Super Markets and Convenience Stores Looted
இது நமது மலேசியர்களின் கலாச்சாரம் அல்ல! மிகவும் வெட்கக் கேடான விஷயத்தை நாம் செய்திருக்கிறோம்.
வெள்ளப் பாதிப்பு என்பது அனைவருக்கும் உண்டு.ஏழைகளுக்கும் உண்டு பணக்காரர்களுக்கும் உண்டு. ஆனால் பணக்காரர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்பது அவ்வளவாக வெளியே தெரிவதில்லை. வெள்ளப் பாதிப்பு வரும் போதெல்லாம் பணக்காரர்கள் பல வழிகளில் ஏழைகளுக்கு உதவி வருகின்றனர். அதுவும் வெளியே தெரிவதில்லை.
சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட மழையில், தாமான் ஒன்றில், பெருத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பேரங்காடிகள் மைடீன் மார்ட், கே.கே. மார்ட், 7 இலவன், பசார் ராயா ஜிமார்ட் போன்ற அங்காடிகள் எல்லாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பக்கம் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம். இன்னொரு பக்கம் "இதாண்டா சான்ஸ்!" என்று கொள்ளையடிக்கும் ஒரு கும்பல்!
ஆபத்துக் காலங்களில், நொந்து போயிருக்கும் நேரத்தில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இது போன்ற சம்பவங்கள் மனத்தில் காயங்களை ஏற்படுத்தும் என்பது ஐயமில்லை!
ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அங்காடிகள் தாம் நமக்குப் பல வழிகளில் வெள்ள அபாயங்கள் ஏற்படும் போதெல்லாம் நமக்கு உதவியாக இருக்கிறார்கள். உணவுப் பொருள்களைக் கொடுத்து நமது பசியைத் தீர்க்கிறார்கள். ஆனால் அவர்கள் செய்கின்ற் காரியங்கள் எதுவும் வெளியே தெரிவதில்லை.
எல்லாவற்றையும் விட இது போன்ற ஆபத்தான நேரங்களில் கடைகளில் புகுந்து கொள்ளையடிப்பது, சூறையாடுவது என்பது மலேசியர்களிடையே இல்லாத ஒரு பழக்கம் என்பது தான் கடந்த கால நமது வரலாறு. ஆனால் இப்படி ஒரு பழக்கம் எங்கிருந்து முளைத்து வந்தது என்பது தெரியவில்லை! எதற்கெடுத்தாலும் வெளிநாட்டவரை குற்றம் சொல்லி நாம் பழகிவிட்டோம். இப்போதும் கூட சொல்லலாம். ஆனால் சி.சி.டி.வி. கேமராக்கள் பொய் சொல்லாது என்பதை நாம் அறிவோம்!
எப்படியோ இது மிகவும் இழிவான ஒரு செயல். நமது மலேசிய கலாச்சாரத்திற்கு எதிரானது. இதனை நாம் வளர விடக்கூடாது. நாம் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும். இது போன்ற செயல்கள் உலகரங்கில் நம்மைப் பார்த்து ஏளனமாக பார்க்கும்படியான ஒரு சூழலை நாமே ஏற்படுத்திக் கொண்டோம்!
இந்த வெள்ளம் நிறையவே சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தனிப்பட்ட மனிதர்களுக்கும் சரி, சிறு வியாபாரிகளுக்கும் சரி கடைகளை வைத்து வியாபாரம் செய்கிறவர்களுக்கும் சரி பெருத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும்,
எது நடந்தாலும் நனமைக்கே! இதுவும் கடந்து போகும்! இது தான் வாழ்க்கை! இது தான் பயணம்!
No comments:
Post a Comment