Sunday 5 December 2021

சிம்புவின் மாநாடு!


 சிம்பு தமிழ்த்திரை உலகில் மாபெரும் சக்தியாக வலம் வரவேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன்.

அவரது தந்தை உண்மையில் நல்ல தமிழறிஞர். ஆனால் என்ன செய்வது? சமயங்களில் அவரது பேச்சு கொஞ்சம் அதிகமாகப் போய்விடுவதால் கெட்ட பெயர் வாங்கி விடுகிறார்.

தந்தை கொஞ்சம் அதிகம் பேசி கெட்ட பெயர் வாங்கினால் மகன் சிம்பு அதிகமாகவே துடுக்கத்தனமாகப் பேசி கெட்ட பெயர் வாங்கி விடுகிறார்! அவரது தந்தை அவரை 'மனதில் பட்டதைப் பேசு!' என்று சொல்லிச் சொல்லி கடைசியில் கெட்ட பெயர் வாங்கியது தான் மிச்சம்!

சிம்பு நல்ல நடிகர். நல்ல இயக்குனர் அமைந்தால் அவர் மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுக்க முடியும். அவர் தரமானப் படங்களைத் தர வேண்டும் என்பதைவிட எப்போதும் சில்லறைத்தனமான பிரச்சனைகளில் வாயைவிட்டு பெயரைக் கெடுத்துக் கொள்கிறார்!

ஏதோ வளர்ப்புக் கோளாறு என்கிற வகையில்  தான் நாம் அவரைப் பார்க்க முடிகிறது! அவரது நடவடிக்கைகளும் அப்படித்தான் அமைகின்றன!

சிம்பு ஒரு தமிழன் என்கிற முறையில் அவர் வெற்றி பெற வேண்டும் என நான் விழைகிறேன். பிற மாநில இளைஞர்கள் தமிழ் சினிமாவில் வெற்றிப் பெறும்  போது இவர் மட்டும் ஏன் இப்படித் தள்ளாடுகிறார் என்று நமக்கும் வருத்தம் தான்.

அவருக்குச் சினிமா வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று யாரும் சொல்லவில்லை. அவருக்கென்று நல்லதொரு ரசிகர் வட்டாரமுண்டு. வாய்ப்புக்களும் கிடைக்கின்றன. பொறுப்போடு நடந்து கொண்டால் அவரை அசைக்க ஆளில்லை! யானைக்குத் தனது பலம் தெரியாது என்பார்கள். அதே கதை தான் சிம்புவிடமும்!  அவரது பலம் அவருக்குத் தெரியவில்லை! அதனால் தான் தனது நேரத்தை விரயமாக்குகிறார்! தேவையற்ற சர்ச்சைகளில் ஈடுபடுத்திக் கொள்கிறார்!

அவருடைய அலட்சியம் கடைசியில் எங்குப் போய் முடிந்தது? அவர் அப்பா அம்மா அழுதனர். அவரும் அழுதார். இதனை நாம் விரும்பவில்லை தான். ஆனால் நடந்துவிட்டது!  நாம் சொல்ல விரும்புவதெல்லாம்  இனி இது நடக்க வேண்டாம். கெட்டிகாரத்தனமாக நடந்து கொள்ள வேண்டும். புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். முடிந்தால் நாலு பேருக்கு நல்லதைச்  செய்ய வேண்டும்.

சிம்பு படிக்க வேண்டிய பாடத்தைப் படித்து விட்டார்! இனி மீண்டும் மீண்டும் பழைய பிச்சாண்டி நிலைக்குப் போகாமல் அவர் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். தமிழன் பெயரைக் காப்பாற்ற வேண்டும்.

சிம்புவுக்குத்  தமிழ் இரசிகர்கள்  "மாநாடு" படம் மூலம் பெரும் வரவேற்பைக் கொடுத்திருக்கிறார்கள்! அதனை அவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது தான் நமது வேண்டுகோள்!

வருங்காலம் சிறப்பாகவே இருக்கும்! நம்பலாம்!

No comments:

Post a Comment