Monday 13 December 2021

என்ன? நாற்பது கோடி ரிங்கிட்டா!

 

                                                      MIC President: Tan Sri S.A.Vikneswaran

இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது தான் செடிக், மித்ரா போன்ற அமைப்புகள்.

இந்த அமைப்புகளுக்குப் பெரும்பாலும்  காப்பாளர்களாக இருந்தவர்கள் ம.இ.கா.வினர். நமக்கு அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை. காரணம் இந்திய சமுதாயத்திற்கு நல்லதைச் செய்தவர்கள், செய்கிறவர்கள், செய்யப் போகிறவர்கள் அனைத்தும் ம.இ.கா. வினர் தான் என்று அவர்கள் தானே சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்!

ம.இ.கா. தலைவர்  பொதுப்பேரவையில் மித்ராவைப்பற்றி கூறிய  கருத்து தான் இன்னும் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது! மித்ராவின் நிதி உதவிக்காக  பலர் வரிசைப்பிடித்துக் காத்துக் கிடக்கின்றனர். ஆனால் ம.இ.கா. இப்போது என்ன சொல்கிறது?   பணத்தைப் பெற்றுக்கொள்ள ஆளில்லை அதனால் அந்தப் பணம் மீண்டும் கருவூலத்திற்கே அனுப்பப்பட்டு விட்டது என்கிறார் தலைவர். அதனால் கருவூலத்தில் இப்போது நாற்பது கோடி ரிங்கிட் தேங்கிக் கிடக்கிறது!

இந்த நிதியை இவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புகிறார்களே தவிர அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதி  நமது சமுதாயத்திற்குப் போய்ச் சேர வேண்டும் என்கிற அக்கறை அவர்களுக்கு இல்லை என்று தான் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது! 

சரி, தலைவர்களுக்குத் தான் சமுதாயத்தின் மீது அக்கறை இல்லை கிளைத்தலைவர்களுமா அப்படி இருக்கிறார்கள்? நமக்குப் புரியவில்லை! இந்திய சமுதாயத்தை வைத்து வளர்ந்தவர்கள் இவர்கள். காரணம் ம.இ.கா. வுக்கு வருவதற்கு முன் இவர்கள் நிலை என்ன? எப்படி இருந்தார்கள் என்பதையெல்லாம் மறந்துவிட்டார்கள்! இப்போது பெரிய பதவி, பணம், பவிசு எல்லாமே வந்துவிட்டது! அதை நாம் குறை சொல்லவில்லை. ஆனால் இந்த சமுதாயத்தின் முன்னேற்றம் என்பது தான் தலையாயது. அதை எப்படி மறந்தார்கள் என்பது தான் நமக்குப் புரியவில்லை!

நமக்கு இந்த சமுதாயத்தின் முன்னேற்றம் தான் முக்கியமே தவிர தலைவர்கள் முன்னேற்றம் அல்ல! அம்னோ இன்று பல பூமிபுத்ராக்களை வியாபாரத்தில் வெற்றிபெற வைத்திருக்கிறது. நிதியுதவி மட்டும் இல்லை என்றால் அவர்கள் எல்லாம் வெளி உலகம் தெரியாமல் முடக்கப் பட்டிருப்பார்கள்! அம்னோ அவர்களுக்கு கிடைக்கும் நிதியுதவிகளை அவர்கள் சமூகத்திற்குச்  சரியாகக் கொண்டு போய் சேர்க்கிறார்கள்.

நமக்கு மட்டும் என்ன வந்தது? ஏன் நமது சமுதாயத்திற்கு மட்டும் இப்படி 'ஆளில்லை' பிரச்சனை ஏற்படுகிறது!   நமக்கு அக்கறை இல்லை அதுதானே உண்மை!

கிடைக்கின்ற பணம் சமுதாயத்திற்குப் போய்ச் சேர வேண்டும். ஏதோ ஒன்றிரெண்டு வசதி படைத்தவர்களுக்கு அல்ல! "எங்களுக்கு உதவி செய்ய, உதவியைப் பெற்றுக்கொள்ள, யாருமில்லை!" என்று சொல்வதே கேவலத்திலும் கேவலம்! ஏன்? உங்கள் ம.இ.கா. கிளைகளைச்  சேர்ந்த ஒரு கிளைக்கு ஐந்து பேர் என்று  உதவி செய்திருந்தால் கூட  எத்தனையோ பேருக்கு உதவி செய்திருக்கலாம்!

ஐயோ! நாற்பது கோடி ரிங்கிட் அனாதையாகக் கிடக்கிறது!

No comments:

Post a Comment