Monday 14 September 2020

ஜனநாயகம் படும் பாடு!

 ஜனநாயகத்தில் அரசியல்வாதிகள் தான் அரசர்கள்! சர்வ வல்லமை படைத்தவர்கள்!  உண்மையான அரசர்களெல்லாம் பொம்மைகளாக்கப் பட்டு போலிகளெல்லாம் பொம்மலாட்டம் போடுவது தான் ஜனநாயம்!

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிறைத் தண்டனையும் அளித்தது.

ஆனால் இன்று அவர் ஓர் மகாராஜா போல  நாட்டை வலம் வருகிறார்! தான் குற்றவாளி அல்ல என்கிறார்! ஒவ்வொருவரையும் கிண்டலடிக்கிறார்! தான் குற்றவாளி அல்ல என்று மக்களை நம்ப வைக்கிறார்!

இதற்கெல்லாம் ஒரே காரணம் அடுத்த பொதுத் தேர்தலில் தனக்குச் சார்பான கட்சி ஆட்சி அமைக்கும் என மிக மிக நம்புகிறார்! அப்படி அவர் சார்ந்த கட்சி ஆட்சி அமைத்தால் அவர் குற்றவாளி அல்ல என்று  நீதிமன்றமே தனது தீர்ப்பைத் திருத்தி எழுதலாம்! 

இது தான் ஜனநாயகம்!

அதே சமயத்தில் எதிர்கட்சித் தலைவர் லிம் குவான் எங்ஙிற்கு என்ன நடக்கிறது பாருங்கள். அவர் குற்றம் சாட்டப்படுகிறார்! ஒன்று, இரண்டு என்றல்ல! தொடரந்தாற் போல் வரிசையாகக் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன! எதிலும் சம்பந்தப்படாத அவருடைய மனைவியும் குற்றம் சாட்டப்படுகிறார்!  

எந்தக் குற்றச்சாட்டும் நிருபிக்க முடியாது என்று தெரிந்தாலும் அவர் குற்றவாளி போல நடத்தப்படுகிறார்!  அவர் சபாவுக்குள் நுழைய முடியாது என்று தடுக்கப்படுகிறார்!

நீதிமன்றம் என்ன சொல்லுகிறது என்பது பற்றி யாரும் கவலைப் படவில்லை!  கவலை எல்லாம் நஜிப் குற்றவாளி அல்ல, சுதந்திரமாக வலம் வரலாம்! லிம் குவான் எங் குற்றவாளி அதனால் தடுக்கப்படுகிறார்! இது தான் இன்றைய அரசாங்கத்தின் நிலைமை!

யார் யாரையோ திருப்தி படுத்த அரசாங்கம் மௌனம் காக்கிறது!  காக்கத்தான் வேண்டும்! ஊழல் நிறைந்தவர்களால் நடத்தப்படுகின்ற ஓர் அரசாங்கம் இப்படித்தான் செயல்பட வேண்டும்!  வேறு வழியில்லை!

அதே சமயத்தில் அவர்கள் நினப்பது போன்று நடவாமல் ஆட்சி முன்பு நடந்தது போல எதிர்கட்சிப் பக்கம் போனால்....? ஒருவர் நாட்டைவிட்டு ஓடுவதற்குத் தயாராக இருப்பார்! அதற்கு அரசாங்கம் துணை நிற்கும்! எல்லாம் தலைகீழாக மாறிவிடும்! 

இது தான் இன்றைய நிலைமை! ஜனநாயகத்தில் நாம் நினைப்பது போன்று நடப்பதில்லை! நீதி,  நியாயம் அனைத்தும் குழி தோண்டி புதைக்கப்படும்!

இன்றைய உலகில் ஜனநாயகம் கேலிப் பொருளாகிவிட்டது!

No comments:

Post a Comment