மேல் முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது போல முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வழக்கு ஒரு முடிவுக்கு வந்ததாக எடுத்துக் கொள்ளலாம்.
அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 21 கோடி அபராதமும் தீர்ப்பில் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த குற்றச்சாட்டிலிருந்து அதாவது சிறைக்குச் செல்லாமல் அவர் தப்பித்துக் கொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா என்று பார்த்தால் ஓரிரு வழிகள் தோன்றுகின்றன.
கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்வது ஒரு வாய்ப்பு. அந்த தீர்ப்பு வரும்வரை அவர் சிறைக்குப் போவதை ஒத்திப்போடலாம். அவர் மேல் முறையீடு செய்வது உறுதி அவர் சிறைக்குப் போவதை விரும்பமாட்டார். அவர் இன்னும் தன்னை ஹிரோ வாகக் காட்டிக்கொள்ளவே விரும்புவார். முடிந்தவரை இந்த பிரச்சனையை இழுத்துக் கொண்டு போவதே அவரின் நோக்கம்.
அடுத்த ஆண்டு கடைசியில் நாடாளுமன்றத் தேர்தல்வரை அவர் வெளியே இருப்பதைத்தான் விரும்பவார். தேர்தலில், ஒரு வேளை, அவரது கட்சி ஆட்சிக்கு வந்தால் அப்புறம் அவர் நினைப்பது நடந்துவிடும். சிறைக்கும் போக வேண்டாம், அபராதத்தையும் கட்ட வேண்டாம். நீதிமன்றத்தின் மீது அந்த அளவுக்கு அவருக்கு நம்பிக்கை உண்டு! 'நல்லதை' எதிர்பார்த்து அவர் காத்துக் கிடப்பார் என்றே நம்பலாம்!
மாமன்னரின் அரச மன்னிப்பு கிடைக்க அவர் மாமன்னரை நாடுவாரா என்று பார்த்தால் அது அவரின் தன்மானத்துக்கு இழுக்கு என்றே நினைப்பார். இவரும் கீழே இறங்கி வரமாட்டார்! மாமன்னரும் அந்த அளவுக்குக் கீழே இறங்குபவரும் அல்ல! மாமன்னர் கையூட்டுகளுக்குத் துணைப் போகுபவரும் அல்ல என்பதையும் நாம் அறிவோம்.
நஜிப் இப்போது எதிர்பார்ப்பதெல்லாம் அடுத்த பொதுத் தேர்தல் தான். அது தான் அவரைக் காப்பாற்றும் என உறுதியாக நம்புகிறார்! அதாவது அடுத்த ஆட்சி அம்னோ கட்சியின் ஆட்சியாக இருந்தால் தனக்குச் சாதகமாக அமையும் என்று அவர் நினைக்கிறார். அதுவே பக்கத்தான் கட்சியின் ஆட்சியாக இருந்தால் வேறு வழியில்லை! சிறைதான் ஒரே வழி!
என்ன செய்வது? "மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று! இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று!"
ஒரு காலக் கட்டத்தில் தன்னை யாரும் அசைக்கமுடியாது, இனி நம் வாழ்க்கை இப்படித்தான் என்று நினைத்தார் ஆனால் இறைவன் பாவம் இந்த மனிதர் என்று! எல்லாமே பறிபோனது!
இவ்வளவும் செய்த இறைவன் இனியும் பாராமல் இருப்பாரோ! நடப்பது நடக்கும் என நம்பலாம்!
No comments:
Post a Comment