Monday 21 September 2020

எனது நண்பர்!

 

                                                      Dato' A.Ponniah - 1938 - 30.3.2020

டத்தோ பொன்னையா இறந்த செய்தி சமீபத்தில் தான் நான் தெரிந்து கொண்டேன்.

கொடூரமான கொரோனா தொற்று நோய் அனைத்தையும் உடைத்து எறிந்து விட்டது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. 

கொரோனா தொற்று நோயின் தாக்கத்தினால் அவரைப் பற்றியான செய்தி எதுவும் கிடைக்கவில்லை. வெளியே நடமாட முடியவில்லை. வீட்டிலேயே முடக்கம். தொடர்புகள் எதுவும் இல்லை. நாளிதழ்களும் கிடைக்கவில்லை. =

அந்த பழைய நாள்களை (1960 களில்) நினைத்துப் பார்க்கிறேன். அவர் செனவாங் தோட்ட தமிழ்ப்பள்ளியில் ஆசிரியர். நான் செனவாங் தோட்ட அலுவலகத்தில் வேலை.

பள்ளியை விட்டு வரும் போது எங்கள் அலுவலகத்திற்கு வருவார். நிறைய கடிதங்களை டைப் செய்து கொண்டிருப்பார்,  அவருக்கு நானும் கொஞ்சம் உதவி செய்தேன். இப்படித்தான் அவர் என்னையும் பொதுத் தொண்டுக்கு இழுத்துக் கொண்டு வந்தார்! அவர் தான் எனக்கு வழிகாட்டி.  

ஆனால் அரசியல் எனக்கு ஒத்துவராது என்பதால் ஒதுங்கிக் கொண்டேன். வேறு வழியில் எனது பணி தொடர்ந்தது.  மீண்டு சொல்லுகிறேன் அவர் தான் பொதுத் தொண்டுக்கான எனது வழிகாட்டி.

அவரைப் போன்று பொதுத் தொண்டு செய்வதில் நான் யாரையும் பார்த்ததில்லை.  பொதுத் தொண்டு என்பது யார் சொல்லியும் வராது.  அது இயற்கையாக வர வேண்டும்.   அது அவரிடம் இயற்கையாக இருந்தது.

அந்த காலக் கட்டத்தில் Who is Who in Malaysia  புத்தகத்தில் நெகிரி செம்பிலானைப் பொறுத்தவரை, இந்தியர்களில், அவரது பெயர் மட்டுமே வெளியாகி இருந்தது.  அதே சமயத்தில் அப்போதைய மாநில ம.இ.காவினர் ஏதோ காப்பிக்கடைகளில் கூட்டத்தைப் போடும் பழக்கத்தை வைத்திருந்தனர்! அதனை மாற்றியமைத்து மாநில ம.இ.கா. வுக்கு என ஒரு அலுவலகத்தைத் திறந்தவர் அவர் தான்.

குறைவான சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு வந்த அவர் ஏழை எளியவருக்கு முடிந்த அளவுக்கு உதவி செய்வார். 

அவரிடம் துடுக்குத் தனம் இருந்ததால் அவரை ஆசிரியர் பயிற்சியில் வெற்றி பெற விடவில்லை  என்று சொன்னது ஞாபகம். அவர் பள்ளிக்கு வரும் போது அந்த காலத்து வெள்ளைக்காரர்கள் போல்  காலணியில் கால் முட்டிவரை நீண்ட வெள்ளை சாக்ஸ் போட்டுக் கொண்டு வருவார்! அது அனைவரையும் எரிச்சலூட்டும்! அந்த காலக்கட்டத்தில் தோட்டப்புறங்களில், தமிழ்ப்பள்ளிகளில் இப்படியெல்லாம் யாரும் செய்யத் துணியமாட்டார்கள்!அவரிடம் பயம் என்று ஒன்றும் இருந்ததில்லை!

ஒரு நல்ல மனிதர். ஒரு நல்ல நண்பர். தொண்டு என்றால் நண்பர் பொன்னையா தான். மற்றவர்களுக்கு உ தவும் குணம் இயற்கையாகவே அவருக்கு இருந்தது. சொல்ல நிறைய இருக்கிறது.

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

No comments:

Post a Comment