Sunday 19 December 2021

நன்றி! முத்துக்கிருஷ்ணன் சார்!

நீண்ட நாள்களாக ஒரு பிரச்சனை மனதை அரித்துக்கொண்டே இருந்தது!

அதற்கு விடை இன்று தான் கிடைத்தது.   இன்று தமிழ் மலர்,  ஞாயிறு மலரில் (19.12.2021) மலாக்கா முத்துக்கிருஷ்ணன் எழுதிய கட்டுரையில் அதற்கான விடை கிடைத்தது.

அன்று பல தோட்டங்களைப் பற்றி பேசும் போது பலருக்குத் தோட்டங்களின் பெயர்கள் தெரியவில்லை. ஒன்று அவர்களுக்கு அத்தோட்டங்களின் பெயர்களை உச்சரிக்கத் தெரியவில்லை. அப்படியும் இருக்கலாம் அல்லது மிக எளிமையாக சொல்லுவதற்கு இரண்டாம் கட்டை, நான்காம் கட்டை, பத்தாங் கட்டை என்று சொல்லுவது எளிதாக இருக்கலாம்!

நான் மூன்றாங் கட்டை, ஆறாங் கட்டை தோட்டங்களில் வசித்தவன். இன்னும் இதே வரிசையில் ஏழாம் கட்டை, எட்டாங் கட்டை, பத்தாங் கட்டை தோட்டங்களும் உண்டு. இன்றும் அத்தோட்டங்கள் அப்படித்தான் அழைக்கப்படுகின்றது. அத்தோட்டங்களின் பெயர்களைச் சொன்னால் அது அந்நியமாகப்படுகிறது! குறைந்தபட்சம் இங்குள்ளவர்களுக்கு இன்னும் கட்டை தான்!

இந்த கட்டை என்கிற வார்த்தையின் பொருள் விளங்குகிறது. அதாவது ஆறாவது மைல், ஏழாவது மைல் என்பது தான் பொருள். ஆனால் ஏன் அந்த கட்டை என்பது தான் விளங்கவில்லை! அந்தக் கட்டை எங்கிருந்து வந்தது?

நான் இளமைக்காலம் முதல் தூர அளவைக் குறிப்பதற்கு கற்களால் ஆன மைல்கற்களைத்தான் பார்த்து வருகிறேன். ஆனால்  கட்டைகளால்  ஆன கட்டைத் தூண்களை நான் பார்த்ததில்லை! அதாவது தூரத்தைக் குறிக்க!

ஆனால் அது அதிகாரபூர்வமாகவோ அல்லது அதிகாரமற்றதாகவோ நமது மக்கள் அதனைக் கட்டை என்கிற சொற்களையே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்! அது இன்னும் பயன்பாட்டில் உள்ளது என்பது தான் ஆச்சரியம்! குறைந்தபட்சம் நமது பேச்சு வழக்கில்!

கட்டைத் தூண்கள் என்பதும் அந்த கட்டைத் தூண்கள் தேக்கு மரத்தால் ஆனது என்பதும் எனக்குப் புதிய செய்தி.  தேக்கு மரம் என்னும் போது பர்மா தான் அதற்குப் பேர் போன நாடு. ஆக, பர்மாவின் தேக்கு மரத்தைக் கொண்டு அக்கால மலேயாவில் மைல்களைக் குறிக்க கட்டைத் தூண்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது வியப்பான செய்தி தான். அது எந்தக் காலக்கட்டம் என்பது நமக்குத் தெரியவில்லை. நானும் அப்படி ஒரு கட்டைத் தூண்களைப் பார்த்ததில்லை! ஆசிரியர் குறிப்பிடுவது போல அது 1800-ம் ஆண்டுகளில் அல்லது அதற்கு முன்பே  இருக்கலாம்!

இன்னொன்றையும் நான் குறிப்பிட வேண்டும்.  பிரிக்ஃபீல்ட்ஸ் (Brickfields)  என்னும் சொல்லுக்கு செங்கல் திடல் அல்லது செங்கல் களம் என்பதும் நான் அறியாத செய்தி தான். இந்த கட்டுரையின் மூலம் அதனையும் நான்  தெரிந்து கொண்டேன்.

நன்றி நண்பரே! 

குறிப்பு:  மேலே உள்ள படத்திற்கும் நமது கட்டைத் தூண்களுக்கும் சம்பந்தமில்லை.

No comments:

Post a Comment