Wednesday 9 September 2020

இதென்ன வீர விளையாட்டா?

 ஒரு சில பெற்றோர்கள் செய்கின்ற தவறுகளைப் பார்க்கும் போது நமக்கு கவலையைத் தருகிறது!

ஒரு சிறுவன் லோரி டேங்கரை ஓட்டுகிறான்!  ஒரு சிறுவன் காரை ஓட்டுகிறான்! இருவருமே ஒன்பது வயது சிறுவர்கள்.


நாம் பெற்றோர்களைப் பார்த்துக் கேட்பதெல்லாம் இதில் என்ன பெருமை இருக்கிறது என்பதுதான்.

இப்படிக் குழந்தைகளை வைத்துக் காரை ஓட்டுவது, லோரி டிரைலரை ஓட்டுவது என்பது என்ன வீர விளையாட்டா என்பது தான் நாம் பெற்றோர்களைப் பார்த்துக் கேட்கின்ற கேள்வி. 

இப்படித்தான் பல பெற்றோர்கள் சிறுவர்களிடம் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவதற்கு அனுமதி கொடுக்கின்றனர். இது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.

குறிப்பாக தாமான்களில் பல விபத்துக்களை இவர்கள் ஏற்படுத்துகின்றனர். மெதுவாக  போனால் கூட நாம் மன்னித்து விடலாம். ஆனால் சிறுவர்களுக்குப் பயம் தெரிவதில்லை. எடுத்ததும் அவர்கள் ஏதோ பந்தயத்தில் போவது போல பறக்கின்றனர்! இளம் கன்று பயமறியாது, உண்மை தானே!

என்ன செய்வது? பட்டால் பட்டது தான்! யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அப்போது வந்து நியாயத்தைப் பேசுவதால் என்ன ஆகப் போகிறது? போனது போனது தான்!

பிள்ளைகள் சுறுசுறு வென்று தான் இருப்பார்கள். அது அவர்களின் இயல்பு. அப்படித்தான் இருக்க வேண்டும்.

ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு வரையறை உண்டு.  கார் ஓட்ட, லோரிகள் ஓட்ட எந்த வயதில் உரிமம் எடுக்க வேண்டுமோ அந்த வயதில் தான் அவர்கள் உரிமம் எடுக்க வேண்டும்.  எவ்வளவு தான் கார் ஓட்ட  பயிற்சிகள் பெற்றிருந்தாலும் நாம் நேரடியாகச் சென்று உரிமம் எடுத்து விட முடியாது. அப்போதும் பயிற்சி பள்ளிகளில் சேர்ந்த பின்னர் தான் உரிமம் எடுக்க முடியும்.

அதனால் அவசரப்பட வேண்டாம்.  அதற்கான வயது வரும் போது நீங்கள் அவர்களுக்கு உரிமம் கிடைக்க வகை செய்யுங்கள். 

இது ஒன்றும் வீர விளையாட்டல்ல! கரணம் தப்பினால் மரணம் என்பார்கள்! வீர விளையாட்டு தப்பிப் போனாலும் மரணம் மட்டும் தப்பாது!

இது சாகசம் புரியும் வயது அல்ல!  சாதனைகள் புரியும் வயது! கல்வி மூலம் தான் நீங்கள் சாதனைகள் புரிய வேண்டும்.

இது வீர விளையாட்டல்ல! வினை தரும் விளையாட்டு!

இளம் வயதில் கார் ஓட்டுவது, டிரயிலர் ஓட்டுவது, மொட்டார்  சைக்கிள் ஓட்டுவது - இவைகளெல்லாம் பெருமை என்பதாக வெளியே காட்டிக் கொள்ளாதீர்கள். 

ஆபத்தோடு விளையாடாதீர்கள் என்பது தான் நாம் கொடுக்கின்ற எச்சரிக்கை!

No comments:

Post a Comment