Monday 27 December 2021

இதுவும் கடந்து போகும்!

 

இது தான் பாதை! இது தான் பயணம்! நமக்குத் தெரியுமா என்ன?

கொரோனா என்று சொல்லி ஒரு நோய் வந்தது. பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. நமக்கு மட்டுமா வந்தது? உலகத்திற்கே வந்தது!உலகத்தையே புரட்டிப் போட்டது போல நமது நாட்டையும் புரட்டிப் போட்டது!

யாரால் என்ன செய்ய முடிந்தது? ஒன்றும் செய்ய முடியவில்லை! ஏதோ "ஊசி போடுங்கடா சாமி! கொஞ்சமாகவாவது சமாளிக்கலாம்!" என்று சொல்லப் போக அதனையும் செஞ்சோம்!  இப்போது கொஞ்சமாகவாவது சமாளிக்கிறோம்!

ஆனால் இந்த சமாளிப்பெல்லாம் எம்மாத்திரம்? உயிர் வாழ வேண்டுமே! பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் கடையை மூடிவிட்டுப் போய்விட்டார்கள். வேலை இல்லை.  குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். கோரோனாவைத் தடுக்க ஊசி போட்டாயிற்று. அப்படியும் புண்ணியமில்லை. வயிற்றுப்பசிக்கு ஏதேனும் ஊசி இருந்தால் .........! நல்லாத்தான் இருக்கும்! ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அதற்கு முயற்சி செய்ய மாட்டார்கள்! அவர்கள் முதலாளிகளால் தான் வாழ்கிறார்கள்!

ஏதோ கொஞ்சம் தேறி வருகிற நிலையில் மீண்டும் வந்தது ஆபத்து. இந்த முறை வெள்ளம்! வெள்ளம்! வெள்ளம்! நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை. நமக்கே தெரியும் எங்கே வெள்ளம் வருமென்று. ஆனால் எதிர்பாராதது நடந்தது.

"நான் எங்கும் வருவேன்! யார் என்னைத் தடுப்பது?" என்று பீறீட்டுக் கொண்டு வந்தது! யாரால் என்ன செய்ய முடிந்தது? ஒன்றும் செய்ய முடியவில்லை!

எங்கெல்லாம் வராது என்று நினைத்தோமோ அங்கெல்லாம் வெள்ளம் கொடிகட்டிப்பறந்தது! சாலைகள், வீடுகள், கார்கள் அனைத்தும் வெள்ளத்தால் பெருத்த சேதம் அடைந்தன! அரசாங்கம் தனது கடமைகளைச் செய்யவில்லை என்றால் இப்படித்தான் நடக்கும். வெள்ளம் வந்த போது அரசாங்கம் என்ன செய்வது என்று கையைப் பிசைந்ததே தவிர மக்கள் தான் - நமது இளைஞர்கள் தான் - ஓடி ஓடி உதவினார்கள்!

உதவுகின்ற பழக்கம் நமக்கு இயற்கையாகவே வருகிறது. ஆபத்து அவசரத்தில் நமது இளைஞன் தான் முன் நிற்கிறான்! அது அவனது இயல்பு.  மன்னிக்க! பொதுவாகவே இளைஞர்கள் துடிப்போடு தான் செயல்படுகிறார்கள். அதனை இந்த வெள்ள நேரத்தில் நாம் பார்த்தோம்.

ஆனால் இந்த முறை நாம் எதிர்பார்த்ததை விட மிக மோசமான வெள்ளம். நாம் எங்கோ எதிர்பார்த்தோம். அது கடைசியில் நமது வீட்டு வாசற்படியிலேயே நின்று கொண்டு கதவைத் தட்டுகிறது!

என்ன செய்வது? இது தான் வாழ்க்கை! வீடு தண்ணீரில் நிற்கிறது. வங்கியில் வீட்டுக்கடனைக் கட்ட வேண்டுமே! கண்களில் கண்ணீர முட்டுகிறது. கார் தண்ணீரில் மூழ்கிவிட்டது! அதனை சரி செய்ய வேண்டும். வங்கிக்கும் மாதத் தவணை இன்னும் முடியவில்லை! அட! தண்ணீரிலேயே "போயிருந்தால்" கூட ஒரு பிரச்சனையும் இல்லாமல் போயிருக்கும்!

நில்லுங்கள்! தவறான முடிவுக்கு வந்து விடாதீர்கள்! இந்த பிரச்சனை என்பது உங்களுக்கு மட்டும் அல்ல. பலரும் எதிர்நோக்குகிற பிரச்சனை தான். எத்தனையோ பிரச்சனைகளை இதற்கு முன்னர்  நாம் எதிர்நோக்கியிருக்கிறோம். என்ன ஆயிற்று? அதனை எல்லாம் சமாளித்து தானே வந்திருக்கிறோம்!

இப்போது மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது? வந்ததை வரவில் வைப்போம்! செய்வதை செலவில் வைப்போம்!

எல்லா வலிகளும் ஒரு நாள் மறந்து போகும்!  கடந்த காலங்களில் என்ன நடந்ததுவோ அதே போல இந்த காலத்திலும் இதுவும் கடந்து போகும்!

No comments:

Post a Comment