Tuesday 22 September 2020

வெறும் மானியத்துக்காக மட்டுமா?

 

நெகிரி செம்பிலான் மாநிலம் என்பது பக்காத்தான் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் இதுவும் ஒன்று.

பக்காத்தான் அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிறையவே உதவி செய்கின்றது. நல்லது நடக்கும் போது நாம் பாராட்டுகிறோம். ஆட்சிக்குழு உறுப்பினர் ஜே.அருள்குமார் பாராட்டுக்குரியவர்.  வாழ்த்துகள்!

இந்த நேரத்தில் நாம் ஒன்றை பக்காத்தான் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

மானியங்களை அள்ளிக் கொடுப்பது சரிதான். ஆனால் மானியம் மட்டுமே போதுமானதல்ல. அதற்கு மேல் சில பிரச்சனைகள் இருக்கின்றன. முதலில் இந்த பள்ளிகள் யார் பெயரில் அதாவது அந்த பள்ளிகளின் உரிமையாளர் யார், அந்த நிலம் யாருடைய பெயரில் இருக்கிறது  என்பது முக்கியம். தனியார் பெயரில் இருக்கும் பள்ளிகளாக இருந்தால் அதற்கான மாற்றம் செய்யும் வேலைகள் இப்போதே தொடங்கப்பட வேண்டும்.

இந்த நேரத்தில் அதற்கான வேலைகளைச்  செய்ய முடியாவிட்டால் வேறு எந்த காலத்திலும் செய்ய முடியாது என்பதை தலைமையாசிரியர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

பொதுவாக தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் ம.இ.கா.வில்  பற்றோடு இருந்தவர்கள் தான். தவறில்லை!  அப்போது மானியங்களுக்காக அலையாக அலைந்தவர்கள் தான்! ஆனால் இப்போது மானியங்கள் கிடைக்கின்றன. அதனால் மற்ற வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்.  நிலத்தின் பெயர் மாற்றம் அல்லது பள்ளிகளின் பெயர் மாற்றம் - இப்படி இது போன்ற வேலைகள் செய்வதற்கு இதுவே சரியான தருணம்.

இன்றைய சூழலில் பல மாற்றங்கள் தேவைப்படுகின்றன. நல்ல கட்டடம் என்பது அனைவரையும் ஈர்க்கும் விஷயம். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். அதுவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.  மலாய், ஆங்கில மொழிகளின் திறனும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. விஞ்ஞானத்திலும் வளர வேண்டும்.. உலகளவில் தங்கப் பதக்கங்களைக் குவிக்கிறார்கள். பாராட்டுகள்!

இவைகளெல்லாம் பல நல்ல விஷயங்கள்.  ஆனால் ஒவ்வொரு பள்ளியிலும் ஏதாவது குறைகள் இருக்கத்தான் செய்யும். அந்த குறைகளைக் களைந்து விடுங்கள் என்பது தான் நமது நோக்கம். இந்நேரம் நல்ல நேரம்.  நமக்கு உதவி செய்ய அரசாங்கம்  காத்திருக்கிறது. அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பதைத் தான் நாம் வலியுறுத்துகிறோம்.

சமீபத்தில் மலாக்கா மாநிலத்தில் என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம். தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளராக ஒரு சீனப் பெண்மணியைப் போட்டிருக்கிறார்கள்!  பாரிசான் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.  அதைத்தான் இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.

அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஏதோ ஓரிருவர் பயன் பெறுவர். ஆனால் இப்போது பலர் பயன் பெறுகின்றனர். நமக்கும் சமுதாய நோக்கம் இருக்கத்தான் வேண்டும். மற்ற இனத்தவருக்கும் மட்டுமே அது உரியதல்ல!

ஆக, தலைமையாசிரியர்களே! பந்து உங்கள் கையில். அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். காலங்கடந்து புலம்பாதீர்கள்!

மானியம் மட்டும் அல்ல மானமும் நமக்கு வேண்டும்!

No comments:

Post a Comment