Sunday 19 December 2021

மகிழ்ச்சியா? சிரிப்பா? கூடாது!

 

             வட கொரிய மக்கள் 10-ம் ஆண்டு நிறைவு நாளில் தலைவர்களின்                                                    சிலைகளுக்கு மரியாதை செலுத்துகிறார்கள்  

சில சமயங்களில் நடக்கும் சில விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் கூட ஆழ்த்தலாம்.      

ஆனால் உலகில் நடக்கும் பல விஷயங்கள் நமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ அதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அந்த நிகழ்வுகள் நமக்கு வேடிக்கை; அவர்களுக்கு அது வாடிக்கையாகக் கூட இருக்கலாம். 

அது அவர்களது பாரம்பரியமாகக் கூட இருக்கலாம். நாம் கேலி செய்தால் அது அவர்களின் மனத்தைப் பாதிக்கும்.

வட கொரிய அரசாங்கம் அப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்கிறது. வட கொரிய அதிபர் கிம் ஜோங் இறந்த 10 ஆண்டு நிறைவு நாளில் இன்றைய அதிபரும், அவரது மகனுமான கிம் ஜோங் உன்,  கொரிய மக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்! 

ஆமாம்,  எச்சரிக்கை என்பதாகத்தான் செய்திகள் கூறுகின்றன! என்ன தான் எச்சரிக்கை? இறந்த தனது தந்தையின் பத்தாம் ஆண்டு நினைவு நாளில் கொரிய மக்கள் பதினோரு நாள்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தக் கூடாது. அதே சமயத்தில் மது அருந்தவும் கூடாது. நாடு சோகத்தில் ஆழ்ந்திருக்கும் இந்த வேளையில் - அதாவது பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் -  கொரிய மக்கள்  பதினொரு நாள்களும் அந்த சோகத்தில் பங்கு பெற வேண்டும் என்பதாகக் கட்டளைப் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது!

மக்கள் தங்களது பிறந்த நாள்களைக் கொண்டாடக் கூடாது. அது குற்றம். யாரேனும் இறந்து போனால் சீக்கிரமாக காரியங்களை முடித்து அடக்கம் செய்ய வேண்டும். சத்தம் போட்டு அழுவது குற்றம்.  காவல் துறையினருக்கு இது மிகவும் சவாலான காலம்.  ஏற்கனவே அப்பன், மகன் சர்வாதிகார ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியில் இல்லை. இப்போது சட்டம் போட்டு சிரிக்கக் கூடாது, மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது என்றால் அதனையும் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்!

சரி, ஏற்றுக்கொள்ளா விட்டால் அல்லது தெரியாத்தனமாக சிரித்துவிட்டால் என்ன ஆகும்? வீட்டிலுள்ள குழந்தைகளால் இந்த சட்டத்தை எப்படி பின்பற்ற முடியும்? என்ன தான் "உம்மனா மூஞ்சி" ஊராக இருந்தாலும் குழந்தைகள் சிரிப்பு, ஆட்டம் பாட்டம் என்பது தான் அவர்களது உலகம். இவர்களை எப்படி கட்டுப்படுத்த முடியும்?

ஆனால் அது தான் சட்டம். சர்வாதிகார நாடுகள் என்றால் சட்டம் என்றால் சட்டம் தான். சட்டத்தை மீறினால் காவல் துறை கைது செய்யும். அப்புறம் அவர்கள் என்ன ஆவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. காரணம் ஏற்கனவே சிரித்ததற்காக கைது செய்யப்பட்டவர்களின் நிலை என்ன என்பது பரம ரகசியம்.

நமக்கு என்னவோ துக்ளக் ஆட்சி என்று நினைத்தாலும்  நடப்பது என்னவோ கேலிக்கூத்தான ஆட்சி என்று தான் சொல்ல வேண்டி வருகிறது!                                           

No comments:

Post a Comment