ஜொகூர் மாநில பாரிசான் கட்சியின் தலைவர், ஹஸ்னி முகமட் ஏன் இப்படிப் பயப்படுகிறார் என்பது நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை!
முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரும், இளைஞர் அணி தலைவருமான சையட் சாடிக் புதிதாக - இளைய தலைமுறைக்காக கட்சி ஒன்று ஆர்ம்பிக்கப் போவதாக சமீப காலமாகக் கூறி வருகிறார்.
அவர் அந்த முயற்சியில் வெற்றி பெறுவாரா தோல்வி அடைவாரா என்பது பற்றிப் பேசுவது நமது நோக்கமல்ல.
ஆனால் பாரிசான் கட்சியின் தலைவர் அந்தப் புதிய கட்சியை வரவேற்கவில்லை என்பது மட்டும் நமக்குப் புரிகிறது. அதற்கு அவர் கூறுகின்ற காரணங்கள் அம்னோவுக்குச் சரியாக இருக்கலாம். அது இளைய தலைமுறைக்குச் சரியாக இருக்குமா என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.
அவர் கூறுவது: "நாங்கள் தான் இளைஞர்களுக்கு அனைத்தையும் செய்கிறோமே அப்புறம் எதற்கு இளைஞர்களுக்கென்று ஒரு புதிய கட்சி? எங்களிடையே ஓர் இளைஞர் அணி இருக்கிறது. அவர்களோடு சேர்ந்து பணியாற்றலாமே! பெரியவர்களும், சிறியவர்களும் சேர்ந்து தான் பணியாற்ற வேண்டும். அது தான் நாட்டுக்கு நல்லது! இளைஞர்களுக்கென்று கட்சி ஒன்றைத் தொடங்குவது என்பது பெரியவர்களை அவமரியாதை செய்வதற்குச் சமம்! புதிய இளைஞர் கட்சி ஒன்று தேவை இல்லை!"
இப்படித்தான் ஹஸ்னி அகமட் பேசி இருக்கிறார். நமக்கு ஒன்றும் ஆச்சரியமில்லை. சென்ற பொதுத் தேர்தலில் பாரிசான் கட்சி ஏன் தோல்வி அடைந்தது என்பது அவர்களுக்குத் தெரியாமலில்லை. சென்ற தேர்தலில் இளைஞர்களே பாரிசானை ஆதரிக்கவில்லை என்பது அவருக்குத் தெரியாமலிருக்க முடியாது. அது ஒன்றும் தங்கமலை இரகசியம் அல்ல!
பெரியவர்கள் சேர்ந்து நாட்டைக் கொள்ளையடித்தும் கும்மாளமடித்தும் நாசமாக்கியது மக்களுக்குத் தெரியும். அதனால் தான் அவர்களுக்கு ஏற்பட்டது தோல்வி! இப்போது கொள்ளைப்புற வழியாக அரசாங்கத்தைக் கவிழ்த்ததும் இளைஞர்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!
பாரிசான் கட்சி மேல் மக்களுக்கு அல்லது இளைஞர் அணியினருக்கு நல்லெண்ணம் வர வேண்டுமென்றால் அவர்கள் நேர்மையாளர்கள், நீதியானவர்கள் என்கிற பெயரை அவர்கள் எடுக்க வேண்டும். அதெல்லாம் நடக்கிற காரியமாகத் தெரியவில்லை!
திருடர்கள் "இனி நாங்கள் திருட மாட்டோம்!" என்று சொன்னால் நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை! அதற்கான வாய்ப்பே இல்லை! நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்த்தவர்கள் என்கிற பெயரோடு சுற்றிக் கொண்டிருப்பவர்களை யாரும் நம்ப மாட்டார்கள்! ஆனால் மக்கள் நம்ப வேண்டும் என்று அவர்களே சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்!
இளைஞர் அணி ஒன்று திரண்டால் என்ன நடக்கும் என்பதை ஹஸ்னி முகமட் தெரிந்து வைத்திருக்கிறார்! அதனால் தான் இந்த புலம்பல் நாடகம்!
இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும். தங்களது சக்தி என்ன என்பதைக் காண்பிக்க வேண்டும். பழைய பஞ்சாங்கங்களைத் தூக்கி எறிய வேண்டும்! அரசியல் என்றால் கொள்ளையடிப்பது என்கிற மனப்போக்கை மாற்ற வேண்டும்.
நாளை புதிய விடியல் தோன்ற வேண்டும்! புத்தம் புது காலை மலர வேண்டும்1
No comments:
Post a Comment