Tuesday 28 December 2021

வேண்டுமென்றே புறக்கணித்தாரா பிரதமர்?


இந்த ஆண்டு பிரதமர்,  டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி   கிறிஸ்துமஸ் தேநீர் விருந்தினைப் புறக்கணித்ததாக தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துவ அமைப்புககள் கூறுகின்றன. 

ஒவ்வொரு ஆண்டும் 1999 ஆண்டு முதல், பிரதமர் தேநீர் விருந்துக்கு வருவது வழக்கமான ஒன்று. அவர் வருவதற்கான வாய்ப்பு இல்லை என்றால் அவரது பிரதிநிதியாக ஒருவரை அவர் அனுப்பி வைப்பதே  வழக்கம். இதுவே இதுவரை நடைமுறையாக இருந்து வருகிறது.

ஆனால் ஏதோ வேலை காரணமாக இருக்கலாம்.  கோவிட்-19, வெள்ளப் பெருக்கு இப்படி பல பிரச்சனைகளை நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அவர் அதனை நினைத்து வேதனைப்பட்டிருக்கலாம்! அது நமக்குப் புரிகிறது.  அவர் தனது பிரதிநிதியாக யாரையாவது அனுப்பி வைத்திருக்கலாம். அது ஒரு மரியாதை அவ்வளவுதான்.

மலேசியர் அனைவரும் ஒரே  குடும்பம் என்று சொல்லுவது எளிது. அதனை நடைமுறைப்படுத்துவது  கொஞ்சம் சிரமம்.  குடும்பம் என்றால் தறுதலைப் பிள்ளைகள் இருக்கத்தானே செய்யும்!

நமது நாடு பல இனம்,  பல மொழி, பல கலாச்சாரம்,  பல சமயம் கொண்ட ஒரு நாடு. ஒருவர் ஒருவரை மதிக்க வேண்டும். தனித்து வாழ யாராலும் இயலாது.  ஒருவர் உதவி ஒருவருக்குத் தேவை.

இப்போது அவர் தலைமை தாங்குகிற அரசாங்கமே எதிர்க்கட்சிகளுடனான  ஒரு கூட்டணி தான்! அவரால் தனித்து இயங்க முடியாது என்பது அவருக்கே தெரியும். ஆனால் தன்னை யாரும் அசைக்க முடியாது என்பது போன்றே நடந்து கொள்ளுகிறார்!

பிரதமருடைய எண்ணங்கள் வேறு மாதிரியாக இருக்கலாம். அவர் தற்காலிக பிரதமர் என்பதை அவர் மறந்து விடவில்லை. என்னமோ அடுத்த தேர்தல் வரும்வரை பேர் போடலாம். அதன் பிறகு தாளம் போடத்தான் வேண்டி வரும் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். ஏதோ பிரதமர் பதவியில் இருக்கும்வரை நாலு காசு பார்ப்போம்; இந்நேரத்தை விட்டால் பின்னர் தாளம் தான்! அதனால் இப்போதே, இருக்கும் போதே - காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வோமே - என்று அவர் நினைக்கலாம்!

எப்படியோ அவரை நாம் பாராட்டுவோம். இந்த தேநீர் விருந்தினை தவிர்ப்பதால் பாஸ் கட்சியினரிடம் நல்ல பேர் வாங்கலாம்! அதே சமயம் இஸ்லாமிய போதகர் ஸாகிர் நாயக்கையும் சந்தோஷப்பட வைக்க முடியும்! அவரும் சில அரசியல் காய்களை நகர்த்தி தான் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும்!

இப்படி ஒரு வாய்ப்பு இனி அவருக்குக் கிடைக்கப் போவதில்லை! போனது போனது தான்!  நாட்டில் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை ஒன்பது விழுக்காடு தான்! ஆனால் அவர்களைக் கூட திருப்திபடுத்த முடியாத ஓர் அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குகிறார் பிரதமர்!

கிறிஸ்துவர்களைப் புறக்கணிக்கலாம்! அவர்களின் வாக்கைப் புறக்கணிப்பீர்களா?

No comments:

Post a Comment