Tuesday 28 December 2021

மீண்டும் குசும்பு செய்யும் ஸாகிர் நாயக்!


இஸ்லாமிய சமய போதகர் ஸாகிர் நாயக் மீண்டும் தனது குசும்புத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்!

அவர் சமய போதகராக நடந்து கொள்ளவில்லை. வெவ்வேறு சமயங்களைச் சார்ந்தவர்கள் ஒற்றுமையாக இருக்கக் கூடாது என்பதில் மிகவும் அக்கறை காட்டுகிறார்! அவர் எங்கெங்கு இருந்தாரோ அங்கெல்லாம் சமயப் பிரச்சனைகள் தீவிரமாக இருந்தன.

ஏற்கனவே அவரைப்பற்றி நிறையவே புகார்கள் எழுந்தன. ஆனால் அரசாங்கம் அந்தப் புகார்களைத் தூக்கி குப்பையில் போட்டுவிட்டதாக அறிகிறோம். எப்படியோ அவருக்கு அரசாங்கத்தில் நல்லதொரு பெயர் இருக்கிறது என்பதாகவே தெரிகிறது.

இப்போது அவர் சொல்ல வருவது என்ன? கிறிஸ்துமஸ் பெருநாளில் கிறிஸ்துவர்கள் வீட்டுக்குப் போகக் கூடாது,  அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லக் கூடாது, அவர்களிடமிருந்து பரிசுகள் பெறக் கூடாது - இவைகள் அனைத்தும் இஸ்லாமுக்கு எதிரானவை என்பதாக அவர் கூறுகிறார்! 

நம் நாட்டில் எத்தனையோ இஸ்லாமிய அறிஞர்கள் இருந்திருக்கின்றனர் இன்னும் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் யாரும் இப்படியாகச் சொன்னதில்லை.  இவர் அவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார்!

ஸாகிர் நாயக் இப்போது சொல்ல வருவது என்ன? பிற சமயத்தினர் இஸ்லாமியர்களின் பெருநாட்களில் அவர்களின் இல்லத்திற்குச் செல்லக் கூடாது. இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துகள்  சொல்லக் கூடாது. அவர்களிடமிருந்து பரிசுகள் பெறக் கூடாது.  இதைத்தான் அவர் சொல்ல வருகிறார். 

இந்த போதனை  நமக்குப் புதிது. நாம் கேள்விப்படாத ஒன்று. மலேசியாவில் நாம் அப்படி இருந்ததில்லை.  எப்படியோ நாம் பழைய இஸ்லாமிய முறைப்படி பழகிவிட்டோம். ஸாகிர் சொல்லுவது புதிய போதனையாகக் கூட இருக்கலாம்!

ஸாகிர் சொல்லுவதற்கு மரியாதை உண்டு என்றால் அரசாங்கம் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். இனி மலேசியர்கள் அவரவர் பெருநாட்களை அவரவர் கொண்டாடட்டும். அல்லது இப்படியும் செய்யலாம். இஸ்லாமியர்களின் பெருநாட்களில் மற்ற சமயத்தினர் கலந்து கொள்ள வேண்டாம். அது தான் அவர்களுக்குப் பாதுகாப்பு.  நமக்குள் எந்த பிரச்சனையும் வேண்டாம். யாரையும் நாம் நரகத்திற்கு அனுப்புவது நமது வேலையல்ல. எல்லா சமயத்தினரும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்.

ஸாகிர் நாயக் அடிக்கடி இது போன்ற பிரச்சனைகளை எழுப்பி வருகிறார். அவர் அதனைத் தொடர்ந்து கொண்டே போவது யாருக்கும் நல்லதல்ல. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவருக்கும் அது சந்தோஷத்தைக் கொடுக்கும்.

நமக்குள் ஏன் பிரச்சனை? வேண்டாம் என்றால் வேண்டாம்! அவ்வளவு தான்!

No comments:

Post a Comment