Tuesday 8 September 2020

மந்திரி பெசார் அறியாதவரா?

ரோம் நகரம் தீப்பற்றி  எரியும் போது நீரோ  மன்னன் பிடில்  வாசித்துக் கொண்டிருந்ததாக ஒரு சரித்திர நிகழ்ச்சி நம்மிடையே சொல்லப்படுவது உண்டு!

அதனை ஞாபகப்படுத்துகிறது  சமீபத்திய சிலாங்கூர் மந்திரி பெசாரின் வீட்டில் நடந்த நிகழ்வு ஒன்று.  கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேருக்கு மேல் நான்கு நாட்கள் தண்ணீருக்காக அலை மோதிக் கொண்டிருந்த நிலையில் மந்திரி பெசார் வீட்டின் நீச்சல் குளத்திற்கு லோரிகளின் மூலம் தண்ணீர் கொண்டு சென்றதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன!

கேட்பதற்கு மனதுக்கு எப்படியோ இருக்கிறது என்பது உண்மையிலும் உண்மை.  குடிப்பதற்கு நீர் அனுப்பப்பட்டது என்றால் கூட ஏற்றுக் கொள்ளலாம்.  அதுவும் கூட குடி மக்களுக்குத் தான் முதல் சலுகை.  பெரிய மனிதர்களுக்கு எப்படியோ, ஏதோ ஓர் இடத்தில் அந்த வசதியும் வாய்ப்பும் கிடைத்துவிடும்!  அவர்கள் பிள்ளைகள் வீட்டில், சகோதர சகோதரிகள் வீட்டில், நண்பர்கள் வீட்டில் - இப்படித் தான் நாம் ஆபத்து அவசர வேளைகளில் பயன்படுத்திக் கொள்ளுகிறோம்.  

இப்படித்தான் மந்திரி பெசாரும் தனது குடி மக்களுக்கு முதலிடம் கொடுத்து தனது தேவைக்குத் பின்னுரிமை தர வேண்டும். குடி உயர்ந்தால் தானே கோன் உயர்வான்?

இந்த நிகழ்வில் இருந்து ஒன்று நமக்கு விளங்குகிறது. இப்போது அரசியலில் உள்ளவர்கள் எதுவாக இருந்தாலும் "முதலில் எனக்கு அதன் பின்னர் தான் உனக்கு!" என்கிற மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள்! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம்!

மக்களுக்கான சேவையில் நாம் இருக்கிறோம் என்பதெல்லாம் இப்போது மக்களுக்குச் சேவை ஆற்ற வருபவர்களுக்கு இல்லை என்றே சொல்லலாம்!

 

                                                  கல்லூரி மாணவி - வெவோனா

அரசியலில் இருப்பவர்கள்  தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளுகிறார்கள் என்பதை  சமீப காலமாக நாம் பார்க்கிறோம்.  ஒருவர் வெளிநாடுகளுக்குப் போய் வந்தார். எந்த ஊரடங்குச் சட்டத்தையும் பின்பற்றவில்லை!  ஒருவர் ஒரு கல்லூரி மாணவியை எகத்தாளமாக பேசுகிறார். அவருடைய எம்.பி.ஏ. பட்டமோ ஒரு கிறிஸ்துவ இறையியல் கல்லூரியிலிருந்து கொடுக்கப்பட்டதாம்!  இறையியலுக்கும்.எம்.பி.ஏ. வுக்கும் என்ன சம்பந்தம்?ஒருவர் ஒரு மதத்தை வம்புக்கு இழுக்கிறார்! இவரும் இறையியல் கல்லூரி தானோ! இவர்கள் எல்லாம் குட்டி ராஜாக்களாக ஜனநாயகத்தின் பெயரால் வலம் வருகிறார்கள்! கல்வியிலோ பூஜ்யங்கள்!

இவர்களுக்கு இந்த உரிமையை யாரும் கொடுக்கவில்லை! ஆனால் கொடுத்தாக அவர்களே சொல்லிக் கொள்ளுகிறார்கள்!  எல்லாம் அறிந்தவர்களாக காட்டிக் கொள்ளுகிறார்கள்!

ஆனால் இது போன்ற செயல்களில் மட்டும் - நீர் விநியோகம்  - அதாவது அவர்கள் அறிந்து கொள்ளாதது போல் நடிக்கிறார்கள்!

நமக்குத் தெரிந்தவை இவைகள் தாம். நமக்குத் தெரியாதவை?  பாவம் நமது பிரதமர்!  ஒரு பலவீனமான அரசாங்கத்தை வைத்துக் கொண்டு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்!

அவனவன் வைத்தது சட்டம் என்பது போல் நடந்து கொள்ளுகிறான்! எவ்வளவு நாளைக்குத் தான் இதைப் பிரதமர் தாங்க முடியுமோ!

No comments:

Post a Comment