இந்த முறை வெள்ளம் நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறியும் போது மனதுக்குக் கஷ்டம் தான். எப்போது இந்த மழை ஓயும் என்று பிரர்த்தனை செய்வதை விட வேறு வழி தெரியவில்லை. ஆமாம், கடைசியில் இறைவனிடம் தானே தஞ்சம் அடைய வேண்டியுள்ளது!
ஒவ்வொரு ஆண்டும் எங்கு மழை பெய்யும், எங்கு வெள்ளம் ஏறும் என்பதெல்லாம் நமக்கு அத்துப்படி. ஆனால் இந்த ஆண்டு அதெல்லாம் பொய்த்துப் போனது! ஆத்துலேயும் தண்ணீர், வீட்டுப்படியிலேயும் தண்ணீர், மாடிவீட்டிலும் தண்ணீர், மண் குடிசையிலும் தண்ணீர். தண்ணீர், தண்ணீர்! ஆனால் குடிக்கத் தண்ணீர் இல்லை!
இது போன்ற பெருமழை 1971 - ம் ஆண்டு வந்ததாகக் கூறப்படுகின்றது. அதற்குப் பின்னர் 50 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் அந்த பெருமழை. ஆமாம், 1971-ம் ஆண்டு பெய்த மழை இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. சிரம்பான் நகரில் இரண்டு முக்கிய பாலங்கள் இடிந்து விழுந்த ஞாபகம் இருக்கிறது! அத்தோடு சிறிய சிறிய மரப்பாலங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன! அது போன்ற சேதத்தை அதற்கு முன்னர் நான் பார்த்ததில்லை. இந்த முறை வழக்கம் போல லிங்கியில் தான் பலத்த சேதம்.
இந்த ஆண்டு பெய்கின்ற தொடர் மழையில் பகாங் மாநிலம் பெரும் சேதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. பொருட் சேதங்கள், மனித சேதங்கள் என்று தொடர்கிறது. வழக்கமாக ஒரு மாதம் பெய்கின்ற மழை ஒரே நாளில் பெய்ததாக தொலைக்காட்சி செய்தி ஒன்று கூறுகிறது. அது தான் இந்த அளவு சேதத்திற்குக் காரணம்.
சாலைகளும் விதிவிலக்கல்ல. பல சாலைகள் சேதமடைந்திருக்கின்றன. வெள்ளப் பேரிடர் காலங்களில் இதெல்லாம் நடப்பவை தான். கூட்டரசு சாலைகளில் சுமார் 98 சாலைகள் பாதிப்பு அடைந்திருக்கின்றன. அதே சமயம் மாநிலங்கள் அளவில் சுமார் 126 சாலைகள் பாதிப்பு அடைந்திருப்பதாக "வணக்கம் மலேசியா" இணையத்தளம் கூறுகிறது. அது மட்டும் அல்ல இன்று காலையில் (22/12/21) ஷா அலாம் பகுதியில் பெய்த அடைமழையில் சில நெடுஞ்சாலைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வளவு பாதிப்புக்கிடையே விலைவாசிகள் ஏறாமல் இருக்க முடியுமா? இனி அதற்கும் தலையில் அடித்துக் கொள்ள வேண்டியது தான்.
நல்லதே நடக்க பிரார்த்திப்போம்!
No comments:
Post a Comment