Wednesday 9 September 2020

குடியை ஒழிக்க முடியுமா?

 இப்போதைய சூழலில் ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் - மனைவி இருவருமே வேலை செய்து பிழைப்பு நடத்த வேண்டிய நிலையில் இருப்பது ஒன்றும் அதிசயம் அல்ல! அதே போல இது ஒன்றும் புதிதல்ல!

 நமது பெண்கள்  எல்லாக் காலங்களிலும் குடும்பத்தைக் காப்பாற்ற கணவனுக்கு ஈடாக அவர்களது உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.  உண்மையைச் சொன்னால் மனைவி தனது உழைப்பைக் கொடுத்திரா விட்டால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கும்!

 காரணம்,   எப்போது நாம் தோட்டப்புறங்களில் வேலைக்கு வந்தோமோ அப்போதே குடியும் நம்மோடு சேர்ந்து கொண்டது!  தோட்டப்புறங்களில் நம்மைத் தக்க வைத்துக் கொள்ள வெள்ளைக்காரனுக்குக் கள்ளுக் கடைகள் தேவைப்பட்டன!  அவன் நினைத்தது வீண் போகவில்லை! நம்மை ஆண்டவன் நமது இனத்தைக் குடிகாரனாக ஆக்கிவிட்டுத் தான் போனான்!

அது இன்றளவும் தொடர்கிறது! என்பது தான் சோகம்.  நாம் எவ்வளவோ முன்னேறி விட்டோம். ஆனால் நம்மில் குடி கொண்டிருக்கும் குடி நம்மை விட முன்னேறிக் கொண்டு தான் போகிறது! 

குடி நம்மை முன்னேற விடாது.  அது நமது முன்னேற்றத்திற்கு என்றென்றும் தடைக்கல்.

இப்போதும் பல குடும்பங்கள் பெண்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன.  பிள்ளைகளின் கல்வி, குடும்பங்களின் தினசரி தேவைகள் அனைத்தும் பெண்கள் தான் சமாளிக்கின்றனர். ஆண்களால் எந்தப் பயனுமில்லை!

ஒரு குடும்பத்தைத் தெரியும்.  அம்மா இல்லை. அப்பன் குடிகாரன்./ அதாவது நிரந்திர குடிகாரன்.  இத்தனைக்கும் நடுத்தர வயதினன். வேலை செய்ய முடியாத அளவுக்கு சீக்கில் படுத்து விட்டான்! மகன் அப்பனை விட பெரிய குடிகாரன்! அப்பன் சாரயத்தைப் போட்டால் தான் தூக்கமே வரும்! பெண் பிள்ளைகள் உழைத்து ஏதோ கிடைக்கின்ற சம்பளத்தில் அப்பனுக்குச் சாராயம் வாங்கிக் கொடுத்து அவனைத் தூங்க வைக்கிறார்கள்! அவனுக்கு அது போதவில்லை. பள்ளிக்குச் செல்லும் ஒரு மகளை பள்ளிக்குப் போக விடாமல் "வேலைக்குப் போ!" என்று விரட்டி விரட்டி கடைசியில் அந்தப் பெண் குழந்தை வேலைக்குப் போகிறாள். அவனுடைய கூடப் பிறந்த சகோதரிகள் எதனையும் கண்டு கொள்வதில்லை. கல்வி எத்துணை முக்கியம் என்பதை அவனுக்குச் சொல்லிக் கொடுக்க ஆளில்லை! சொன்னாலும் கேட்கின்ற நிலையில் அவனில்லை! இவர்களுக்கு அடி, உதை உதவுவது போல வேறு எதுவும் உதவாது!

குடி நம்மில் ஒரு பகுதியாக இருக்கின்ற நிலையில் நமது எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது?

குடித்து கும்மாளம் அடிக்கின்ற சமுதாயம் முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. அதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

எல்லாவற்றிலும் அலட்சியம். எதைப் பற்றியும் கவலை இல்லை. நமது எதிர்காலம், பிள்ளைகளின் எதிர்காலம் என்பதைப் பற்றியெல்லாம் யோசிப்பதில்லை.

குடியை ஒழிக்க முடியுமா? முடியும்!  குழந்தைகளின் கண் முன்னால் அப்பன்மார்கள் குடிப்பதை நிறுத்தினாலே போதும்! வேறு எதுவும் தேவை இல்லை!

No comments:

Post a Comment