ஒரு பாடல் ஞாபகத்திற்கு வருகிறது: "யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா! போங்க! என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க!"
தலைவன், தலைமைத்துவம், சரியான தலைமைத்துவம், நேர்மையான தலைமைத்துவம் பற்றியெல்லாம் பேசும் போது 'பொசு பொசு' என்று பற்றிக் கொண்டு வருகிறது!
ஆமாம்! இல்லாத ஒன்றைப்பற்றி பேசுவதால் யாருக்கு என்ன பயன்! எந்த காலத்தில் நமக்கு நல்லதொரு தலைமைத்துவம் அமைந்தது? அமையவில்லை என்று முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியாது. இல்லையென்றால் சொன்னால் அப்புறம் எப்படி கூட்டுறவு சங்கம் அமைந்தது என்கிற கேள்விகள் எழும்.
ஆனால் அதன் பின்னர் தொடர்ச்சியாக தொடை நடுங்கிகளின் தலைமைத்துவம்! நமது சமூகத்தைச் சேர்ந்தவனை 'அடிப்பேன், உதைப்பேன்!' என்பான் அங்கே உள்ளே போனால் ஆயிரம் கும்பிடு போடுவான்!
அதனால் நண்பர்களே! ஒன்றைக் கேளுங்கள். யாரும் நமக்கு உதவப்போவதில்லை. நம் கையே நமக்கு உதவி என்று நினைப்பது தான் உத்தமம்! இறைவன் பத்து விரல்களை நமக்கு எதற்குக் கொடுத்திருக்கிறார்? அந்த பத்து விரல்கள் தான் நமக்குச் சொத்து. பத்து விரல்களை வைத்துக் கொண்டு நாம் ஏன் வாத்துகளின் பின்னால், சோத்துமாடுகளுக்குப் பின்னால், சொறி சிரங்களுக்குப் பின்னால் அலைய வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள்.
யாரும் நமக்கு உதவப் போவதில்லை என்கிற முடிவுக்கு வந்து விட்டோம். செடிக் என்றாலும் திருடுகிறான்! மித்ரா என்றாலும் திருடுகிறான்! திருட்டுக் கூட்டத்தை நம்பியா நாம் வாழ்க்கை நடத்த வேண்டும்? நமது வேலையை நாம் பார்ப்போம். நமது வேலையைச் சரியாகப் பார்த்தால் முன்னேற்றம் தானாக அமைந்துவிடும்.
திருட்டுக் கூட்டத்தோடு நாம் கை கோர்த்தால் நாட்டுப்பற்று என்பது எல்லாம் நடிப்பு என்பதாகிவிடும். இந்த திருடர்கள் வரும் போதெல்லாம் இவர்களுக்குப் பூமாரி பொழிவது தான் நமது பெண் பிள்ளைகளின் வேலையா? அந்த அளவுக்கு அவர்கள் உயர்ந்தவர்களா! கொஞ்சம் யோசியுங்கள்.
இந்தத் திருட்டுக் கூட்டத்தை நம்பி நாம் பிறக்கவில்லை. திருடர்கள் என்கிற பெயர் நமக்கு வேண்டாம். இரு கைகளும் நம்முடையது. பத்து விரல்களும் நம்முடையது. அதுவே போதும் இந்த உலகை ஆள்வதற்கு!
யாரையும் நம்பி நாம் பிறக்கவில்லை! பத்து விரல்களே போதும் நாம் கெத்தாக வாழ்வதற்கு! சாதிப்போம்! சாதனைகள் புரிவோம்!
No comments:
Post a Comment