Thursday 3 September 2020

தீவிரவாத இயக்கமல்ல!

 விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல என்பதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் கூறியிருப்பது அவர் ஏதோ மேலோட்டமாகக் கூறவில்லை என்பதை இன்றைய அரசாங்கத்தினர் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர் உலகில் உள்ள பல தீவிரவாத இயக்கங்களைப் பற்றி அறிந்தவர், புரிந்தவர்.

ஸ்ரீலங்காவில் அவர்களைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். நேரத்துக்குத் தகுந்தவாறு அவர்கள் தங்களது நிலையை மாற்றிக் கொள்ளுவார்கள்.  அது அவர்களுக்குத் தேவையானது.  மக்களின் வாக்குகளைப் பெற அவர்களது கொள்கையும் மாறும்! குணமும் மாறும்! அது வெறும் அரசியல்! 

ஆனால் நமது நிலை வேறு.  நமக்கு அங்குள்ள தமிழ் மக்கள் மீது அனுதாபம் உண்டு. இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்த  சிங்கள இராணுவத்தை  நம்மால் கொஞ்சிக் குலாவ முடியாது! அந்த வலி உலகம் எங்கும் உள்ள தமிழர்களுக்கு இருக்கத்தான் செய்யும். அது மலேசியத் தமிழருக்கும் உண்டு.

அதனை வைத்து இங்குள்ள தமிழர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரைக் குத்துவது என்பது நமது புக்கிட் அமான் தவறாக வழி நடத்தப்படுகிறது என்பது தானே தவிர இங்குள்ள தமிழர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை!

ஒன்று நமக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்று புக்கிட் அமான் கூறுவதிலிருந்து அவர்கள் இதனை இங்குள்ள தமிழர்கள் மீது தவறாகப் பயன்படுத்த ஒரு வசதியாக, வாய்ப்பாக இருக்கும் என்பதற்காக அந்த இயக்கத்தின் மீது பழி போடுகின்றனர்  என்பது மட்டும் தான்!

அதனை அவர்கள் அரசியல்வாதி தமிழர்கள் மீது கைவைக்க விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளுகின்றனர்!  இது தான் இங்கு நடந்தது! பக்கத்தான் ஆட்சியில் எந்தக் காரணமுமின்றி அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் கொடுமைப் படுத்தப்பட்டனர். கடைசியில் அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பதாக விடுதலை  செய்யப்பட்டனர்.  அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பது நமக்குத் தெரியும்.  அதன் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் அவர்களின் நோக்கம் எல்லாம்  அவர்களைக் கொடுமைப்படுத்த வேண்டும் என்பது மட்டும் தான்!

எப்படியோ முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் "விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல" என்பதாக உறுதியாகக் கூறிவிட்டார்.  அதே போல முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் அவர்களும் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அல்ல என்று மறு உறுதிபடுத்தி விட்டார்.

ஆனால் இன்றைய அரசாங்கமும் புகிட் அமானும்  "எவனைப் பிடிக்கலாம்! எவனை அமுக்கலாம்!" என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்!

 

No comments:

Post a Comment