Friday 4 September 2020

மீண்டும் மீண்டும் ஏமாற்றம்!

 ஏமாற்றம் தான். என்ன செய்ய முடியும்? மீண்டும் மீண்டும் ஏமாற்றம். என்ன தான் செய்ய முடியும்?

பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தி தனது வாழ்க்கையில் ஏகப்பட்ட ஏமாற்றங்களைச் சந்தித்துவிட்டார். மீண்டும் ஏமாற்றம்.

ஆமாம், காவல்துறைத்  தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் தனது பங்குக்கு அவரும் இந்திரா காந்திக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறார்! அவரும்  இந்திரா காந்தியைக் கடைசி நிமிடத்தில் கை கழுவி விட்டார்! 

ஒரு சந்திப்புக்கு வரச் சொல்லிவிட்டு வரவில்லை என்றால் அது அவருக்குப் பெரிய விஷயம் அல்ல.  அந்தத்  தீடீர் மாற்றத்திற்குப் பல காரணங்கள் உண்டு. அவர் பதவி அப்படி. நாம் குறை சொல்ல முடியாது. அதனை  அந்தத் தாயின் பக்கம் இருந்து பார்க்க வேண்டும். இதனால் வரை அது ஒரு சந்திப்பு அளவுக்குப் போகவில்லை. அந்த அளவுக்கு காவல்துறையில் அது பெரிய விஷயமாகப் பார்க்கப்படவில்லை. 

ஆனால் ஒரு தாயின் பக்கம் இருந்து பார்க்கும் போது அது ஒரு எதிர்பாராத அழைப்பு. அதுவும் காவல் துறைத் தலைவரிடமிருந்து வருகின்ற  அழைப்பு. சமீப காலமாக காவல் துறைத் தலைவர் பேசிய பேச்சுக்கள் ஏதோ கொஞ்சம் நம்பிக்கைத் தரும் பேச்சாக, ஆறுதல் தரும் பேச்சாக இருந்ததினால் நமக்கும் அவர் பேச்சில் நம்பிக்கை ஏற்பட்டது.

கடைசியில் எதுவுமே இல்லை! எல்லாமே சும்மா டூப்பு என்கிற மாதிரி போய் விட்டது!

இப்போதைய நிலையில் பார்க்கும் போது இந்தப் பிரச்சனை மீண்டும் சுழியத்திலிருந்து தொடங்கப்படுமோ என்கிற சந்தேகத்தையும்  எழுப்புகிறது! 

ஆதரவாகப் பேசிய ஐ.ஜி.பி. ஏன் இப்படி ஒரு மாற்றத்திற்கு உள்ளானார் என்கிற கேள்வி நம்மிடையே உண்டு. நமக்குத் தெரிந்தவரை அது அரசியல் அழுத்தமாக இருக்கலாம் அல்லது மதவாதிகளின் அழுத்தமாக இருக்கலாம். ஆனாலும் தனது மகள் தொடர்ந்து இஸ்லாமியராக இருக்கலாம் என்று இந்திரா காந்தி சொல்லிவிட்டார்.  அதன் பின்னே என்ன பிரச்சனை? 

இவர்களின் பிரச்சனை என்ன? ஒன்று புரிகிறது. ஒரு பெண்ணின் குரலுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் பணிந்து விடக் கூடாது என்பது இந்தப் பழமைவாதிகளின் மனதில் ஊறிப் போன ஒரு கொள்கை. அதனை அவர்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள், அவ்வளவு தான்! 

எது உண்மை என்பது நமக்குத் தெரியாது. எதைச் சொன்னாலும் அதற்கு அவர்கள் மறுப்புச் சொல்லுவார்கள்!

எதற்கும் ஒரு முடிவு உண்டு. ஏமாற்றம் என்பது அது வரை தான்!

No comments:

Post a Comment