Tuesday 14 December 2021

சிறப்பு அமைச்சரவைக் குழு!

 

                                                                Prime  Minister

இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரைவைக் குழு அமைக்கபடும் என்று பிரதமர்  இஸ்மாயில் சப்ரி அறிவித்திருப்பதானது ஏதோ சடங்குக்காக அறிவிக்கப்பட்ட ஒரு வார்த்தை என்று நாம் நினைக்க வேண்டியுள்ளது!

இப்படிச் சொல்லுவதால் எங்களை நீங்கள் கோபித்துக் கொள்ள முடியாது. காரணம் ம.இ.கா. மாநாடுகளில் பிரதமர்கள் இப்படி எல்லாம் சொல்லிச் சொல்லி தான் இந்தியர்களை ஏமாற்றி வந்திருக்கிறார்கள்! பிரதமர்கள் ஏமாற்றினார்களா அல்லது ம.இ.கா.வினர் ஏமாற்றினார்களா என்பதும் தெரியவில்லை!

இப்படிச் சொல்லுவதிலும் ஒரு நியாயம் உண்டு. இறுதி முடிவுகள் என்ன வென்று பார்த்தால் ம.இ.கா. தலைவர்கள் தான் ஏற்றம் கண்டிருக்கின்றனர்! இந்திய சமுதாயத்தினர் கீழ் நோக்கி  தர தர வென்று இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்! எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை!

மித்ரா  மீண்டும் பிரதமர் துறைக்கே மாற்றப்பட வேண்டும் என்பதில் நமக்கு ஏதும் கருத்து வேறுபாடில்லை.  ஆனால் அதன் பொறுப்புக்களை ம.இ.கா.வின் கையில் ஒப்படைக்கக் கூடாது என்பதே நமது விருப்பம். இத்தனை ஆண்டுகள் ம.இ.கா. என்ன செய்தது என்பது இந்த மாநாட்டில் பிரதமர் கண்முன்பாகவே ம.இ.கா. தலைவர் அறிவித்துவிட்டார்! ஆமாம்! நாற்பது கோடி வெள்ளி திரும்பவும் கரூவூலத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டது என்பதை அவரே சொல்லியிருக்கிறார்!

ம.இ.கா. அப்படி செய்வதற்கான காரணம் என்ன? கீழ்மட்ட இந்தியர்கள் அனைவரும் பணத்தோடும்,  பவிசோடும் தான் வாழ்கிறார்கள் அதனால் எந்தப்  பண உதவியும் அவர்களுக்குத் தேவையில்லை என்பது  தானே பொருள்! கருவூலத்திற்குத் திருப்பி அனுப்பிவிட்டோம் என்பதற்கு அது தானே அர்த்தம்!

இந்தியர்களில்  ஏழைகளே இல்லை என்று சொல்லுகின்ற ஒரு கட்சிக்கு மீண்டும் "இந்தியர்களை உயர்த்த!"  மித்ராவை அவர்களின் பார்வையின் கீழ் கொண்டுவருவதை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். ம.இ.கா.நிச்சயமாக தோற்றுவிட்டது! தோற்றுப் போனவர்கள் கைகளில் மித்ரா வேண்டாம்! இந்த முறை எதிர்கட்சிகளின் பங்கு அதிகமாகவே இருக்க வேண்டும். எதிர்கட்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதுமானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் பங்கை அதிகரிக்க வேண்டும்.

ம.இ.கா. எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து, ஒருங்கிணைந்து செயல்படுவோம்,  என்பதெல்லாம் சரியான அணுகுமுறை அல்ல! நிதியை திரும்பவும் கரூவூலத்திற்கு அனுப்பிவிட்டோம் என்று சொல்லுபவர்கள் தோல்வியாளர்கள் தானே! தோல்வியாளர்கள் அழைப்பு விடுப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

பிரதமர் இந்த மித்ரா அமைப்புக்கு நல்லதொரு வழிகாட்ட வேண்டும்! அதனைத் தான் நாங்கள் விரும்புகிறோம்!

No comments:

Post a Comment