ஆறுகளில் தூய்மைக்கேடு என்பது நமது காதுகளில் அன்றாடம் விழும் சாதாரணப் பிரச்சனையாகிவிட்டது! இந்தப் பிரச்சனைகள் வரும் போதெல்லாம் அதிகாரிகள் காசை வாங்கிக் கொண்டு விட்டு விட்டார்கள் என்பது நாம் கூறுகிற குற்றச்சாட்டும் சாதாரண விஷயம் தான்! இதில் எந்த அளவு உண்மை அல்லது பொய் என்பது நமக்குத் தெரியாது! அதிகாரிகளைக் குற்றம் சொல்லுவதில் நமக்கு ஒர் அலாதியான இன்பம்! அவ்வளவு தான்!
ஆனால் இந்த முறை சிலாங்கூரில் நடந்த சம்பவம் என்பது மிகவும் கொடுமையானது. இதனை நாம் மன்னிப்பதற்கான வாய்ப்பில்லை!
முதாலாளிகள் என்ன தான் பணத்தைக் கொடுத்துச் சாதிக்க நினைத்தாலும் ஒரு சில விஷயங்கள் கட்டு மீறிப் போகும் போது அதன் பலனை அவர்கள் அனுபவித்துத் தான் ஆக வேண்டும்!
சிலாங்கூரில் நடந்த சம்பவம் கட்டு மீறி விட்டது என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இருக்க முடியாது! நான்கு நாட்கள் தண்ணீர் இல்லை என்பது , அதுவும் தவறான காரணங்களுக்காக என்பது, ஏற்றுக் கொள்ள முடியாது! பன்னிரெண்டு இலட்சம் மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகிற விஷயத்தை அதுவும் கொரோனா தொற்று நோய் காலத்தில், அதனை ஒரு கொலைக் குற்றமாக பார்க்க வேண்டும். மாற்று வழி இல்லாத நேரத்தில் மக்கள் படும் அவதியை எண்ணிப் பாருங்கள். அப்போது தான் வலி உங்களுக்குத் தெரியும்.
காவல் துறை சிறப்புப் படை அமைத்துக் கண்டறிவது என்பது பிரச்சனையை ஆறப் போடுகிற விஷயம். பயன் இல்லை!
இதற்குக் காரணமானவர்கள் நான்கு சகோதரர்கள் என்பதாகச் செய்திகள் கூறுகின்றன. இவர்களைக் கைது செய்வது சாதாரணம்! சிறையிலடைப்பது சாதாரணம்!
இவர்களுக்குப் பத்து ஆண்டு சிறைத் தண்டனையெல்லாம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. பிரம்படிகள் கொடுக்கப்படும் என்பதெல்லாம் எதிர்பார்க்க முடியாது!
என்ன தான் செய்யலாம்? ஒரே ஒரு வழி தான் உண்டு. அவர்களுக்கு ஐந்து இலட்சம் அபராதம் விதிக்கலாம் என்பதாக சட்டம் கூறுகிறது. அதாவது ஒருவருக்கு ஐந்து இலட்சம் என்றால் நான்கு பேருக்கு இருபது இலட்சம்!
இவர்களுக்குப் பணம் தான் வலியைக் கொடுக்கும்! கொலைக் குற்றச்சாட்டை விட இது ஒன்றும் அதிகம் இல்லையே!
No comments:
Post a Comment