Tuesday 28 December 2021

எங்கே போய் ஒளிந்தீர்கள்?


 நாடே வெள்ளப் பேரிடரினால் அவதிக்குள்ளாகியிருக்கும் நிலையில் பாஸ் கட்சி தலைவர்கள் என்ன ஆனார்கள் என்று பினாங்கு மாநில துணை முதல்வர், பேராசிரியர் இராமசாமி  கேள்வி எழுப்பியிருப்பது சரியானது தான்.

அதிலும் அமைச்சராக பதவி வகிக்கும் சுற்றுச் சூழல் அமைச்சர் துவான் இப்ராகிம் காணாமல் போனது அரசாங்கத்திற்குத்தான் அவப்பெயரை ஏற்படுத்தும். வெள்ளம் ஏன் வந்தது என்பது பற்றி விவாதிக்க இது நேரம் அல்ல. அது ஏன் வந்தது எப்படி வந்தது என்பதைப் பின்னர் அது பற்றி பேசுவோம்.

பாதிக்கப்பட்டவர்கள்  யாருடைய உபதேசத்தையும் கேட்கும் நிலையில் இல்லை. அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும்  என்பது பற்றி மட்டும் பேசுங்கள்.  இப்படி ஒரு நிலைக்கு மக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்பது உண்மை தான். அதற்காக இருக்கின்ற இந்த நிலையை இப்படியே நீடிக்க விட்டுவிட முடியாது. அதற்குத் தான் தீர்வு காண வேண்டும்.

பொதுவாக பாஸ் கட்சியினர் மிக எளிதாக மற்றவர்கள் மீது பழி போடுவதில் வல்லவர்கள். எடுத்ததெற்கெல்லாம் "இதெல்லாம் இறைவன் செயல்" என்று இறைவன் மீது பழி போடுவார்கள். இறைவன் செயல் என்று சொல்லுவதில் ஒரு வசதியுண்டு. அதற்கு மேல் யாரும் பேசக் கூடாது என்பது தான் அதன் பொருள்.  அதற்கு மேல் பேசினால் "நீ இறை நம்பிக்கை இல்லாதவன்!" என்று முத்திரைக் குத்துவார்கள்! இப்படி சொல்லுவதில் இன்னொரு வசதியும் உண்டு. அது இறைவன் செயல் என்று சொல்லிவிட்டால் அதற்கு மேல் ஏதும் மேம்பாட்டு வேலைகள்,  அந்த குறிப்பிட்ட இடங்களில்,  செய்ய வேண்டிய அவசியல் இல்லாமல் போய்விடும்!  

பாஸ் தலைவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கிளந்தான், திரங்கானு, பெர்லிஸ் போன்ற மாநிலங்களில் அவர்கள் செயல்பாடுகளை யாரும் கேள்விகள் கேட்கப் போவதில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் நிலைமை வேறு. நீங்கள் மாறித்தான் ஆக வேண்டும். உங்களுடைய கிளந்தான் பல்லவியை இங்கே அறிமுகப்படுத்த முடியாது. இங்கே நீங்கள் மக்களிடமிருந்து தப்பிக்க முடியாது.  இங்கே உங்களின் ஏனோ தானோ வேலைகள் எடுபடாது!

பிரச்சனைகள் வருகின்ற காலத்தில் நீங்கள் ஓடி ஒளிந்து கொள்வது எந்த ஒரு தீர்வையும் கொண்டு வராது. நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துதான் ஆக வேண்டும். அதற்குத்தான் மக்கள் உங்களை  மக்கள் பிரதிநிதியாக தேர்ந்து எடுத்திருக்கிறார்கள். அது கடவுளின் செயலோ, மக்களின் செயலோ தீர்வு காண்பது உங்கள் வேலை; உங்களின் கடமை.

சாக்குப் போக்குகள் சொல்ல வேண்டாம்! அது எங்களுக்குத் தேவை இல்லை. தீர்வு தான் வழி! ஓடி ஒளிவதல்ல!

No comments:

Post a Comment