இன்று காலையிலேயே தனது மகளிடம் பொறுமையிழந்த ஒரு தாயைக் காண நேர்ந்தது!
பிரச்சனை மகளிடம் இல்லை!
மகள் கணினியில் தனது பாடம் சம்பந்தமாக எதையோ செய்து கொண்டிருந்தாள். இடையிடையே தாய் புகுந்து கொண்டு "அப்படி செய்! இப்படி செய்!" என்று உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தார். அத்தோடு அவர் நிற்கவில்லை. "நீ போடோ! ஒரு முட்டாள்! இது கூட தெரியாதா? சீக்கிரம் செய்! " என்று திட்டிக் கொண்டிருந்தார்!
உண்மையைச் சொன்னால் யார் இங்கே முட்டாள்? அந்த தாய் தான் இங்கே முட்டாள்! அவர் மகள் அல்ல! இதை என்னால் சொல்ல முடியவில்லை. இது பொல்லாப்பில் போய் முடியும் என்பதால் நான் ஒன்றும் பேச முயற்சி செய்யவில்லை.
பெற்றோர்கள் குழந்தைகளிடம் எப்படி எல்லாம் தவறு செய்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.
பிள்ளைகள் கணினிகளை இயக்குகிறார்கள். அவர்களது பாடங்களைச் செய்கிறார்கள். அவர்களுக்குக் கணினிகளை இயக்கும் போது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவர்கள் கேள்விகள் கேட்கும் வரை பெற்றோர்களே பொறுமையாகக் காத்திருங்கள். அவர்கள் உங்களிடம் கேள்விகள் கேட்கும் வரை நீங்களாகவே உள்ளே புகுந்து குழப்ப வேண்டாம்.
அந்த அம்மா அப்படித் தான் செய்தார். மகளைக் குழப்பிக் கொண்டிருந்தார்! ஒன்றை அவர் புரிந்து கொள்ளவில்லை. மகளின் கேள்விக்கு அவர் பதில் சொன்னால் போதும். எப்படி செய்வது என்பதை விளக்கிச் சொன்னால் போதும். மற்றபடி அம்மாவுடைய அறிவையும் ஆற்றலையும் பிள்ளைகளிடம் காட்டிக் கொள்ள வேண்டாம் என்பது தான் முக்கியம்! அதனால் ஆகப் போவது ஒன்றுமில்லை! பிள்ளைகள் தவறு செய்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். வேறு வழியில்லை! வெற்றி பெற குறுக்கு வழிகள் ஏதும் இல்லை!
"சீக்கிரம் செய்! சீக்கிரம் செய்!" என்றால் பிள்ளைகள் தடுமாறிப் போவார்கள்! பாடங்களையே வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்! அம்மாவுக்கும் அதே கதிதான்!
அப்படி என்ன அவசரம்? அம்மா அருகில் இல்லாவிட்டால் தங்களது நண்பர்களைத் தொடர்பு கொண்டு அவர்களே பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு விடுவார்கள். நண்பர்கள் வேண்டாமென்றால் அம்மாக்களே நண்பர்கள் போல பிள்ளைகளிடம் பழக வேண்டும்.
சில பெற்றோர்கள் பிள்ளைகளிடம் ஏதோ எதிரிகளைப் போல நடந்து கொள்ளுகிறார்கள்! பின்னர் பிள்ளைகளே உங்களுக்கு எதிரிகளாகி மாறி விடுவார்கள் என்பதை மறக்க வேண்டாம்! அப்போது அம்மாக்கள் புலம்புவதால் பயனில்லை! இது முன்பும் நடந்தது! இப்போதும் நடக்கிறது! எப்போதும் நடக்கும்!
பெற்றோர்களே பிள்ளைகளைப் பொறுமை இழக்க வைக்காதீர்கள். நல்லபடியாக பேசி நல்லபடியாக அவர்களுக்குப் பாடங்களைத் தெளிவு படுத்துங்கள். உங்களுடைய அவசரத்தைப் பிள்ளைகளிடம் காட்டாதீர்கள்! உங்களுடைய அவசரத்தை அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள்!
பெற்றோர்களே! பொறுமை காக்க!
No comments:
Post a Comment