Tuesday 8 September 2020

நேரத்தை தள்ளிப்போடாதீர்கள்!

 வேலை தேடிக் கொண்டிருந்த ஓர் இளைஞனுக்கு நேர்காணலுக்கு வரும்படி ஒரு நிறுவனத்தார் அவனை அழைத்திருந்தார்கள்.

அவன் குறிப்பிட்ட நேரத்தில் போக முடியவில்லை. அவன் கூறிய காரணம், கொரோனா தொற்று நோயினால் பொது போக்குவரத்துகள் குறைந்து போய் விட்டன.  அவன் தந்தையின் காரில் வர வேண்டியிருப்பதால் அவனின் தந்தை வந்ததும் தான் நேர்காணலுக்கு வருவதாக அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினான். 

அவனுக்கு வேலை கிடைக்கவில்லை! 

கொஞ்சம் யோசியுங்கள்.  அவன் நேர்காணலுக்கு வருவான் என்பதற்காக அந்த நிர்வாகி இவனுக்காக மற்ற வேலைகளை விட்டுவிட்டு இவனுக்காகக் காத்திருக்கிறார். இப்போது இவன் நேரத்தை மாற்றும் போது அவருக்கு அதனால் பல பிரச்சனைகள் வரும். அவர் செய்ய வேண்டிய வேறு வேலைகளைத் தள்ளிப்போட்டிருப்பார். எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்திருப்பார். இப்போது அவர் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளும் பாழாய்ப் போனது தான் மிச்சம்!   அத்தனை வீணடிப்பும் இவன் ஒருவனால் வந்தது!

இது ஒரு பக்கம். இன்னொன்று வெறும் நேர்காணலுக்கே இவன் காரணம் சொல்லிக் கொண்டிருக்கிறான்!  இவனுக்கு வேலை கொடுத்தால் இவன் எந்த அளவுக்குக் காரணங்களைச் சொல்லுவான்! காரணங்களைச் சொல்லுபவன் வேலை செய்யாததற்கும் காரணங்களை அடுக்கிக் கொண்டு போவான்!  இவன் வேலை செய்வதற்கு இலாயக்கானவனா என்று எந்த ஒரு முதலாளியும் யோசிக்கத்தான் செய்வார்கள்!

இப்போது இன்னொரு பக்கமும் உண்டு, இவன் நேர்காணலுக்குப் போக வேண்டிய இடம் சுமார் முப்பது மைல்கள் தள்ளிப் போக வேண்டும். கொரோனா தொற்று நோயினால் பொது போக்குவரத்துகள் எப்போதும் போல் இல்லை என்பது அவனுக்கு முன்னரே தெரியும். காரணம் அவன் பெரும்பாலும் பொது போக்குவரத்துக்களைப் பயன்படுத்துபவன் அப்படியே பிரச்சனைகள் இருந்தால் அவன் தன் தந்தையாரிடம் சொல்லி எத்தனை மணிக்குப் போக வேண்டும், எத்தனை மணிக்கு அங்கு இருக்க வேண்டும் என்பதையெல்லாம் யோசித்து  அதற்கு ஏற்றவாறு ஏற்பாடுகளைச் செய்திருப்பான்! 

அவன் எதனையுமே செய்யவில்லை.  இப்படி பார்க்கும் போது இவன் உண்மையிலேயே வேலை செய்ய வேண்டும் என்கிற அக்கறை உள்ளவனா என்பதை ஒரளவு நாம் ஊகிக்கலாம். 

நமக்கு வேலை வேண்டும் என்றால் நாம் தான் அக்கறை எடுக்க வேண்டும்.  முதலாளிக்கு எந்த அக்கறையும் இருக்க வேண்டி அவசியம் இல்லை!  வயிற்று வலி முதலாளிக்கு அல்ல நமக்குத் தான். 

இப்படித்தான்  நாம்  பல  வாய்ப்புக்களை இழக்கிறோம்.  நேரம் தவறாமை என்பது எல்லாம் இளம் தலைமுறையினருக்குத் தெரிவதில்லை!   எல்லாமே அவசரம்! அவசரம்! அவசரம்!  கடைசியில் எதையும் சாதித்தாகத் தெரியவில்லை!

எதையும் நேரத்தோடு செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்! நேரம் தவறாமையைக் கடைப்பிடியுங்கள்! நேரம் - போனால் போனது தான்! திரும்ப வாங்க எந்தக் கொம்பனாலும் முடியாது!

No comments:

Post a Comment