Friday 10 December 2021

மீண்டும் கண்ணாமூச்சி ஆட்டம்!

 

ஒற்றுமைத்துறை அமைச்சர் ஹலிமாவுக்கும் இந்திய சமூகத்திற்கும் ஏதோ ஒரு விதமான "கொடுக்கல் வாங்கலில்" சிக்கல் இருக்குமோ என்று தெரியவில்லை!

எதைப்பற்றி பேசினாலும் அது வம்பில் போய் முடிகிறது! இவரும் சரி இவரின் சகாவான கெடா மந்திரி பெசாரும் சரி இந்திய சமூகத்தை ஏதோ புழு பூச்சிகளைப் பார்ப்பது போல இவர்கள் பார்க்கிறார்கள்!

அப்படி என்ன இவர்கள் என்ன உசத்தியாகப் போய்விட்டார்கள்? ஒன்றும் புரியவில்லை! அமைச்சர் என்கிற ஒரே தகுதியை வைத்து நம்மிடம் ஆட்டம் காட்டுகிறார்கள்!

மித்ரா வைப்பற்றி கேள்வி கேட்டால் எந்த ஒரு பதிலும் தருவதில்லை!முறையான பதில் இல்லை! யாரைத் தற்காக்கிறார்? இப்படியும் ஒரு அமைச்சரா? இது நாள் வரை எந்த ஒரு அமைச்சரும் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போனதில்லை! தகுதியற்றவர்கள் பதவியில் இருந்தால் என்ன ஆகும் என்பதற்கு இவரே சரியான உதாரணம்!

வெகு விரைவில் தைப்பூசம் வருகிறது.  இங்கும் ஓர் இழுபறி நடந்து கொண்டிருக்கிறது. தைப்பூச  ரத ஊர்வலம் வரும் ஆனா வராது! என்கிற பாணியில் சிரித்து மழுப்பிக் கொண்டிருக்கிறார் அமைச்சர்!  அது நமது இனத்தைக் கேவலப்படுத்துவது தான்,  வேறொன்றுமல்ல! இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றால் ஏன் முடிவுசெய்யப்படவில்லை  மற்றவை எல்லாமே சீக்கிரமாக முடிவு செய்யப்படும் போது ஏன் இதில் மட்டும் இந்த தாமதம்? 

கோவிட்-19 பிரச்சனைக் கட்டுப்பாட்டில் உள்ளது என்றாலும் கட்டுப்பாடுகள் தேவை  என்பது நமக்கும் புரிகிறது. ஆனால் இப்போது என்ன கட்டுப்பாட்டை மக்கள் கடைப்பிடிக்கிறார்கள்? கடைப்பிடிப்பதாக ஒன்றும் தெரியவில்லையே! எங்கும் கூட்டம் நிரம்பி வழிகிறது! சுகாதார அமைச்சால் என்ன செய்ய முடிந்தது, ஒன்றுமில்லையே!

ம.இ.கா. வைப் பொறுத்தவரை கடைசி நிமிடம் வரை காக்க வைத்துவிட்டு  அப்புறம் தான் பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவார்கள்! "எங்களால் தான் முடியும்!" என்று சொல்லுவதில் மற்றவர்களைப் பார்த்து ஒரு ஏளனம்! ஏன்? அதை இப்போதே சொன்னால் என்ன? சொன்னால் தானே மக்களும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும்? அதற்காகத்தானே பலரும் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்?

என்ன அரசாங்கம்?  "ஒரு பக்கம் வெண்ணெய் ஒரு பக்கம் சுண்ணாம்பு" என்கிறார்களே அது தானோ இது. ஒரு முக்கியமான நிகழ்வு நடக்கவிருக்கும் வேளையில் "முடியுமா! முடியாதா!" என்று ஊசாலாடிக் கொண்டிருந்தால் - பிரச்சனையை இழுத்துக் கொண்டு போனால் -  நடப்பு அரசாங்கத்து மேல் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?

நாம் சொல்ல வருவதெல்லாம் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் வேண்டாமே என்பது தான்!

No comments:

Post a Comment