ஒரு சில பிரச்சனைகளில் அதுவும் கருத்துச் சொல்ல முடியாத சில பிரச்சனைகளில் அவரவர் விருப்பப்படி கருத்துக்களைச் சொல்லுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதை நாம் சொல்லி வந்திருக்கிறோம். அதனை மீண்டும் இங்கே வலியுறுத்துகிறோம்.
தாய் மொழிப்பள்ளிகளைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம் அது பற்றி பேசுவது அதன் முன்னேற்றத்தை ஒட்டி இருக்க வேண்டுமே தவிர அதனை ஏதோ தீண்டத் தகாத ஒரு பொருளாக நினைத்துப் பேசுவதை நாம் ஏற்க முடியாது!
இன்னொன்று தாய் மொழிப்பள்ளிகளைப் பற்றி பேசும் போது அதனை அறிந்து பேச வேண்டும். குறிப்பாக அமைச்சராக இருப்போர் அது பற்றி அதிகம் அறிந்திருக்க வேண்டும்.
விளையாட்டுத்துறை துணை அமைச்சராக இருக்கும் வான் அமாட் பைசால் தான் ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர் என அறிந்து பொறுப்புள்ளவராக நடந்து கொள்ள வேண்டும். மக்கள் புரிந்து கொள்ளுமாறு அவர்களுக்கு விளக்கம் தர வேண்டும்.
பதவியில் உள்ளவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளுவது நல்லது. உங்களது தாத்தாமார்கள், தந்தைமார்கள் இங்குக் குடியேறுவதற்கு முன்பே தமிழ் இங்கே இருந்து வருகிறது! உங்களை எங்களோடு ஒப்பிடாதீர்கள்!
அமைச்சராக இருப்பவர்கள் அரசியல் சட்டம் என்ன சொல்லுகிறது என்பதைப் புரிந்து கொண்டு பேசுவது நல்லது. அமைச்சர்கள் மட்டும் அல்ல சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டத்தைப் பற்றியான அறிவு இருக்க வேண்டும்.
யாரோ ஒரு சிலர் கைதட்டுகிறார்கள் என்பதற்காக பொறுப்பற்றுப் பேசாதீர்கள்!
ஜ.செ.க.பொதுச் செயலாளர் லிம் குவான் எங் சொல்லுகின்ற கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். பொறுப்பற்று பேசுகின்ற அமைச்சர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
எந்த நேரத்திலும் கவிழலாம் என்று ஆட்டங் கொண்டிருக்கும் ஓர் அரசாங்கத்தில் பதவியில் இருந்து கொண்டு அரசாங்கத்தையே கவிழ்க்க நினைப்பது மாபெரும் துரோகம்!
மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது சரியே!
No comments:
Post a Comment