Sunday 12 December 2021

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கு உதவி அதிகரிப்பு!

       


                                    ம.இ.கா. ஆண்டு கூட்டங்களுக்குப் பிரதமர்கள் வந்தால் 'நல்ல',  'தரமான'  அறிவிப்புக்களை  அறிவிப்பது வழக்கமான ஒன்று தான்!

பிரதமர் அறிவித்து விட்டாலே அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்துவிட்டதாக நடிப்பது எப்போதுமே ம.இ.கா. விற்கு வழக்கமான ஒன்று!

எது நடக்கும் எது நடக்காது என்பது நமக்குத் தெரியாவிட்டாலும் ஒன்று நிச்சயம் தெரியும். ம.இ.கா. வின் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு வருடா வருடம் ஒதுக்கப்பட்டு வரும்  20 மில்லியன் ரிங்கிட் இந்த ஆண்டு முதல் 25 மில்லியன் ரிங்கிட்டாக  உயர்த்தப்படும்  என்பதாக  பிரதமர் அறிவித்திருக்கிறார். 

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் உண்மையில் யாருக்குச் சொந்தம்  என்பதில்  நம்மிடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அது ம.இ.கா.வுக்குத் தான் சொந்தம்  என்று நாமும் நம்பிவிட்டுப் போவோம்! அங்கு B40 மாணவர்களின்  கல்வி உயர்வுக்காக இந்த ஒதுக்கிடுகள் உதவும் என்று பிரதமர் நம்புகிறார்!  நாமும் நம்புவோம்! அரசாங்கம் அவர்கள் கடமையை அவர்கள் செய்கிறார்கள். B40 மாணவர்கள் எத்தனை பேர் அங்குக்  கல்வி பயிலுகிறார்கள் என்று ம.இ.கா.வுக்கே  தெரியுமா  என்பது ஐயத்திற்குறிய விஷயம்! அதற்கும் ஏதாவது ஒரு 'ஏமாளி' கணக்கு வைத்திருப்பார்கள்!

மேலும் இந்திய சமூகத்தின் நலனுக்காக அல்லது மேம்பாட்டுக்காக குறுகிய, நீண்டகால திட்டங்களையும் அடையாளம் கண்டு அமல்படுத்தப்படும் என்பதாகப் பிரதமர் கூறியிருக்கிறார்! அதுவும் இவை அனைத்தும் ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் வரும் என்பதாகவும் அறிவித்திருக்கிறார்! 

அது தான் நம்மை கவலைக்குள்ளாக்குகிறது! ஏற்கனவே ஒற்றுமைத்துறை அமைச்சர் அவரிடம் ஒப்படைத்த மித்ரா நிதி பற்றிப் பேசினால் மௌனம் சாதிக்கிறார்! சிரிக்கிறார்! சிரித்து மழுப்புகிறார்!

இவரிடமே மீண்டுமா என்று நாம் கேட்டாலும் ம.இ.கா. அவருடன் கைகோக்க தயாராக இருக்கிறது!  அதனால் அவர்களுக்கு இலாபம். இந்திய தலைவர்களுக்கு இலாபம் என்பதும், இந்திய சமூகத்திற்கு இலாபம் என்பதும் ஒன்று அல்லவே!

இனி இந்தியர் நலன் என்னும் போது மற்ற எதிர்கட்சிகளும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்க வேண்டும். ஒவ்வொருமுறையும் இந்திய சமூகத்தை ஏமாற்றும் வேலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது! அதற்கு ஒரு முற்றுப்புள்ளி தேவை! இதுவே சரியான நேரம்!

No comments:

Post a Comment