Saturday 12 September 2020

இது தேச விரோதம்!

 

தேச விசுவாசிகளின் இயக்கமான பேட்ரியோட்டின் தலைவர், பிரிகேடியர் ஜெனரல் முகமட் அர்ஷாட் ராஜி சொன்ன ஒரு கருத்து நம்மை யோசிக்க வைக்கிறது.

ஆமாம்! தாய் மொழிப்பள்ளிகளை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுப்பது தேச விரோதம் என்பதாக அவர் கூறியிருக்கிறார். அதனையும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

இப்போது உள்ள தலைமுறைக்கு இவர் பேசுகின்ற பேச்சுக்கள் போய் சேரவில்லை என்று இவர்கள் சொன்னால் இது சிந்திக்கத் தெரியாத, அரைகுறை கல்வி கற்ற சமுதாயம் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது!

முகமட் அர்ஷாட் போன்றவர்கள் பேசுவதை அலட்சியப்படுத்தினால் பாதிப்படைவது இளைய தலைமுறை தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இளைய தலைமுறை பேசிப்பேசியே தங்களது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். எது சரி எது தவறு என்பதைப் பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை! 

குறிப்பாக, மலாய் வாக்காளர்களிடையே தங்களது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள இரண்டு விஷயங்களைப் பற்றி பேசுகிறார்கள். அது அவர்களை உயர்த்தி விடுமாம்! ஆமாம் தாயமொழிப்பள்ளிகள், மதம் இவைப் பற்றி பேசினால் அவர்களது  செல்வாக்குக் கூடிவிடுமாம்! 

சரியான அறிவுக் களஞ்சியுங்கள்! இந்த வீராதி வீரர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். மதங்களைப் பற்றி பேசுவது ஒரு வழிச் சாலை என்பது தெரியுமா?  எங்களுக்கும் அந்த ஒரு வழிச் சாலையில் போக அனுமதியுங்களேன்! பிறகு துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடுவது யார் என்று பாருங்களேன்!

தாய் மொழிப்பள்ளிகளைப் பற்றி பேச எந்த அருகதையும் உங்களுக்கில்லை. உங்களுக்கு   முன்னால் நாங்கள் இங்கு இருக்கிறோம்!  சரித்திரத்தைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள், தெரியும்!

அரசியல் தெரியாதவனெல்லாம், சரித்திரம் தெரியாதவனெல்லாம்  மெத்த படித்தவன் போல பேசி தனது முட்டாள்தனத்தைக் காட்டுவதைப் பார்க்கும் போது  நமக்கு வேடிக்கையாக இருக்கிறது!

அதனால் தான் முன்னாள் பிரிகேடியர் ஜெனரல் முகமட் அர்ஷட் ராஜி போன்றவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள், என்ன பேச வருகிறார்கள் என்பதை இளைய தலைமுறை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையாக இந்த நாட்டை நேசிப்பவர்கள் அனைவரும் நமது முன்னாள் ஜெனரல் சொல்லுவதைக் கேட்க வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். கடைப்பிடிக்க வேண்டும்.

இனி இந்தப் பிரச்சனை தேச நிந்தனையின் கீழ் வரலாம்!

No comments:

Post a Comment