Friday 18 September 2020

இந்த சந்திப்பு தேவை தான்!

 இதனை நான் ஒரு நல்ல செய்தியாகவே எடுத்துக் கொள்ளுகிறேன்!

பொதுத் தேர்தல் என்று வரும் போது கழுதை குதிரையாகி விடும்! குதிரை கழுதையாகி விடும்! தேர்தல்,  அதன் மூலம் வரும் பட்டம் பதவி , அசைக்க முடியாத ஐந்து ஆண்டு கால தரசியல் அதிகாரம் - இது சாதாரண விஷயம் அல்ல! 

படித்தவனாக இருந்தாலும் சரி, படிக்காதவனாக இருந்தாலும் சரி மக்களுக்குத் தொண்டு செய்ய முடியுமோ முடியாதோ தனக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்கிறான்! பணம் கொடுத்தவன் பதவிக்கு வருகிறான்! கொடுக்காதவன் குதறி உதறப்படுகிறான்!  இது தான் இன்றைய அரசியல்!

இந்த நிலையில் பாஸ் கட்சியின் தலைவர், டத்தோஸ்ரீ ஹடி அவாங் அவர்களின் அழைப்பை ஏற்று மலேசிய இந்து சங்கம் அவரைச் சமீபத்தில் சந்தித்திருக்கிறது. 

அவரிடம் பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.   கிடைத்த செய்திகளின் படி மத மாற்றம், இஸ்லாமிய சட்ட அமலாக்கம்,  இந்திரா காந்தி விவகாரம்,  தாய் மொழிப்பள்ளிகள்,  இஸ்லாமிய போதகர்களின் தேவையற்ற தலையீடு போன்ற பல விஷயங்கள் அவரிடம் பேசப்பட்டிருக்கின்றன.

ஹடி அவாங் இதுவரை இப்படி ஒரு சந்திப்பை இந்து தலைவர்களிடம் பேசியிருக்க வாய்ப்பில்லை என நம்பலாம். அதைவிட அவர் அவர்களுக்கு எந்த மரியாதையையும் கொடுத்திருக்கவும் மாட்டார்!  ஒரே காரணம் தான்! பிற மதங்களை மதிக்கும் தன்மை அவரிடம் இல்லை! இஸ்லாம் அப்படி சொல்லவில்லை! அவருடைய அரசியல் அப்படி!

எப்படியோ அவரது கட்சியினர் பதவிக்கு வர முடியும் என நம்புகின்றனர்.  பதவிக்கு வந்தால் கொஞ்சம்  நாவை அடக்கிப் பேசுவார்கள் இல்லாவிட்டால் அவர்களது அராஜகத்தை தொடர்வார்கள்!

ஒரு காலக் கட்டத்தில் அவர்களுடனான  எனது தொடர்பு நன்றாகவே இருந்தது!  அப்போது நான் ம.இ.கா.வில் இருந்தேன், அப்போது அவர்கள் அம்னோவுடன் இணைந்திருந்தார்கள். அந்த நேரத்தில் நான் இருந்த சட்டமன்றம் அவர்கள் கையில் இருந்தது. அப்போது அந்த சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து அங்குள்ள ஓர் இந்து கோயிலுக்கு 2000 வெள்ளி உதவி வாங்கினோம். இது ஐம்பது ஆண்டு காலத்திற்கு முன் நடந்தது! 

இந்த முறை இவர்கள் வருவார்களா என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. வரக் கூடாது என்பதே எனது விருப்பம். திருடர்களையும், கொள்ளைக்காரர்களையும் நாம் ஆதரிக்கக் கூடாது என்பதே எனது எண்ணம்.

இந்த சந்திப்பு மூலம் என்ன கிடைக்கப் போகிறது என்பது முக்கியம் அல்ல. நல்லது நடக்க வேண்டும். இந்த நாட்டில் நல்லது நடக்க வேண்டும். நமது மொழி, நமது சமுதாயம், நமது சமயம் காக்கப்பட வேண்டும். 

அப்படி காக்கப்பட வேண்டுமானால்  நாம் அனைவரையும் அணைத்துச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். நாம் மூன்றாவது பெரும்பான்மை, நம்மைவிட வந்தேறிகள் கூடிவிட்டார்கள்!

தேவையான சந்திப்பு தான்! நல்லது நடந்தால் நல்லது தானே!

No comments:

Post a Comment