களுக்குப் போகிறவர்கள் காலணி அணியக்கூடாது என்பதை இந்துக்கள் அல்லாதவர்களும் அறிந்து வைத்திருக்கின்றனர். காலணி அணிந்து கொண்டு போனார் என்று சொன்னாலும் யாரும் நமபப்போவதில்லை. ஆனாலும் அவரைப்பற்றி அவதூறு பரப்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் எதையாவது இப்படி உளறிக்கொண்டு தான் இருப்பார்கள்!
இதைத்தான் நாம் சொல்ல முடியும். தயவு செய்து அவதுறூகளைப் பரப்ப வேண்டாம். அதுவும் கோவில் விஷயம் என்பதெல்லாம் கேலிக்குறியது அல்ல. கோவில்களோ, ஆலயங்களோ, பள்ளிவாசல்களோ மற்ற வழிபாட்டுத்தலங்களோ எதுவாக இருந்தாலும் அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒவ்வொரு மலேசியரும் அறிவர். நாம் விரும்பியபடி நடந்து கொள்ள இயலாது!
தயவு செய்து அவதூறூகளைப் பரப்ப வேண்டாம்!
Friday, 7 January 2022
விலை ஏறுதுங்கோ!
இப்போது தான் சில தினங்களுக்கு முன் கோழி விலை, முட்டை விலை அனைத்தும் ஜனவரிக்குப் பின்னர் குறையும் என்று படித்ததாக ஞாபகம். அதற்குள் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. பெப்ரவரி 4-ம் தேதிக்குப் பின்னர் கோழி, முட்டை விலைகள் கூடும் என்று செய்திகள் வருகின்றன!
பாவம்! மக்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றனர். வீடுகளில் வெள்ளம் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டது. மக்கள் அனைத்தையும் இழந்து விட்டனர். வீட்டில் ஒரு சாமான் இல்லை. உட்காரக் கூட நாற்காலி, மேசை எதுவும் இல்லை. அலமாரிகள், மாற்றிக்கொள்ள துணிமணிகள் அனைத்தையும் வெள்ளம் கொண்டு போய் விட்டது. அனைத்தும் சிதலம் அடைந்துவிட்டது.
யார் என்ன செய்ய முடியும்? போனது போனது தான்! அரசாங்கம் கொடுக்கிற ஆயிரம் வெள்ளி என்பதெல்லாம் போதாது என்பது அவர்களுக்கே தெரியும். ஏதோ அதையாவது கொடுக்கிறார்களே! கொடுக்கவில்லை என்றாலும் அவர்களை நம்மால் எதுவும் செய்து விட முடியாது!
அவர்களோ தங்களது ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ள எவ்வளவோ பணம் செலவு செய்து கொள்ள வேண்டியிருக்கிறது! தகுதி இல்லாதவர்களுக்கெல்லாம் பதவி கொடுக்க வேண்டியிருக்கிறது. பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது! மக்களைப் பற்றி நினைக்க அவர்களுக்கு நேரமில்லை! காற்று இப்போது தான் அவர்கள் பக்கம் அடிக்கிறது! தூற்றிக்கொள்ள வேண்டியது அவர்களது கடமை! அது தான் அவர்களது புத்திசாலித்தனம்! அப்படித்தானே உலகம் சொல்லுகிறது!
ஆனால் இந்த நேரத்தில் விலைவாசி ஏற்றம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. நாட்டு மக்கள் பல சிக்கல்களில் சிக்கிக்கொண்டு உள்ளனர். கொரோனாவின் தொற்று குறைந்தபாடில்லை. குறையும் என்கிற சாத்தியமும் இல்லை.
மக்கள் இன்னும் முழுமையாக வேலையில் அமரவில்லை. இன்னும் பல தொழிற்சாலைகள் மூடியே கிடக்கின்றன. சிறு சிறு தொழில்களும் பல இன்னும் செயல்படவில்லை. எப்போதும் மிகவும் பரபரப்பாக இருந்த சிறு தொழில்கள் இப்போது அவைகள் எங்கே போயின என்பதே தெரியவில்லை!
இந்த நேரத்தில் விலைவாசி உயர்வு என்பது மக்களை மிகவும் இக்கட்டான சூழலுக்குக் கொண்டு போகும். வாழ்வாதாரமே கேள்விக்கு உள்ளாகும் போது ஒவ்வொன்றும் உயர்ந்து கொண்டே போனால் எப்படி வாழ்வது? அரசாங்கம் மெத்தனமான போக்கைக் கடைப்பிடிக்காமல் பிரச்சனைகளுக்கு முடிவு காண முயற்சி செய்ய வேண்டும்.
Thursday, 6 January 2022
82 வயதில் 25-வது பட்டப்படிப்பு!
பெரியவர் சாதாரண மனிதர் அல்லர். பெரும் படிப்பாளி.
நம்மில் பலர் வாழ்நாள் முழுவதும் புத்தகமும் கையுமாக இருப்போம். படிக்கின்ற பழக்கம் உள்ளவர்களால் சும்மா கைகளைக்கட்டிக் கொண்டு இருக்க முடியாது. படிக்கின்ற அந்த ஆர்வத்தை யாராலும் தடைபோட முடியாது.
இந்திய மாவீரன் பகவத் சிங் தூக்குமேடைக்குப் போக வேண்டிய நேரத்தில் புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தாராம். அவர் படித்து முடித்த பின்னரே தூக்குமேடைக்குப் போனாராம்! சாகப்போகிற நேரத்தில் கூட அவர் புதிதாக எதனையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தாராம்!
பெரியவர் குருமூர்த்தி வித்தியாசமான மனிதர். தமிழ் நாடு, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவர். தொழிலால் அவர் ஆசிரியர். தனது பட்டப்படிப்புக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை! அவர் ஆசிரியர் பணி செய்கின்ற காலத்தில் 12 பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். அவர் பணி ஓய்வு பெற்ற பின்னர் இன்னும் 12 பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இப்போது இன்னுமொரு பட்டப்படிப்பை அதாவது தனது 25-வது பட்டப்படிப்பை, தனது 82-வது வயதில், கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்!
அவருடைய 82-வது வயதில் இது தேவை தானா என்று நாம் கேட்கலாம். கல்வி என்று வந்துவிட்டால் அது தேவை தான். கல்வியால் யாரும் கெட்டுப் போவதில்லை. அறிவு வளர்ச்சிக்கு எந்தக் கட்டுப்பாடும் தேவை இல்லை.
இப்படி பட்டத்துக்கு மேல் பட்டத்தை அடுக்கிக்கொண்டே போவதால் அப்படி என்னதான் அவருக்குப் பயனாய் இருக்கிறது? இந்தக் கல்வி மூலம் அவருக்குக் கிடைத்தது என்ன? அவரே சொல்லுகிறார் "எல்லாவற்றிலும் ஒழுங்கு முறை, நேரம் தவறாமை, திட்டமிடல் எல்லாவற்றையும் விட நான் இளைஞனாகவும், மாணவனாகவும், உற்சாகமாகவும் இருப்பது எனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறது!" என்கிறார்!
உண்மை தான். பொதுவாக 82 வயதானவர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம்? முதுமை, தள்ளாத வயது, சும்மா முணுமுணுத்தல், நடப்பதில் சிரமம், யாரோடும் ஒத்துப்போவாதவர் - இப்படி குற்றச்சாட்டுக்களை அவர்கள் மீது வைக்கிறோம்!
அதைவிட புத்தகங்களும் கையுமாக இப்படி மாணவனாக இருந்தால் நமக்கும் மகிழ்ச்சிதானே!