Saturday 4 December 2021

பெர்சத்து கட்சியின் தலைவர் யார்?


 நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியும்.  பெர்சாத்துவின் கட்சித் தலைவர் யார்?  முகமது யாசின். ஆம்! முன்னாள் பிரதமர் முகமது யாசினே தான்!

அப்போது அவர் என்ன சொன்னார்? நான் எல்லா மலேசியர்களுக்கும் பிரதமர். இதே பல்லவியைத்தான் எல்லா பிரதமர்களும் பாடுகின்றனர்! ஆனா நேரம் வரும் போது நம்மைக் கவிழ்த்து விடுகின்றனர்!

அப்படி இவருக்கு என்னா நேரம்?  மலாக்கா மாநிலத் தேர்தலில் தனது கட்சியின் நிலை என்ன என்பதை அவர் தெரிந்து கொ ண்டார். இனி அவரது கட்சியின் பெயரை வைத்து  அவரால்  அரசியல் செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொண்டார்!

பொதுவாக அரசியல்வாதிகளுக்கு  தங்களது செல்வாக்குக் குறைகிறது என்று தெரிந்து கொண்டதும் செய்கின்ற முதல் வேலை   தாய் மொழிப்பள்ளிகள் நாட்டின் ஒற்றுமைக்குத்  தடையாக விளங்குகின்றன என்று பேச ஆரம்பிப்பார்கள்!

இப்போது உடனடியாக அவர் பேசவில்லையென்றாலும் அவரது சில்லறைகளை விட்டுப் பேச வைப்பது அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனங்களில் ஒன்று.

கட்டம் கட்டமாக தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்று பேசி வருகிறார்கள்! இப்படிப் பேசுவதால் அவர்கள் மலாய்க்காரரிடையே ஹீரோக்கள் ஆகிவிடலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள்! அது கடைசியில் அவர்களை ஜீரோக்கள் ஆக்கிவிடும் என்று அவர்களுக்குப் புரிவதில்லை.

சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக தாய்மொழிப்பள்ளிகள் இந்நாட்டில் இயங்கி வருகின்றன. மிகவும் செழிப்பாகவே அனைத்தும் இருந்தன. எந்த பிரச்சனையும் எழுந்ததில்லை. மக்களிடையே வேற்றுமைகள் இல்லை. அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமானவர்கள் குறுகிய புத்தியுடைய அரசியல்வாதிகள். மொழி, சமயம் - இவைகளை வைத்துத்தான் இவர்கள் அரசியல் செய்கின்றனர். சரி! இந்த மொழி, சமயம் என்று வரும்போது அதிலாவது யாராவது பாண்டித்தியம் பெற்றவர்களாக இருக்கின்றார்களா என்றால் அதிலும் இல்லை!

இந்த நேரத்தில் நாம் ஒன்றைச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். தாய்மொழிப்பள்ளிகள் மீது யார் கைவைத்தாலும் - வைக்க நினைத்தாலும் - தேர்தல் காலத்தில் அவர்கள் முற்றிலும் ஒதுக்கப்பட வேண்டும். அவர்கள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அவர்களை  நாம் புறந்தள்ள வேண்டும்.

மலேசியாவில் மட்டும் தான் தாய்மொழிப்பள்ளிகளினால் வேற்றுமை வளர்கிறது என்று சொல்லுகிறார்கள் நமது அரசியல்வாதிகள்! சிங்கப்பூரிலும்  தாய்மொழிப்பள்ளிகள் உண்டு. அங்கு எந்த வேற்றுமைகளும் வளரவில்லை! சுவிட்சர்லாந்து நாட்டிலும் நான்கு மொழிகள் ஆட்சி மொழிகளாக உள்ளன. எந்த வேற்றுமையும் உள்ளதாக நமக்குத் தெரியவில்லை! இந்த வரிசையில் இன்னும் பல நாடுகள் உள்ளன.

இனி பிரிவினைப் பேசும் எந்த கட்சிக்கும் நமது ஆதரவைக்  கொடுக்கக் கூடாது. இதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்! அந்த வரிசையில் பெர்சத்து கட்சியும் ஒன்று!

No comments:

Post a Comment