பொதுவாக கொரோனா தொற்று என்பதே ஓர் அதிர்ச்சி செய்தி தான்! மக்கள் அந்த அளவுக்குப் பீதியில் இருக்கிறார்கள்! உலகெங்கும் பயத்தை ஏற்படுத்தும் தொற்றாக அது இன்னும் விரிவடைந்து கொண்டிருக்கிறது! அதனை எப்படி நிறுத்துவது என்று இன்னும் எந்த நாடும் அதற்குத் தேவையான மருந்துகளைக் கண்டு பிடிக்க முடியாமல் திணருகின்றன!
இந்த நிலையில் கொரோனா தொற்று நோயினால் பாதிப்பு அடைந்தவர்களில் அதிகமானார் சுகாதார ஊழியர்கள் என்று அறியும் போது மனது கனக்கிறது. அவர்களில் சுமார் 53 விழுக்காட்டினர் என்பதாக சுகாதார அமைச்சு கூறுகிறது.
இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவமனைகளில் முன் நின்று நம்மை சோதித்து உள்ளே அனுப்பவர்கள் தான்! இவர்களில் பலர் எந்த முன்னெச்சரிக்கையும் எடுப்பதில்லை என்பது மட்டும் அல்ல தங்களது தொழிலில் அலட்சியமாக இருப்பவர்கள். அவர்களை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்! என்ன செய்ய?
இந்த புள்ளி விபரத்திலிருந்து இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். ஒரு சிறிய நாடான நமது நாட்டிலே இப்படி என்றால் உலகில் உள்ள மற்ற நாடுகளில் நிலவரம் எப்படி இருக்கும்? என்று யோசிக்க வேண்டியுள்ளது.
"எந்த வியாதியும் என்னை ஒன்றும் செய்யாது!" என்று நினப்பவர்களுக்கு ஆபத்து எப்போது வரும் என்று நம்மால் கூற முடியாது! இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவர்களில் பலர் முன்னரே சோதிக்கப்பட்டு "ஒன்றுமில்லை!" என்று எதிர்மறையான நற்சான்றைப் பெற்றவர்கள்!
ஆக ஒன்று மட்டும் உறுதி. சோதிக்கும் போது இல்லாமல் இருக்கலாம் ஆனால் அதன் பின்னர் கூட ஆபத்துகள் வரலாம்! வரக்கூடும்! எதனையும் அறுதியிட்டுக் கூற வழியில்லை!
நம் நாட்டில் இப்படி ஒரு நிலைமை என்னும் போது நம்மால் நம்ப முடியவில்லை. மருத்துவர்கள் சரியானப் பாதுகாப்பைக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் அவர்களுக்கும் ஆபத்துகள் வருகின்றன. உலகளவில் அந்த செய்திகளையும் கேட்கிறோம். நம் நாட்டிலும் இருக்கலாம்.
நமது சுகாதார ஊழியர்கள் தங்களது பாதுகாப்பில் அதிக அக்கறை எடுக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். செய்கின்ற வேலை ஆபத்து நிறைந்த வேலை என்பதை மனத்தில் கொண்டு தங்களது பணிகளை ஆற்ற வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறோம்.
அலட்சியம் வேண்டாம்! ஊழியரிடையே அலட்சியம் என்பது சாதாரண விஷயம் தான்! ஆனால் இது உயிரை எடுக்கின்ற விஷயம்!
அதனால் மீண்டும் மீண்டும் அதிர்ச்சியைக் கொடுக்காதீர்கள்!
No comments:
Post a Comment