Sunday 13 September 2020

எனது முதல் இரயில் பயணம்!

சாமேக் இரயில்வே நிலையத்தின் சேவை கடந்த 6-ம் தேதியுடன் ஒரு முடிவுக்கு வந்தது  என்கிற பத்திரிக்கைச் செய்தி எனது பழைய நினைவுகளுக்குக் கொண்டு சென்றது.

நான் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்தவன் அல்ல. நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்தவன்.

ஏறக்குறைய எனது பத்தாவது வயதில் எனது பெற்றோருடன் சிரம்பானிலிருந்து சாமேக் சென்றது ஞாபத்திற்கு வருகிறது. அதாவது 1951 அல்லது 1952  ஆக இருக்கலாம்! 

அது தான் முதல் இரயில் பயணம். வெள்ளை சட்டை அணிந்திருந்தேன். சட்டையெல்லாம் கரி!  அப்போதெல்லாம் இரயில் ஓடுவதற்கு எஞ்சினில் நிலக்கரியைப் பயன்படுத்தினார்கள். அந்த ஞாபகம். அந்த கரி, இன்னும் ஞாபகத்தில் இருக்கிறதென்றால் எனது சட்டை எப்படி இருந்திருக்கும்!

அப்போதெல்லாம் கார்,  டெக்சி என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. டெக்சி இருந்ததா என்று கூட  தெரியவில்லை!  இரயில் பயணம் மட்டும் தான் சுலபமான வழி. அது ஒரு நீண்ட பயணம். காலையில் புறப்பட்டு மாலை வேளையில் தான் போய்ச் சேர்ந்தோம்.

சாமேக் அருகே  சாமேக் தோட்டம் என்கிற இடத்திற்கு நாங்கள் சென்றிருந்தோம். அங்கே எங்களது உறவுக்கார பெண் ஒருவருக்குத் திருமணம். அதற்காகத் தான் இந்த பயணம்.

இந்த பயணத்திற்குப் பின்னர் நான் மீண்டும் இரயில் பயணம் செய்தது எனது 45 - வது வயதில்  அப்போது குளுவாங், மெர்சிங் அருகே ஒரு தோட்டத்தில் வேலை. அதனால் அடிக்கடி பயணம் செய்ய நேர்ந்தது. 

அந்த நேரத்தில் இந்த சாமேக் தாண்டித் தான் இரயில் போகும். அப்போதும் இந்த சாமேக் தோட்டமும் - அந்த பெயர் பலகையும் - வந்து போகும். பார்த்திருக்கிறேன்.  அந்த பழைய நினைவுகளும் வந்து போகும்!

ஏதோ ஒரு பழைய நினைவு என்பதைத் தவிர குறிப்பிட்டுச் சொல்ல வேறு எந்த நினைவுகளும் ஞாபத்திற்கு வரவில்லை. 

அந்த பத்தாவது வயதில் அந்த முதல்  இரயில் பயணமும் இரயில் தூவிவிட்ட அந்த கரியும் தவிர மற்றவை எதுவும் சொல்லும்படியாக இல்லை!

நான் முதன் முதலாக சென்று அடைந்த அந்த முதல் இரயில் நிலையம் இப்போது மூடப்பட்டுவிட்டதாக அறியும் போது எல்லாவற்றுக்குமே ஒரு முடிவு உண்டு என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல வரவில்ல!

No comments:

Post a Comment