Thursday 30 December 2021

அது சரியானதே!

                                தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரன்

தமிழ்ப்பள்ளிகளின் மீதான நீதிமன்ற தீர்ப்பைக் குறித்து மகிழ்ச்சியடையும் அதே வேளையில், எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரன் கூறுவது போல, தாய்மொழிப்பள்ளிகளை வைத்துக் கொண்டு அரசியல் பேசுவதும், பந்தாட்டம் ஆடுவதும்  நிறுத்தப்பட வேண்டும் என்பதை மலேசியத் தமிழர்கள் அனைவரும் வலியுறுத்துகிறோம்.

இப்படிப் பேசுவதை நிறுத்தப்பட வேண்டும். கண்டிக்கப்பட வேண்டும். அரசியல் சட்டத்துக்கு முரணானது என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் தலைவர்கள் ஆக வேண்டும் என்று நினைத்தால் அதற்கு எத்தனையோ களங்கள் உள்ளன. அதனைக் கையிலெடுத்து  தங்கள் ஆட்டத்தை ஆட வேண்டும்.

எந்த ஒரு கஷ்டத்தையும் படாமல் மிக எளிதாக,  தாய்மொழிப்பள்ளிகள் பிரச்சனையை கையில் வைத்துக் கொண்டு, பெரிய சாம்பியன்  போல வெளியே காட்டிக் கொள்வதில் யாருக்கும் இலாபமில்லை.

தாய்மொழிப்பள்ளிகள் என்பதே ஒரு பிரச்சனை அல்ல.கல்வி அளவில் கூட எடுத்துக் கொண்டாலும் மிகத் தரமான கல்வியை அவைகள் தருகின்றன. இன்று மலாய் மாணவர்கள் மிகப் பெரிய அளவில் சீனப்பள்ளிகளில் படிக்கின்றனர். அங்கு கல்வி மட்டுமே பிரதானம். ஆனால் தேசியப் பள்ளிகளில் கல்வியைத் தவிர்த்து மற்ற அனைத்துமே பிரதானம்! அதனாலேயே மலாய் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேற்று மொழிப்பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.

தேசியப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் டீயூஷன் இல்லாமல் அவர்களால் படிக்க முடியாது. படித்தே ஆக வேண்டும் என்னும் நிலைமையில் தான் அங்குக் கல்வி கற்கின்றனர். தாய்மொழிப் பள்ளிகளில் ஆசிரியர்களின் தரம் மிக உயர்ந்தது. அதனால் கல்வியின் தரம் பேற்றி யாரும் கேள்வி எழுப்புவதில்லை!

அதனால் தலைவர் ராஜேந்திரன் சொல்லுவது போல இந்தப் பிரச்சனை இதோடு முடியப்போவதில்லை. இந்த மலாய் அமைப்புகள் தொடர்ந்தாற் போல குரல் எழுப்பிக் கொண்டே இருப்பார்கள். இன்னும் அதிகமான இயக்கங்களைச் சேர்த்துக் கொண்டு பிரச்சனைகளை எழுப்பிக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் மக்களிடையே வெறுப்புணர்வை வளர்த்துக் கொண்டு இருப்பார்கள். மக்களிடையே ஒற்றுமையைச் சிதைப்பார்கள்.

ஆக, தாய்மொழிபபள்ளிகளைப் பற்றி மீண்டும் மீண்டும் குரல் எழுப்பிக் கொண்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் கடமை. இதனை நாம் வளர்த்துக் கொண்டு போவது நாட்டுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.

சில பிரச்சனைகளுக்கு நாம் உடனடி தீர்வு காண வேண்டும். இழுத்துக் கொண்டு போவது ஏற்புடையது அல்ல.

இந்த பிரச்சனையைப் பொது மக்கள் பார்வைக்குக் கொண்டு வந்ததற்காக எழுத்தாளர் சங்கத் தலைவரைப் பாராட்டுகிறேன்!

No comments:

Post a Comment