சமீபத்தில் படித்த ஒரு செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
செல்வகுமார் தர்மலிங்கம் என்னும் 22 வயது இளைஞர், பத்தாய் காய்களை விற்பனை செய்து வருகிறார். அதிசயம் ஒன்றுமில்லை!
விற்பனைக்கான தனது பத்தாய் காய்களை அவர் பூர்வீகக் குடியினரிடமிருந்து வாங்குவதாக சொல்லுகிறார். நேரடியாக வாங்குபவர்களோடும் சேர்த்து வீடுகளுக்கும் நேரடியாக ஆர்டர் கொடுத்தவர்களிடம் கொண்டு போய் செர்க்கிறார். நல்ல காயாக வேண்டுமானால் ஒரு வாரத்திற்கு முன்னரே ஆர்டர் செய்ய வேண்டுமாம்!
ஒரு வித்தியாசமான அணுகுமுறையோடு செயல்படும் இளைஞர் செல்வகுமார் வருங்காலங்களில் வெற்றிகரமான தொழிலதிபராக வர முடியும் என்பதில் எந்த சந்தேகமில்லை.
ஆனாலும் ஒரு சில மனக்குறைகள் அவருக்குண்டு. வழக்கம் போல நண்டு கதைகளைச் சொல்லி நம்மைத் தாழ்த்திக் கொள்ளும் பழக்கம் நம்மிடையே உண்டு. ஆனால் நண்டு கதை நம்மிடமிருந்து வரவில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டில் இதனை ஆரம்பித்து வைத்தவர் காலஞ்சென்ற காப்புறுதித் துறையில் கொடிகட்டிப் பறந்த திரு. போல் நாயுடு (Paul Naidu) என்பதாக முன்பே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதனை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. காரணம் நாம் நண்டுகளில்லை!
அத்தோடு ஒரு சம்பவத்தையும் அவர் குறிப்பிடுகிறார். இளைஞர் ஒருவர் இவரைப் பார்த்து "தமிழன் மானத்தையே வாங்குகிறான்!" என்று சொல்லிவிட்டுப் போனாராம்! பொதுவாக தமிழர்கள் யாரும் இப்படிச் சொல்லுவதில்லை. மானத்தை வாங்க என்ன இருக்கிறது?
நம்மின இளைஞன் ஒருவன் தனது கல்விக்காக, தனது குடும்பத்திற்காக அவனது சொந்த உழைப்பைத் தனக்குத் தெரிந்த வழியில் செய்கிறான். ஆனால் அவன் 'தமிழன் மானத்தை வாங்குகிறான்' என்கிறான் ஒருவன். என்ன சொல்ல? அப்படியென்றால் குடித்துவிட்டு அஞ்சடிகளில் கும்மாளம் அடிக்கிறவனை என்னவென்று சொல்லுவான்? எனக்குப் புரியவில்லை!
நண்பர்களே! இளைஞர்கள் பலர் தங்கள் முன்னேற்றத்திற்காக பலவித வியூகங்களை வகுத்துச் செயல்படுகின்றனர். அவர்களைக் கேவலப்படுத்தாதீர்கள்! கொள்ளையடித்து மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளை விட இவர்கள் நல்லவர்கள். தனக்கென்று ஒரு வழியை ஏற்படுத்திக் கொண்டு முன்னேற நினைக்கும் இளைஞர் சமுதாயத்தைக் காயப்படுத்தாதீர்கள்.
பத்தாய் காய்கள், பந்துகள், பச்சை மிளகாய்கள் எதுவாக இருந்தால் என்ன விற்பவர்களைக் கேவலப்படுத்தாதீர்கள்!
இளைஞர் செல்வகுமார் வெற்றி பெற வாழ்த்துகள்!
No comments:
Post a Comment