Thursday 30 December 2021

தமிழ்ப்பள்ளிகள் சட்டபூர்வமானதே!

 

தாய்மொழிப் பள்ளிகளான தமிழ், சீன மொழிப்பள்ளிகள் மலேசிய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே இயங்குவதாக நீதிமன்றம் இன்று  தீர்ப்பளித்ததில்  நமக்கு மகிழ்ச்சியே.  நீதிபதி முகமட் நஸ்லான் இந்தத் தீர்ப்பை புதன் கிழமை அன்று  (29-12-2012) வழங்கினார்.

மூன்று மலாய் அமைப்புகள் சேர்ந்து தமிழ், சீன தாய்மொழிப் பள்ளிகள் மலேசிய அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அவைகள் தடை செய்யப்பட வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்திருந்தன.அதனை நீதிமன்றம் இன்று தள்ளுபடு செய்தது.

இந்த வழக்கைப்பற்றி சிந்திக்கும் போது இப்படி ஒரு வழக்கைத் தொடுக்க இந்த மலாய் அமைப்புகளுக்கு  என்ன அவசியம் வந்தது என்பது தான்.

சான்றுக்கு தமிழ்ப்பள்ளிகள் 200 ஆண்டுகளுக்கு மேலாக  நமது நாட்டில் இயங்கி வருகின்றன. சீனப்பள்ளிகளும் அதே போன்று தான் இயங்கி வருகின்றன.

இந்தப் பள்ளிகள் மூலம் நாட்டுக்கு என்ன கேடு வந்தது அல்லது தேசிய மொழிக்கு என்ன கேடு நேர்ந்தது என்று யாரும் எந்த ஒரு குறைபாடுகளையும் சொல்லி விட முடியாது. அல்லது இந்த பள்ளிகள் மூலம் நாட்டில் ஒற்றுமை குறைந்து போனதா - இப்படியெல்லாம் குறை சொல்ல ஒன்றுமில்லை.

தாய்மொழிப்பள்ளிகள் 200 ஆண்டுகளாக இயங்குகின்றன என்றாலே அதனால் நாட்டிற்கு ஒரு கெடுதலும் ஏற்படவில்லை என்பது தானே பொருள்? அது மட்டும் அல்ல. இன்றைய நிலையில் தமிழ்ப்பள்ளிகள் உலக அளவில் விஞ்ஞானப் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வாங்கிக் குவிக்கின்றன. அது நாட்டுக்குப் பெருமை தரும் விஷயம் தானே!

உலகில் பல நாடுகளில்  நான்கு, ஐந்து  மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கின்றன. அதனால் அந்த நாடுகள் எந்த வகையில் குறைந்து போயின? நமது அண்டை நாடான சிங்கப்பூரில் கூட நான்கு மொழிகள் அதிகாரபூர்வ மொழிகள் தான். இங்கிருந்து தான் அங்கே போய் வேலை செய்கிறார்கள்! அங்கிருந்து இங்கல்ல!

ஆனால் இந்த பிரச்சனை இத்தோடு முடிந்ததா அல்லது தொடருமா என்பது தெரியவில்லை. காரணம் இதெல்லாம் வீம்புக்காக செய்யப்படுகின்ற பிரச்சனைகள். வீம்பு செய்கிறவன் இப்படி ஏதாவது வம்படித்துக் கொண்டே இருப்பான். இது இல்லையென்றால் இன்னொன்று.  இந்த நீதிமன்றம் இல்லையென்றால் இன்னொரு நீதிமன்றம். அல்லது அரசியல் அழுத்தம். இப்படி எதையாவது தொடர்ந்து கொண்டே இருப்பார்கள்! இது தான் வம்பர்களின் வேலை!

எப்படியோ நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது! மகிழ்ச்சியே!

No comments:

Post a Comment