Monday 20 December 2021

இது தற்காலிகம் தான்!

                                                                        Thaipusam

கெடா மாநிலத்தில் சென்ற தைப்பூச கொண்டாட்டத்திற்கு விடுமுறை வழங்க மறுத்த அசாங்கம் அடுத்து ஆண்டு வருகின்ற தைப்பூசத்திற்கு விடுமுறை வழங்கியிருக்கிறது!

பக்தர்களுக்கு இந்த விடுமுறை மகிழ்ச்சி அளிக்கலாம். காரணம் அன்று  பெரும்பாலானோர் கோவில்களுக்குச் செல்வது வழக்கம்.  மேலும் அது இந்து மக்களின் முக்கியத் திருவிழா.

இப்போது நமக்குச் சொல்லப்பட்டதானது இந்த தைப்பூச விடுமுறை என்பது நிரந்தரம் அல்ல என்பது தான்.  கெடா மாநில ஆட்சிக்குழுவில் எடுத்த முடிவுக்கிணங்க  அடுத்த ஆண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து விடுமுறைக் கிடைக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஆட்சிக்குழு,  விடுமுறை தேவையா அல்லது தேவை இல்லையா,  என்பதை விவாதித்த பின்னர் தான் முடிவு எடுக்கப்படும். 

ஒவ்வொரு ஆண்டும் மாநில ஆட்சிக் குழு தைப்பூச விடுமுறை பற்றி விவாதிப்பதை  ஒரு கடமையாகவே  வைத்திருக்கிறது! இது இந்துக்களின் திருவிழா என்பதால் உடனடியாக எந்த முடிவையும் எடுக்கக் கூடிய  அதிகாரத்தில் மாநில அரசாங்கம் இல்லை! வருந்துகிறோம்.

ஆனாலும் இதற்கு முந்தைய அரசாங்கத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி மாநில அரசாங்கம் விடுமுறை கொடுத்து வந்திருக்கிறது. இப்போது உள்ள குற்றச்சாட்டு எல்லாம் மாநில மந்திரி பெசார் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் இந்த தைப்பூச விடுமுறையை அவர் விரும்பவில்லை என்பதாகக் கூறப்படுகிறது. அவர் வந்த பின்னர் தைப்பூச  விடுமுறையை ரத்து செய்தார். இரண்டு இந்து கோவில்களை உடைத்தார். இதெல்லாம் பாஸ் கட்சியின் சாதனையாக பாஸ் கட்சியினர் கருதுகின்றனர்! மற்ற சமயத்தினரின் கோவில்களை உடைப்பது அவர்களின் திருவிழா விடுமுறையை ரத்து செய்வது போன்றவை தான் பாஸ் கட்சியின் மாபெரும் வெற்றி விழா!

மற்ற மாநிலங்களில், தைப்பூச விடுமுறை அளிக்கும் மாநிலங்களில், இது போன்ற சிக்கல்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அன்றைய தினம் விடுமுறை, அவ்வளவு தான்! கெடா மாநிலத்தில் மட்டும் அது ஏன் வேறு விதமாக இருக்கிறது என்பது நமக்குப் புரியவில்லை.

எப்போதும் கொஞ்சம் அதிகமாகவே பேசும் மாநில மந்திரி பெசார் ஏன் இதனை மட்டும் விட்டு வைத்திருக்கிறார்?  மற்ற எல்லாவற்றிலும் நியாயம் பேசும் அவர் இந்தப் பிரச்சனையையும் மாநில ஆட்சிக்குழுவில் பேசி ஏன் ஓரு நிரந்தர தீர்வைக் காண முடியாது? அந்த அளவுக்கு அவரால் செய்ய முடியாததா?

மாநில மந்திரி பெசார் இதற்கு ஒரு முடிவைக் காண வேண்டும். அப்படி ஒன்றும் தீர்வே காண முடியாத பிரச்சனை அல்ல இது. ஆட்சிக்குழு முடிவு செய்வதை ஏன் தள்ளிக் கொண்டே போக வேண்டும்? ஒவ்வொரு ஆண்டும் பேசி, கூடி தான் முடிவு எடுக்க வேண்டும் என்றால் அப்புறம் ஏன் மாநிலத்திற்கு ஒரு மந்திரி பெசார்?

தற்காலிகம் வேண்டாம்! நிரந்தரம் தான் வேண்டும்!

No comments:

Post a Comment