இது தான் நாம் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம்!
நாம் கற்றுக்கொடுத்த பாடம் நமக்கே ஆப்பு வைத்துவிட்டது! குப்பைகளை எங்கே போட வேண்டும் என்பதிலே ஒரு ஒழுங்கில்லை. எங்கே வேண்டுமானாலும் போடலாம். எங்கே வேண்டுமானாலும் வீசலாம்.
வீட்டு முன்னே குப்பைகளைக் குவிக்கலாம். அல்லூரில் எதையும் கொட்டலாம். யார் கேட்பது? எவன் கேட்பான்? "என் வீடு! நான் எதையும் செய்வேன்!" இது போன்ற அகம்பாவங்கள் தான் நமக்கு "வெள்ளப்பேரிடர்!" என்பதை உருவாக்கியது!
வீட்டு முன்னே குப்பைத் தொட்டிகள் இருந்தும் அங்கே கொட்டுவதில்லை! குப்பைத் தொட்டிகள் அழுக்காகிவிடும்! சரி குப்பைத் தொட்டிகள் இல்லை? என்ன செய்யலாம்? குப்பைகளை ஒரு பிளாஸ்டிக் பைகளில் போட்டு அதனைக் கட்டி வைத்தால் குப்பை லோரியினர் எடுத்துக் கொண்டு போய்விடுவர். அதையும் செய்வதில்லை. சும்மா மானாவாரியாக குப்பைகளைக் கொட்டுவது - அதிலே ஒரு சுகம். அதிலே ஒர் ஆணவம்!
இன்னும் சிலரைப் பார்க்கிறோம். குப்பைகளைக் கொண்டுபோய் ஆற்றில் போடுகின்ற பழக்கத்தை உடையவர்கள். எந்த குப்பையாக இருந்தாலும் சரி அப்படியே கொண்டு போய் ஆற்றில் எறிவார்கள். அதனால் தான் மெத்தை வகையறாக்கள் தாராளமாக ஆற்றில் மிதந்து வருகின்றன!
இது போன்ற குப்பைகளை எறிவதற்கு சில வரைமுறைகள் இருக்கின்றன. வீட்டின் முன்னே வைத்துவிட்டால் கூட குப்பை லோரிகள் அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள். அல்லது குறிப்பிட்ட சில இடங்களில் குப்பைகளைப் போட்டுவிட்டால் லாரிகள் அதனை அள்ளிக்கொண்டு போய் விடும்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்? பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளுகிறோம். கண்ட இடங்களில் குப்பைகளைக் கொட்டினால் என்ன ஆகும் என்பதைத் தான் இந்த பெருவெள்ளம் காட்டியிருக்கிறது. இது சரியான பாடம். ஆறுகள் குப்பைகளை கொட்டும் இடங்கள் அல்ல. ஆறுகள் மக்கள் பயன்படுத்தும் இடம். அந்த இடத்தை நாம் எப்படி நடத்துகிறோம்? மிகக் கேவலமாக நடத்துகிறோம்! மக்களுக்குத் தண்ணீர் கொடுக்கும் ஆற்றை அனாவசியமாக அசிங்கப்படுத்துகிறோம்!
மிகக் கேவலமான ஜென்மங்கள் நாம்! அதனால் தான் அதன் பலனை நாம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.
ஆறுகள் பொங்கி எழுந்தால் என்ன நடக்கும் என்பதை அனுபவரீதியாக நாம் கண்டு கொண்டோம்! இது நமக்கு ஒரு நல்ல பாடம். தொடர்ந்து இது போன்ற பாடங்கள் நமக்கு வேண்டாமென்றால் ஒரு சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அது ஒன்றும் கம்பசூத்திரம் அல்ல. மிக எளிதான வழிகள் தான். அதைத்தான் மேலே சொல்லியிருக்கிறேன்.
முடிந்தவரை இனிமேலாவது நல்ல ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிப்போம்!
No comments:
Post a Comment