Thursday 9 December 2021

இது சரியான அணுகுமுறையா?

அடுத்த ஆண்டு முதல் உணவகங்களில் சாப்பிடுபவர்கள் விலை அதிகரிப்பை எதிர்நோக்க வேண்டி வரும்!

ஆமாம், எல்லா விலைகளும் ஏறிவிட்ட பிறகு உணவகங்கள் மட்டும் என்ன தான் செய்ய முடியும்? விலையேற்றம் என்பது மறுக்க முடியாத அளவுக்கு அதுவும் குறிப்பாக உணவு பொருட்களின் விலைகள் எக்கச்சக்கமாக ஏறிவிட்ட பிறகு யார் என்ன செய்ய முடியும்?

உணவக அமைப்புக்கள் அடுத்த ஆண்டு  விலைகள் ஏறும் என்று சொன்னாலும் அதுவரை உணவகங்கள் விலைகளை ஏற்றாது என்று சொல்வதற்கில்லை. அவர்கள் எப்போதோ விலைகளை ஏற்றிவிட்டார்கள்! பல உணவகங்கள் விலைகளை ஏற்றிவிட்டன!

இதிலே ஒரு சோகம் என்னவென்றால் விலைகளை ஏற்றிவிட்டார்களே தவிர அதே வேளையில் உணவுகளின் தரத்தை மிகவும் குறைத்துவிட்டார்கள்! நான் வழக்கமாக பரோட்டா (ரொட்டி செனாய்) வாங்கும் இடத்தில் சமீபமாக வாங்கிய போது என்னால் சாப்பிடவே முடியவில்லை!  எனக்கே ஒரு சந்தேகம் வந்துவிட்டது! இவ்வளவு மோசமான ரொட்டி செனாயை நான் சாப்பிட்டதே இல்லை! என்ன மாவு பயன்படுத்துகிறார்கள் என்றும் புரியவில்லை! இனி அந்தக் கடையில் எந்த உணவையும் வாங்குவதில்லை என்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்!

ஒரு விஷயத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விலை ஏறுவதை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அதனால் தான் விலைகளை ஏற்றுகிறார்கள். விலைகளை ஏற்றியபின் ஏன் அதே தரத்தைப் பின்பற்றுவதில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விலையை ஏற்றியபின் ஏன் தரமான உணவுகளைத் தயாரிக்க முடிவதில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது!

உணவக சங்கங்கள்  அடுத்த ஆண்டு முதல், அடுத்த ஆண்டு முதல் என்று சொன்னாலும் இப்போதே உணவகங்கள் விலைகளை ஏற்றிவிட்டன என்பது அனைவருக்கும் தெரியும்! இப்போது நாங்கள் உணவகங்களில் சாப்பிடும் போது அதன் வித்தியாசம் எங்களுக்கு என்ன தெரியாதா!

உணவக நண்பர்களுக்கு நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். விலையேற்றம் என்பது தவிர்க்க முடியாதது தான்.  ஆனால் அதற்காக தரமான உணவைத் தர முடியாது என்று சொல்ல முடியாது! விலையையும் கூட்டிவிட்டு, தரமான உணவுகளைக் கொடுக்க முடியாது என்றால் எங்கே கோளாறு? 

வேலை செய்ய ஆளில்லை என்பதற்காக வேலை தெரியாதவர்களை எல்லாம்  வேலைக்கு வைத்துக் கொண்டு சும்மா காலம் தள்ளுவது நீண்ட நாள்கள் நீடிக்காது!

விலையைக் கூட்டுங்கள்! ஆனால் தரமான உணவுகளைத் தாருங்கள்! இது தான் சிறந்த அணுகுமுறை!

No comments:

Post a Comment