மழை விட்டாலும் தூவானம் விடவில்லை! இது தான் சிம்புவின் கதை!
மாநகரம் சிம்புவுக்கு ஒரு வெற்றிப் படம். அந்த வெற்றி சும்மாவரவில்லை. அந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் பல பணத் தடங்கல்களைத் தாண்டித் தான் இந்தப் படத்தை வெளியிட்டார்.
அதுமட்டுமல்ல. இந்தப் படம் வெளியாவதற்கு முன்னர் சிம்புவின் தாயார் உஷா கண்ணீர் விட்டார். தந்தை ராஜேந்தர் கண்ணீர் விட்டார். கடைசியில் சிம்புவும் கண்ணீர் விட்டார். அதனை நாம் விரும்பவில்லை. தனது பெற்றோரைக் கண்ணீர் விடவைப்பது எவ்வளவு பெரிய சோகம் என்பதை சிம்பு உணர்ந்திருக்க வேண்டும்.
எப்படியோ அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இனி அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சுபம் கூறும் வேளையில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியிருக்கிறது நிலைமை! ஆம்! தந்தை ராஜேந்தர் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிட்டார்! மீண்டும் சவடால்! மீண்டும் வழக்கு! மீண்டும் மகனை வைத்துக் கொண்டு பகடைக்காய் ஆட்டம் ஆடுகிறாரோ ராஜேந்தர்?
தந்தை ராஜேந்தரை விடுவோம். நடிகர் சிம்பு இனி தனது பிரச்சனைகளைத் தானே கையாள வேண்டும். இனியும் தொடர்ந்து ஏதோ விவாதத்திற்கு உரிய மனிதராகவே சினிமாவில் வலம் வருவாரானால் அது அவரது எதிர்காலத்திற்கு நல்லதல்ல. அவர் நல்ல நடிகராக இருக்கலாம். அவரைச் சுற்றி ஒரு மாபெரும் இரசிகர் கூட்டம் கூட இருக்கலாம். ஆனால் மாறிவரும் உலகில் எதுவும் நிரந்தரமல்ல. ஒரு மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த கையோடு மாபெரும் தோல்விப் படம் கூட வரலாம்! எதுவும் சாத்தியம்!
நான் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். சிம்புவைச் சுற்றி இருக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். யாரிடம் என்ன பிரச்சனை என்பதை அறிந்து அதற்குத் தீர்வு காண வேண்டும். இனி பிரச்சனைகளை இழுத்துக் கொண்டு போவது அவருடைய எதிர்காலத்திற்கு நல்லதல்ல. அது தனக்குப் பொருளாதார ரீதியில் நட்டம் ஆனாலும் பரவாயில்லை. அதற்கு ஒரு முடிவு காண வேண்டும். இனியும் எவ்வளவோ சம்பாதிக்க முடியும். மறப்போம்! மன்னிப்போம்! அவ்வளவு தான்!
எல்லாக் காலங்களிலும் பிரச்சனைகளோடு தொடர்ந்து வாழ முடியாது. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் யாருமே சிம்பு என்றால் ஓடி ஒளிவார்களே தவிர வாரி அணைக்கப்போவதில்ல! இந்த உண்மையை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
நமக்குத் தெரிந்த சொலவடை அவரும் அறிவார். "காற்றுளள போதே தூற்றிக்கொள்"
நமக்குள்ள வருத்தம் எல்லாம் திறமையில்லாதவன் கூட ஏதோ ஓர் அதிர்ஷ்டத்தில் சினிமாவில் ஜெயித்து விடுகிறான். திறமை இருந்தும் இப்படி நீதிமன்றம், வழக்கு, சவடால்தனம் என்று போய்க் கொண்டிருப்பதை நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை!
மழை விட்டும் தூவானம் விடவில்லை!
No comments:
Post a Comment