Tuesday 1 September 2020

சோகமான சுதந்திர தினம்

 இந்த ஆண்டைப் போல் எந்த சுதந்திர தினமும் இருந்ததில்லை.

சோகமான சுதந்திர தினம்.  மக்கள் மனதில் மகிழ்ச்சியில்லை. 

கோரோனா தொற்று நோய் அனைத்தையும் புரட்டிப் போற்று விட்டது.  தொற்றினால் பலர் உயிரை இழந்தனர்.  குடும்பங்கள் பிரிந்து போயின. பல குடும்பங்கள் வேலை இழந்திருக்கின்றன. பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப முடியவில்லை. பணம் பற்றாக்குறை.  பொருளாதார சிக்கல்.

வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியவில்லை.  அவர்களால்  மொத்த வியாபாரிகளிடமிருந்து பொருள்களைக் கொள்முதல் செய்ய முடியவில்லை. மொத்த வியாபாரிகளிடமும் விற்க பொருள்கள் இல்லை. அவர்களுக்கும் சிக்கல். இவர்களுக்கும் சிக்கல்.   எல்லாமே ரொக்கப் பணம்.  "பணம் இருந்தால் வா! இல்லாவிட்டால் போ!" என்று எல்லார் வாயிலும் பணம் மட்டுமே முதன்மையாக நிற்கிறது!

கொரோனா தொற்றினால் வியாபாரங்கள் முழுமையாக நடை பெறவில்லை.  ஏதோ அரைகுறையாக ஓடிக் கொண்டிருக்கிறது! எல்லாமே அரை வயிற்றுக் கஞ்சி என்பார்களே அந்த நிலை தான்!

மலேசியர்கள் சாப்பாட்டு உணவுகளை வீணடிப்பது என்பது சாதாரண விஷயம். வீடுகளிலே மிச்சம் மீதத்தை அப்படியே கொண்டு போய் அள்ளூறுகளிலே கொட்டுவது என்பது நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.  அதனை நாய்களுக்கோ,  கோழிகளுக்கோ போடலாமே என்கிற சராசரி அறிவு கூட நம்மிடம் இல்லை!  திருமண விருந்துகளுக்குப் போனால் நமக்குத் தான் வயிறு எரியும்!  குழந்தைகளின் சாப்பாட்டு அளவு எவ்வளவு என்பது கூட தாய்க்குத் தெரிவதில்லை! 

இந்த சுதந்திர நாளிலாவது நாம் செய்கின்ற வீணடிப்புக்களைச் சிந்தித்துப் பார்ப்போம்.  வாழ்க்கை எப்போதுமே ஒரே சீராக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.  சீராக வாழ்க்கை நடத்துபவர்களுக்கு என்றுமே வாழ்க்கை சீராகவே இருக்கும். தாம்! தூம்! வாழ்க்கை,  எடுத்தற்கெல்லாம் விருந்து உபசரிப்பு,  பெண் குழந்தைகள் பூப்பெய்தினால் அதற்கு ஒரு ஆரவார விருந்தூபசரிப்பு  - - மனிதனாக வாழ வேண்டிய நாம் மரக்கட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! இப்படி வாழ்பவர்களுக்கு எல்லாச் சீரழிவுகளும் வரத்தான் செய்யும்!

நமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ இந்த அறுபத்து மூன்றாம் ஆண்டு சுதந்திர தினம் நமக்கு நல்ல வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

சோகம் தான் என்றாலும் இதுவே நமது  சொர்க்க பூமி! சொர்க்கத்தில் வாழும் நமக்கு வாழ்க்கையைச் சொர்க்கமாக ஆக்கிக் கொள்ள இன்னும் வாய்ப்பு இருக்கிறது! 

சோகம் அல்ல!  சுகம் அல்ல!  சொர்க்கம்!

No comments:

Post a Comment