ஒற்றுமைத்துறை அமைச்சர், டத்தோ ஹலிமா, மித்ரா (இந்தியர் உருமாற்றம்) மைப்புப்பற்றிப் பேசும் போதெல்லாம் ஏனோ பதற்றமடைகிறார்! தடுமாறுகிறார்! அது ஏன் என்று நமக்கும் புரியவில்லை!
அவர் அமைச்சில் இருக்கும் மித்ரா நிதி என்பது அவர் மட்டுமே அறிந்தது. அவர் மட்டுமே அதற்கான விளக்கம் கொடுக்கப்பட வேண்டியவர். அதைத்தான் மக்கள் கேட்கின்றனர். அதற்கான பதிலை அவர் சொல்லிவிட்டு போக வேண்டியது தானே! ஓர் அமைச்சருடைய பணி அது. ஆனால் ஏனோ தயங்குகிறார்!
அவருடைய நடவடிக்கைகளைப் பார்க்கின்றப் போது அந்த நிதியில் ஏதோ மோசடிகள் நடந்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தை அவர் ஏற்படுத்துகிறார்!
நாடாளுமன்றத்தில் நம்முடைய எல்லாக் கேள்விகளுக்கும், எல்லா சந்தேகங்களுக்கும் பதிலளிக்கப்படும் என்று ஏற்கனவே அவர் தான் அறிவித்திருந்தார். ஆமாம்! வருகின்ற ஜனவரி மாதம் 15-ம் தேதி அந்நிதிக்கான விளக்கம் அளிக்கப்படும் என்று அவரே உறுதியளித்தார். ஆனால் இப்போது அவரே அதற்கு "நோ!" சொல்லி விட்டார். 15-ம் தேதி நல்ல நாள் இல்லை போல!
இப்போது மித்ரா என்கிற தலைப்பு போய் இந்திய சமூக செயல் திட்டம் என்கிற தலைப்பில் விளக்கம் தரப்படும் என்பதாகக் கூறுகிறார்! நிதி இல்லாமல் நீங்கள் எப்படி ஓர் அடி கூட எடுத்த வைக்க முடியாதோ அதே போல தான் இந்திய சமூகமும்! மித்ராவை ஏன் நீங்களே முடக்குகீறீர்கள் என்பது நமக்குப் புரியவில்லை.
ஒரு பொறுப்பான அமைச்சராக இருக்கும் டத்தோ ஹலிமா இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது அரசாங்கத்தின் மீதான வெறுப்பைத்தான் ஏற்படுத்துகிறது.
இன்று நடந்து கொண்டிருக்கும் அரசாங்கம் ஒரு தற்காலிக அரசாங்கம் தான். ஒரு சிறிய கூட்டணியுடன் சேர்ந்து என்னமோ ஓடிக் கொண்டிருக்கிறது! நமக்கு அதில் காழ்ப்புணர்ச்சி இல்லை. ஆனால் தற்காலிகமான அரசாங்கத்தில் அல்லது நிரந்தரமற்ற அரசாங்கத்தில் கூட தில்லுமுள்ளுகள் நடக்கின்றனவோ என்று சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டியுள்ளது!
அதைவிட இந்த தற்காலிக அரசாங்கத்தில் "கிடைத்ததை சுருட்டுவோம்!" என்கிற மனப்போக்கு அனைவருக்கு வந்து விட்டதோ என்று தான் எண்ண வேண்டியுள்ளது!
ஆக, நேர்மையோ, உண்மையோ எதுவும் தேவையில்லை என்பது தான் இன்றைய அமைச்சர்கள், அதிகாரிகளின் நிலை! அதுவும் இந்தியர்கள் என்றால் எதையும் செய்யலாம் என்கிற மனப்பக்குவத்தில் அமைச்சர்கள் இருக்கிறார்கள்! அதில் ஒருவராக எடுத்துக்காட்டாக டத்தோ ஹலிமாவைச் சொல்லலாம்!
அமைச்சரின் போக்கில் தடுமாற்றம் தெரிகிறது! அதனைச் சரிசெய்து கொள்வது என்றால் நேர்மை தேவை! அது தான் எல்லாக் காலங்களிலும் நன்மை பயக்கும்!
No comments:
Post a Comment