Thursday 23 December 2021

அரசாங்கம் உதவவில்லை!


                                       வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது!  (ஷா அலாம்)

வெள்ளத்தினால், தொடர் மழையால், ஏற்பட்ட சேதம் கொஞ்ச நஞ்சமல்ல!

அரசாங்கத்தைப்பற்றி நிறைய புகார்கள்! அரசாங்கம் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்பதாகவே அநேகர் கூறுகின்றனர். பொது மக்கள் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொண்டு வெள்ளத்திலிருந்து வெளியேறுகின்றனர்.

நாட்டில் நிரந்தர அரசாங்கம் இல்லையென்றால் என்ன நடக்கும் என்பதை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். இருக்கின்ற தற்காலிக அரசாங்கமும் யாருக்கும் மந்திரி பதவி, யாருக்குப் பதவி உயர்வு கொடுத்தால் நம்மை ஆதரிப்பார்கள் என்பதையே அல்லும் பகலும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்!

அமைச்சர்களுக்குத் தங்களைச் சுற்றி  என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை! அது பற்றி அவர்கள் கவலைப்படவும் இல்லை! காரணம் அவர்கள்  வீட்டில் வெள்ளம் புகவில்லை! குடிப்பதற்கு நல்ல நீர் உண்டு! குழந்தைகளுக்குப்  பால் ஆற்ற பாத்ரூம் நீரைப் பயன்படுத்தவில்லை! இப்படி எல்லாமே வசதியாக அமைந்துவிட்டதால் வெள்ளத்தை பற்றி அவர்கள் கவலைப்பட ஒன்றுமில்லை!

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் கூட "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய் உதவுங்கள்! அரசியல் பேசியது போதும்!" என்று அமைச்சர்களுக்குத் தனது கோபத்தை  வெளிப்படுத்தியிருக்கிறார்.

மக்களிடமிருந்து வருகின்ற புகார்கள் உண்மையில் மிகவும் கவலையளிப்பதாய் உள்ளன. அவர்களைக் கவனிக்க உதவி செய்ய யாருமே இல்லை என்பது தான் அவர்களின் கோபம்.

"அரசாங்கம் எங்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! எங்களைப்  படகில் வந்த இந்தோனேசியர்கள் தான் காப்பாற்றினார்கள்!"

" குழந்தைக்குப் பால் ஆற்ற தண்ணீர் இல்லை! பாத்ரூமில் உள்ள கக்கூஸ் நீரைத் தான் பயன்படுத்தினோம்!"    

"வீட்டில் தண்ணீர் ஏறிவிட்டது!  முட்டிக்கால் வரை நீர்! குடிக்கத் தண்ணீர் இல்லை! இரண்டு நாள் காத்திருந்தோம்! அரசாங்கம் உதவவில்லை! மக்கள் தான் காப்பாற்றினார்கள்!"

தீடீர் வெள்ளம் ஏற்பட்டதினால் யாரும் தயாராக இல்லை. உண்மை. மக்களும் சரி அரசாங்கமும் சரி யாரும் தயாராக இல்லை. உண்மை. இப்படி ஒரு பேரிடர் வரும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. உண்மை.

அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்பது உண்மை தான் வெள்ளம் வந்த பிறகு கூட வாயை  மூடிக்கொண்டு சும்மா இருந்தால் அது தான் மக்களுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது! வெள்ளம் வந்த பிறகாவது  அரசாங்க அதிகாரிகளுடன் பேசி முடிவெடுத்து அதற்கான வேலைகள் செய்ய ஆரம்பித்திருந்தால் சேதங்களைக் குறைத்திருக்கலாம்.

எதுவும் செய்யாமல் ஒதுங்கி இருந்ததால் தான் இன்று மக்கள் அரசாங்கத்தைக் குறை கூறுகின்றனர்.

No comments:

Post a Comment