Saturday 19 September 2020

டாக்டர் மகாதிர் அப்படிப் பட்டவரா!

 ஒரு சில விஷயங்களை நாம் புரிந்து கொள்வது மிக மிகக்கடினம்!

அதுவும் டாக்டர் மகாதிரைப் பற்றி பேசும் போது அனைத்துமே கடினம் தான்! காரணம் எப்படிப் போய் எப்படிச் சுற்றிவந்தாலும் அவர் சீனர்களையோ, இந்தியர்களையோ நம்பியதில்லை! நம்பமாட்டார்!  மலாய்க்கரர் மீது இருக்கும் அக்கறை அவருக்கு வேறு இனத்தவர் மீது இல்லை! இதெல்லாம் அவரது ஆட்சியில் நாம் கண்டது தான்!

பக்கத்தான் கட்சி ஆட்சி என்பது 22 மாத கால ஆட்சிதான்.  அந்த 22 மாத கால ஆட்சியை அவர் வேறு யாருக்கும் விட்டுக் கொடுத்ததில்லை! அந்த காலக் கட்டத்தில் சீனர்களுக்கோ இந்தியர்களுக்கோ எந்த திடீர் மாற்றமோ அதிசயங்களோ நடந்ததில்லை!   அவரைக் கேட்காமல் எந்த துரும்பும் அசைந்ததில்லை!

நடந்தது எல்லாம் ஒன்று தான். நாட்டில் இலஞ்சம் வாங்குபவர்கள் தடுமாறினார்கள்! வாங்குவதை நிறுத்தி வைத்தார்கள்! அரசாங்கத்தில் வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாக இயங்கின! ஏதோ, எங்கோ, யாருக்கோ அவர்களிடம் ஒரு பயம் தெரிந்தது! இப்போது மீண்டும் பழையபடி இலஞ்சம் புத்துயிர் பெற்றுவிட்டது!

தாய்மொழிப்பள்ளிகளை ஆதரிப்போம் என்று சொன்ன மகாதிர் பதவிக்கு வந்ததும் அந்தர் பல்டி அடித்தார்! அவர் எந்த ஆதரவும் கொடுக்கவில்லை. அத்தோடு தாம் தாய்மொழிப்பள்ளிகளை ஆதரிக்கவில்லை என்பதாகப் பேட்டி கொடுத்தார்!

ஏன் இந்த கதையை இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறோம்? 

பக்காத்தான் ஆட்சியிலிருந்த போது ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தவர்கள் ஜனநாயக செயல் கட்சி - அதாவது சீனர்கள் என்பதாக - அம்னோ, பாஸ் போன்ற கட்சிகள் மலாய்க்காரரிடையே பயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன!

இப்போது அம்னோவின் மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்ஸாவும் அதே கருத்தைச் சொல்லும்போது "இவருமா இப்படி?" என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது! நிர்வாகம் மலாய்க்காரர் கையில் இருக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடில்லை! மாற்றம் ஏற்பட்டது ஏன்? இலஞ்சம் தானே தலையாயக் காரணம்!   அதற்குக் காரணமானவர் யார்?  என்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும். 

அப்படி என்றால் இலஞ்சம் ஒழிய வேண்டும் என்பதைவிட "இலஞ்சம் இருந்தாலும் பரவாயில்லை! நிர்வாகம் எங்கள் கையில் தான் இருக்க வேண்டும்!" என்று துங்கு ரசாலியே இப்படிச் சொன்னால், எப்படி? 

நிர்வாகம் நஜிப் கையில் இருந்திருந்தால் நாட்டை அவர் சீனாவுக்கு விற்றிருப்பார் என்பது அவருக்குத் தெரியும் தானே!  துங்கு எதனை முக்கியமாக கருதுகிறார்? நாடு முக்கியமா? அல்லது கொள்ளைக்காரர்கள் முக்கியமா? 

டாக்டர் மகாதிர் பிரதமராக இருந்த போது அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பது தான் முக்கிய செய்தி. அவர் யாரையும் நம்பவில்லை!  அவர் ஒவ்வொன்றையும், ஒவ்வொரு திட்டத்தையும் அனைத்தையும் படித்துவிட்டு,  விவாதம் செய்து விட்டுத்தான் அவர் கையொப்பம் இட்டார் என்பது துங்குவுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

டாக்டர் மகாதிர் சும்மா தலையாட்டி பொம்மை அல்ல!  அவர் நாட்டுப்பற்று உள்ளவர். இனப்பற்று உள்ளவர். நாட்டை எப்படி வழி நடத்த வேண்டும் என்று அனுபவம் உள்ளவர்! 

அவரை வெத்து வேட்டு என்று சொன்னால் யார் நம்புவார்?

No comments:

Post a Comment