Wednesday 29 December 2021

இது எதிர்பார்த்தது தான்!

                              கோவிலை சுத்தப்படுத்தும் இஸ்லாமிய இளைஞர்கள்

இஸ்லாமிய இளைஞர்கள் கோவிலை சுத்தப்படுத்துவதும், இந்து, கிறிஸ்துவ இளைஞர்கள் பள்ளிவாசலை சுத்தப்படுத்துவதும் சாதாரணமாக நடைபெறும் காரியங்கள் அல்ல. அப்படி செய்யவும் மாட்டார்கள். இது பற்றி நாம் அறிந்தது தான்.

அவசர ஆபத்து நேரங்களில் யாரும் "நீ என்ன மதம்!" என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதில்லை. கஷ்டத்தில் இருக்கும் போது உதவுவது என்பது மனிதாபிமானம் மட்டும் தான். 

அப்படித்தான் நமது சமயங்கள் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன. ஆபத்துக்கு உதவாதவன் இருந்தால் என்ன, இல்லாமல் போனால் என்ன என்பது தான் நமக்கு  வேதம் சொல்லும் பாடம்.

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு எல்லாவற்றையும் புரட்டிப்போட்டு விட்டது!  யாரும் எதிர்பாராத ஒரு சில விஷயங்கள் நடந்துவிட்டன!

பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளம் புகுந்து நாசம் பண்ணிவிட்டது! நமது இளைஞர்கள் அதனைச் சுத்தப் படுத்திக் கொடுத்தார்கள். அப்படித்தான் நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். அது இயற்கையான, இரக்கமுள்ள நமது குணம். அதற்கு இஸ்லாமிய அறிஞர்களிடமிருந்து ஏதேனும் எதிர்ப்பு வரும் என்று நான் எதிர்பார்த்தேன்! ஆனால் ஒன்றும் வரவில்லை! வேறு பக்கமிருந்து அது வந்தது!

பள்ளிவாசலை இந்திய இளைஞர்கள் சுத்தப் படுத்தியதைப் பார்த்து ஓர் இந்து கோவிலுள் வெள்ளம் புகுந்ததை அறிந்து இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் அந்த இந்துக் கோவிலைச் சுத்தம் பண்ணிக் கொடுத்தனர். ஒன்றுமில்லை! இதெல்லாம் மனிதாபிமான உதவிதான். பெரிதாக ஒன்றுமில்லை!

இப்போது வருகின்ற எதிர்ப்பு என்பது  ஓர் இந்து கோவிலை இஸ்லாமிய இளைஞர்கள் சுத்தம் பண்ணியது தவறு என்பதாக அறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்! பள்ளிவாசலை சுத்தம் பண்ணியது தவறு என்று அவர்கள் சொல்லவில்லை. இந்து கோவிலை சுத்தம் பண்ணியது தவறு என்று தான் சொல்லுகின்றனர்.

இந்து கோவிலை சுத்தம் பண்ணியது தவறு என்றால் பள்ளிவாசலை சுத்தம் பண்ணியதும் தவறு தானே! இது என்ன ஒரு பக்க நியாயம்!

ஒரு விஷயம் நமக்கு இப்போது புரிகிறது. வெள்ளம் ஆரம்பித்த போது உடனடி உதவி அல்லது நிவாரணம் எதுவும் அரசாங்கப் பக்கமிருந்து வரவில்லை என்பதாக குற்றச்சாட்டு உண்டு. பொது மக்களே ஒருவருக்கொருவர் தங்களுக்குள் உதவிக் கொண்டார்கள். இந்த இடைக்காலத்தில் அரசாங்கம் இந்த அறிஞர்களிடமிருந்து ஆலோசனைக் கேட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது! அதனால் தான் அவர்களால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை! ஒருவர் முடியும்! என்பார். இன்னொருவர் முடியாது! என்பார்.

ஆனால் ஒன்று: நாம் இதனை எதிர்பார்த்தது தான்! பொதுவாகவே அறிஞர்கள் இழுத்தடிப்பார்களே தவிர ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள்! களத்தில் இருப்பவர்களுக்குத் தானே வலி தெரியும்! கருத்து சொல்லுபவர்களுக்கு ஒரு வலியும் இல்லை!

No comments:

Post a Comment