Saturday 11 December 2021

மாணவர்களுக்கு நன்னெறி கல்வி தேவை!

 

                                   மாணவன் ஒருவன் தாக்கப்படுகிறான்!

மாணவர்களிடையே கூத்தும் கும்மாளமும் சகஜம் தான். அதே போல  சண்டையும் சச்சரவும் அதுவும் சகஜம் தான்.

ஆனால் எல்லாவற்றுக்குமே ஓர் அளவு உண்டு.  அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகிவிடும்!

மேலே காண்பது அளவுக்கு மிஞ்சியது! கண்டிக்கத்தக்கது! காட்டுமிராண்டித்தனமானது! 

விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவன் ஒருவனை வைத்து அவனது அறையில் இருக்கும் மாணவர்கள் அனைவரும் குத்துச் சண்டை பழகுகிறார்கள்! அவனைப் பஞ்ச் பேக்காகப் பயன் படுத்துகிறார்கள்! மாணவன் அலறித் துடிக்கிறான்! அவன் அழுவதை அவனின் சக மாணவர்கள் பார்த்துச் சிரிக்கிறார்கள்! இது என்ன விளையாட்டு? நமக்குப் புரியவில்லை! 

இந்த அளவுக்கு அந்த மாணவர்கள் கொடூரமாக நடந்து கொள்வதற்கு  என்ன தான் காரணம்?

என்ன காரணமோ நமக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும்  தெரியும். இவர்களுக்கு ஒழுக்கம் சார்ந்த கல்வி எதுவும் இல்லை என்பது தான்!  சமயக் கல்வி என்பது அவர்களுக்கு ஒரு பாடம். அதில் தேர்ச்சி பெற்றால்  தேர்வுகளில் இன்னும் கொஞ்சம் அதிகம் புள்ளிகளைப் பெறுவார்கள்! அது பரிட்சையில்  தேர்ச்சி பெற ஒரு வழி அவ்வளவுதான்!

மாணவர்களுக்கு அதைவிட வேறு தேவைகளும் இருக்கின்றன. அதனைப் பள்ளியில் பயிலாவிட்டால் அவர்களின் எதிர்காலம் இப்படித்தான் அடிதடியில் முடியும்! அடிபட்ட மாணவனும் வருங்காலங்களில் வன்முறையைத் தான் கையெலெடுப்பான்! மற்றவர்களை வழிக்குக் கொண்டு வர வன்முறை ஒன்று தான் வழி என்பது தான்  பள்ளியில் அவன் படித்த பாடம்!

இதே போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கலாம். இது ஒன்றும்  முதல் முறை அல்ல என்பது மட்டும் உறுதி. ஏதோ, எதிர்பாராதவிதமாக,  இந்தத் தாக்குதல் வெளி உலகிற்குத் தெரிய வந்துவிட்டது!

இவர்கள் மாணவர்கள். யார் என்ன செய்ய முடியும்? அவர்களுக்குத் தண்டனை ஏதும் கொடுத்தால் அவர்களின் கல்வி பாதிக்கப்படும். கல்வி பாதிக்கப்பட்டால் அவர்கள் வன்முறையைக் கையிலெடுப்பதைத் தவிர  வேறு வழி அவர்களுக்குத் தெரியாது!

கற்றறிந்த கல்விமான்கள் நம்மிடையே இருக்கின்றனர் அவர்கள் தான்  எது போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைத் தெரிந்தவர்கள்!

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் என்கிற  பொதுக் கருத்து இதற்கு உதவாது! இவர்கள் மாணவர்கள், நல்லதே நடக்கும் என நம்புவோம்!

No comments:

Post a Comment