Thursday 2 December 2021

சிறுத்தையுடன் போராட்டம்!

 

                                மகனுக்காக சிறுத்தையுடன் போராடிய தாய்!

தாயின் அன்புக்கு ஈடு, இணை இல்லை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதற்குப்  பழங்குடி தாயும்  விதிவிலக்கல்ல.

நாம் சமீபத்தில் தான் "ஜேபிம்" படம் பார்த்தோம். அவர்களின் கஷ்ட நஷ்டங்களைப் பார்த்தோம். காவல்துறை ஒரு பக்கம் என்றால் அவர்களின் உயிரை வாங்க விலங்குகள் ஒரு பக்கம்!

மேலே குறிப்பிட்ட அந்த நிகழ்வு இந்தியா, மத்திய பிரதேசத்தில் உள்ள  சித்தி மாவட்டத்தில்  நடந்தது. 

அந்த இளந்தாய் தனது மூன்று குழந்தைகளுடன் வீட்டுக்கு வெளியே நெருப்பு பற்றவைத்து குளிர் காய்ந்து கொண்டிருந்தார்.  மடியிலே கைக்குழந்தை. அந்த நேரம் பார்த்து தீடீரென உள்ளே புகுந்த சிறுத்தை அவரின்  எட்டு வயது மகனைக்  கவ்விக் கொண்டு ஓடியது!

அதனைப் பார்த்த அந்தத் தாய் தனது பெரிய மகளிடம் கைக்குழந்தையை ஒப்படைத்துவிட்டு  அந்த சிறுத்தையைத் துரத்திக் கொண்டு ஓடினார். கையில் எந்த ஆயுதமும் இல்லை! தனி  ஆளாகத்தான் ஓடினார்!

சுமார் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம். இடையிலே இரண்டு முறை அந்தத் தாயைத் தாக்கியிருக்கிறது அந்த சிறுத்தை. இருந்தாலும் அவர் விட்டபாடில்லை. மூன்றாவது முறை சிறுத்தை தனது பிடியைத் தளர்த்திய போது மீண்டும் அவர் போராடியிருக்கிறார். அந்நேரம் பார்த்து மற்ற பழங்குடி மக்களும் தாரை தம்பட்டையுடன் அங்கு வந்து சேர்ந்துவிட்டனர்!

சத்தம் கேட்டதும் சிறுத்தை பின் வாங்கிவிட்டது. தாயும் மகனும் காப்பாற்றுப்பட்டனர். இப்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மனிதனுக்கு ஆபத்து வரும் போது எதனையும் எதிர்க்கத் தயார் என்கிற ஒரு சூழல் உருவாகிவிடும். அந்த நேரத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதே நமக்குத் தெரிவதில்லை.

அந்தத் தாய்க்கு அவருடைய மகன் தான் கண்முன்னே தெரிகிறான். அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். அது மட்டும் தான் அவருக்குத் தெரிகிறது. தன் மகன் உயிருக்காகப் போராடுகிறான். வேடிக்கைப் பார்க்க நேரமில்லை. கையில் எந்த ஆயுதமும் இல்லை. ஓடும் வழியில் என்ன கிடைக்கிறதோ அது தான் ஆயுதம்!

தாயே! நீ போற்றப்பட வேண்டியவர்! உன் மகனின் உயிரைக் காப்பாற்றியதோடு உன் உயிரையும் காப்பாற்றிக் கொண்டாய்! நீ நீண்ட நாள் வாழ வேண்டும்!

உனக்காக, உன் குடும்பத்துக்காக, உன் ஊர் மக்களுக்காக, உங்களின் நல்வாழ்வுக்காக வேண்டுகிறேன்!

No comments:

Post a Comment