Wednesday 2 September 2020

இது அறிவுடையோர் செயல் அல்ல!

 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை வழி நடத்தும் பணியில் இருப்பவர்கள்.  

அத்தகைய நாடாளுமன்றத்தில் அறிவுடையோர் தான் இருக்க வேண்டுமே தவிர மண்டை மழுங்கியோர் இருப்பது நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல!

அத்தகைய மண்டை மழுங்கியோரில் பாஸ் கட்சியின் பாசிர்மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ நிக் முகமட் ஸவாவியும் ஒருவர்! புனித நூல்கள் திரித்துக் கூறப்பட்டவை என்பது அவரது இயல்பு!

பி.கே.ஆர். தலைவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நல்லதொரு கருத்தைச் சொன்னார்.  "அப்படிக் கூறுவது இஸ்லாத்தின் போதனைக்கு முரணானது"  என்கிற கருத்தை முன் வைத்திருக்கிறார்.

அன்வார் இப்ராகிம்,  நமக்கு வேண்டியவர் அல்லது வேண்டாதவர், பட்டியலில் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இஸ்லாத்தைப் பற்றி அவர் அளவுக்குத் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் ஏதோ ஓரிருவர் நமது நாட்டில் இருக்கலாம்.  இஸ்லாமிய மார்க்கத்தில் புலமைப் பெற்றவர். அவர் சொல்லுவதை மறுத்துப் பேச  யாரும் இல்லை என்பது உண்மை.

இப்போது நமக்கு ஒரு கேள்வி எழுகிறது. "இஸ்லாத்திற்கு முரணானது" என்று அன்வார் சொல்லுகிறார். இதற்கு நிக் முகமட் என்ன சொல்லப் போகிறார்?  என்ன பதிலை வைத்திருக்கிறார்? இஸ்லாத்திற்கு முரணானது அல்ல என்றால் அதனை அவர் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை.

அப்படி சொல்ல முடியாவிட்டால் அவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்? அவருடைய புனித நூலைப் பற்றியே அதிகம் அறியாத ஒருவர் மற்றவர்களின் புனித நூல்களைப் பற்றிப் பேச என்ன தகுதியைக் கொண்டிருக்கிறார்?  அவரை எப்படி அழைக்கலாம்? அதனை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன். 

மற்றவர்களின் புனித நூல்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்னர் தாங்கள் சார்ந்த மதத்தின் நூல்களை - புனித நூல்களை - ஐயமற கற்றிருக்க வேண்டும். அப்படிக் கற்றறிந்தாலே போதும். மற்ற மதங்களைப் பற்றி பேசுகின்ற நிலைமை வராது! ஐயமற கற்றவர்கள் அப்படிப் பேசுவதில்லை.

மற்றவர்களின் புனித நூல்களைப் பற்றிப் பேசுவதற்குப் பொது வெளிகள் ஏற்ற இடமல்ல! புனித நூல்களை விட மனித உறவுகள் மிக முக்கியம். 

மலேசியர்களிடையே ஒற்றுமையின்மையை விதைக்கும் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு!

வாழ்க மலேசியா!

No comments:

Post a Comment